Tuesday, October 9, 2018

PESUM DEIVAM



 பேசும் தெய்வம்  J.K. SIVAN 




             எண்ணம்  ஈடேறியது

 தமிழ் நாட்டில் திருவையாறு - கும்ப கோணம் வழியில்   5 கிமீ.  தூரம் போனால்  ஈச்சங்குடி கிராமம் வரும். . காவிரியின் வடகரை.  இந்த ஊருக்கு அப்படியென்ன விசேஷம்?    வேறு என்ன பெருமை வேண்டும். மஹா பெரியவாளின் அம்மா மஹாலக்ஷ்மி பிறந்த ஊர்.  ஈச்சங்குடி நாகேஸ்வர சாஸ்திரியின் மகள்.


 வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும், 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. இவர்களின் இரண்டாவது புதல்வனுக்கு, சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை மனதுள் நினைத்து வைத்த பெயர் சுவாமிநாதன்.  ஞான பண்டிதனாக  பிற்காலத்தில் பரமாச்சாரியார் என்று அப்போது யாருக்கு தெரியும்.

மகா பெராவா  காஞ்சி சங்கரமட பீடாதிபதி என்று அறிந்த போது  தாய் மகிழ்ந்தாள். என்ன  ஒரு பாக்யம் என் மகனுக்கு.!

ஸ்வாமிநாதன் என்ற பெயர் மறைந்து 12வயது  சந்நியாசி  காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆனார். எல்லோருக்கும் சுலபமாக   ''காஞ்சி பெரியவா, மஹா பெரியவா''.

நாடு முழுதும் விஜய யாத்திரை சென்றார்.  

14.6.1932 அன்று  ஆந்திராவில் நகரியில் பெரியவா முகாம்.  அப்போது கும்பகோணத்திலிருந்து செயதி. பூர்வாஸ்ரம தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்ததை அறிந்தார்.

ஆச்சார்ய கடமையை நிறைவேற்ற,   நீராடிய சுவாமிகள், அந்தணர்களுக்குத் தானம் அளித்தார். 
பெரியவாளின் மனதுள் மெல்லிசாக  ஒரு எண்ணம்.  ‘ தாய் பிறந்த ஈச்சங்குடியில் உள்ள  கிரஹத்தை  ஒரு வேத பாடசாலையாக்கினால் என்ன?  எப்போதும் அங்கு வேதம் ஒலிக்கவேண்டும். எண்ணம் எப்போது செயலாகும்?

1993 பெரியவா பக்தர்  ஹரி  என்பவர்  பெங்களூரிலிருந்து காஞ்சி பெரியவாளை தரிசனம் பண்ண வந்தார்.

”ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு ஆசைப்படறே . நல்லது, பண்ணு!” -- பெரியவா அனுக்கிரஹம் கிடைத்ததில் ஹரிக்கு பரம ஆனந்தம். 

 ''ஸ்ரீகச்சபுரீஸ்வரர் ஸ்ரீகாருண்யவல்லியின் கருணை பற்றி நிறைய சொன்ன  பெரியவா  ''நான்  சின்ன வயசிலே அந்தக் கோயிலுக்குபோய்  உட்கார்ந்துண்டு தான்  வேதம் எல்லாம் கத்துண்டேன்.''

 சற்று நேரம் மௌனம்..... திடீரென்று   ஹரியிடம்   ''நீ  ஒரு  உபகாரம் பண்ண முடியுமோ?”
''பெரியவா  ஆக்கினை'' என்கிறார் ஹரி.

''என் பூர்வாஸ்ரம அம்மா பிறந்த ஊர் அது. அங்கே அவளுக்கு ஒரு பழைய வீடு இருக்கு.  அந்த இடத்தை ஒரு வேத பாடசாலையாக அமைக்கணும். எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்” என்றார் காஞ்சி மகான். 

 ”பெரியவா இது என் பாக்கியம்! என் பாக்கியம்!’ என்று சொல்லி, ஆனந்தத்தில்   ஹரி அழுதுவிட்டார்.

‘எத்தனையோ கோயில்களைப் புனரமைத்தவர் மகாபெரியவா! பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி, அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம், தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால்   61 வருஷங்களாக  தன எண்ணத்தை விருப்பத்தை   எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே!’ 

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும் வியந்துபோய்ப் பெரியவாளைப் பார்த்தனர்.

அப்புறம் கதை கத்திரிக்காய் காய்ச்சது தான்.  அந்த வீடு  உரியவரிடம் பேசி விலைக்கு வாங்கப்பட்டு பக்தர்களால்  வேத பாடசாலையாக  வேலைகள் ஆரம்பித்தன. 

சுமார் 61 வருஷ பெரியவாளின் ஆசை  ஒரே வருஷத்தில் நிறைவேறியது. வேத பாடசாலை கட்டி முடித்து   குரு பூஜை நடத்த பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார்  ஹரி. 
அன்று யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலிருந்தார். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல், ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்’ என்றும் சொல்லப் பட்டது.    ஈச்சங்குடி  .... ஹரி....சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார்.  ஹரியை  ஆசீர்வதித்தார். வேத பாடசாலை துவக்க பத்திரிகையை  வாங்கிப் படித்தவர், அதிலிருந்த  அப்பா அம்மா படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை  ஹரியிடம்  தந்தார். 

”இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.

ஈச்சங்குடி வேத பாடசாலை பெரியவா அனுகிரஹத்தால்  ஆசிர்வாதத்தால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால், வேத பாடசாலையில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழ்த் தளத்தில் வேத பாடசாலை, மேல் தளத்தில் பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரியவாளின் தாயாரால் வணங்கப் பட்டு, பெரியவாளின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஸ்ரீகச்சபுரீஸ்வரர் கோயில், அற்புதமாக  காட்சியளிக்கிறது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...