'உனக்கும் எனக்கும் பப்பாதி பானகம்''
சென்னையிலிருந்து விஜயவாடா ரயிலில் சென்றோம். விஜயவாடாவில் இறங்கியதும் பிரயாணிக்க 26 பேர் கொள்ளும் ஒரு மினி பஸ் ஏற்பாடு செய்திருந்தோம். பொழுது விடியுமுன்பே ரயில் எங்களை விஜயவாடா கொண்டு சேர்த்துவிட்டது. அங்கேயே ஒரு பிரயாணிகள் அறையில் ஒவ்வொருவராக குளித்து விடுவோம் என்று சிலர் யோசனை. ஏன் அருகே தானே கிருஷ்ணா நதி ஓடுகிறது அங்கேயே சென்று ஸ்னானம் செய்வோமே என்று எண்ணத்தை மாற்றிக்கொண்டு அந்த குளிர் விடிகாலையில் ஓ வென்று நிறைய நீரோடு ஓடிக்கொண்டிருந்த பிரம்மாண்ட கிருஷ்ணா நதியில் அரை இருட்டில் குளித்தோம். உடை மாற்றிக்கொண்டு சூடாக காப்பி. கிருஷ்ணா நதி ஜிலீர் ஸ்நானத்துக்கு பின்னர் சூடான காப்பியின் பெயர் தான் தேவாம்ருதம்.
கனக துர்கா கோவில் அங்கிருந்து பார்த்தாலே உச்சியில் தெரிந்தது. எல்லோரும் சென்றோம்.
வேதாத்ரி மற்றும் மங்களகிரி தல விசேஷத்தை முக்கூர் லஷ்மி நரசிம்மாச் சாரியாரின் விளக்கம் மூலம் அறிதல் தெளிவு/
“வேதாத்ரியிலே உள்ள பெருமாள் யோகானந்த நரசிம்மன். கிருஷ்ணா நதி தீரத்திலே பெரிய சாளக்கிராம மூர்த்தியாக அருள் பாலிக்கிறான்.உள்ளுக்குள்ளே அழகாக அமர்ந்த கோலம். இடையிலே ஒரு கத்தி. இந்த யோகானந்த நரசிம்ஹனை ஸேவிக்கப் போனால் அந்தக் கத்தியை எடுத்துக் கையிலே கொடுப்பார்கள். வாங்கிப் பார்க்கலாம். பகவானே பெரிய வைத்தியன் என்கிறது வேதம். முதல் வைத்தியன் அவன். மருந்தாகவும் இருக்கிறான்; மருத்துவனாகவும் அவனே. இங்கே கத்தி வைத்துக் கொண்டிருக்கிற எம்பெருமான் பெரிய `சர்ஜன்`; `ஆபரேஷன்` பண்ணுவதிலே பலே திறமைசாலி.
“ஆரோக்கியத்தைக் கொடுக்கு எம்பெருமான் அங்கே வேதாத்ரியிலே எழுந்தருளி யவன்.நாள் தோறும் எத்தனையோ பேர் அங்கே வேண்டுதலோடு பிரதஷிணம் பண்ணுகிறார்கள். வேதாத்ரியிலே நூறாவது யக்ஞம் நடந்தது.
“ஆரண மலைவாழ் ஆளரியே—உனை
காரணம் என நான் இனி அறிந்தேன்” என்ற பாடலானது, அங்கே வேதாத்ரியிலே இருந்தபோதுதான் அடியேன் வாக்கில் (முக்கூர் ஸ்வாமிகள்) வந்தது. ஆரணமலை என்று வேதாத்ரிக்கு ஒரு பெயர்.”
வேதாத்ரி கோயிலில் இருந்து, பல படிகள் இறங்கினால் கிருஷ்ணா நதி நீர் சிலுசிலு என்று காலைத் தழுவிச் செல்கிறது. இளஞ்சூரியக் கதிர்கள் நதி நீரில் பிரதிபலித்து வைரத்துண்டுகளாய் ஜொலிக்கிறது. அங்கே ஒரு பெரிய பாறை மீது திருமண் இட்டிருக்கிறார்கள். அதுவும் நரசிம்மனாம். புனிதமானது என்பதால் நீரில் அதனிடம் நீந்திச் செல்வதில்லை.
''அடே சின்னப்பயலே , நீ சொல்கிற அந்த நாராயணன் எங்குவேண்டுமானாலும் இருப்பவன் என்கிறாயே, அப்படியானால் இதோ இந்த தூணிலும் கூட இருக்கவேண்டுமே, இருக்கிறானா சொல் முட்டாளே!' --கொக்கரிக்கிறான் ஹிரண்யன் மகன் ப்ரஹலாதனிடம். துளியும் அந்த பாலகன் யோசிக்கவில்லை. பட் என்று பதில்.
''இதிலென்னப்பா சந்தேகம் ..... நிச்சயம் இந்த தூணிலும் கூட இருக்கிறான் நாராயணன். அவன் இல்லாத இடம் எது?'' என்கிறான் பிரஹலாதன்.
கம்பர் ராமாயணத்தில் ப்ரஹலாத சரித்ரத்தில் ஒரு மஹோன்னதனமான செய்யுளில் ''சாணிலும் உளன், ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட கோணிலும் உளன்…'' என்கிறார். அணுவை நூறுபகுதியாக பிளந்தால் அந்த ஒவ்வொரு சிறு தூளிலும் நாரயணன் இருக்கிறான் என்கிறார்.
அணுவைப் பிளந்து அதன் கோணில் உள்ள சக்தியை EARNEST RUTHERFORD 20ம் நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தார். கம்பர் எப்போதோ RUTHER FORD கொள்ளுத்தாத்தாவின் எள்ளுத்தாத்தாக்கள் பிறக்கும் முன்பே கண்டு பிடித்திருக்கிறார். நாம் ப்ரஹஸ்பதிகள். விஷயம் அறியாமல் தெறியாமல் வெள்ளைக்காரனுக்கு கை தட்டி மாலை போடுபவர்கள்.
அந்த நாராயணன், நரசிம்மனாக பார்க்குமிடமெங்கும் மங்கள கிரியில் நிறைந்து இருக்கிறான். நீரில் நரசிம்மன், சமதளத்தில் நரசிம்மன், குன்றின் மீது நரசிம்மன் அங்கிங்கெனாதடி எங்கெங்கு நோக்கினும் நரசிம்மர்கள்.
கிருஷ்ணா நதியின் குளிர்ந்த ஈரமான காற்றை ஸ்வாசித்தபடி மங்களகிரி யில் உள்ள கோயில் வரை வண்டி தூக்கிச் சென்றது. மலைமேலிருந்து விஜயவாடா நகரம் தூக்கத்திலிருந்து எழுந்து வேகமாக செயல் படுவதை ரசித்தேன். துவஜஸ்தம்பம் அருகே நெய் தீப விளக்கு. அதில் 365 திரிகள், வருஷம் பூரா, அத்தனையும் எரிகிறது. பானகச் சீட்டை இங்கே விற்கிறார்கள். இந்த மங்களகிரி நரசிம்மனைக் குறித்து முக்கூர் சுவாமிகள் என்ன சொல்கிறார் கேட்போமா:
“மங்களகிரி நரசிம்ஹன்தான் முதன்முதலில் யக்ஞம் பண்ணும்படி அடியேனை ஆக்ஞாபித்தான். அந்த ஆக்ஞைப்படி ஆஸ்திக சமாஜத்தில் முதல் யக்ஞம் நடந்தது. மங்களகிரி ஷேத்திரத்து எம்பெருமானும் கிருத யுகத்திலேயிருந்து இருக்கும்படியான எம்பெருமான் அவனுக்குப் பாலையே அந்த யுகத்தில் நைவேத்யம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். திரேதா யுகத்தில் இஷூசாரம் (கரும்புச் சாறு). துவாபர யுகத்திலே தேன். இந்த யுகத்திலே கற்கண்டுப்பானகமும் வெல்லப்பானகமும் நிவேதனம். அந்த எம்பெருமான் இருக்கிறானே, அவன் பாதியைச் சாப்பிடுவான்; பாதியை நமக்குக் கொடுப்பான். அவனுக்கு அப்படியொரு சக்தி. மலை மேலே ஜலம் கிடையாது. கீழேயிருந்துதான் காவடியிலே எடுத்துக் கொண்டு போக வேண்டும். அங்கே மேலே, பானகம் தயார் பண்ணக்கூடிய பெரிய கல் இருக்கிறது அந்தக் கல்லில் வைத்து வெல்லத்தை உடைப்பார்கள். அதை எடுத்து ஒரு கங்காளத்திலே கரைத்து, வழிய வழிய பகவானுக்கு நிவேதனம் பண்ணுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்…
ஒரு சங்கிலே பானகத்தை எடுத்து, வைகானச ஆகம ரீதியாய், புருஷசூக்தத்தைச் சொல்லி, அந்த நரசிம்ஹனின் `அலைத்த பேழ் வாயிலே’ சேர்க்கிறார் பட்டர்… அப்படிச் சேர்க்கிற பானகம் உள்ளே போய்க் கொண்டேயிருக்கும். கங்காளத்தில் பாதி ஆனவுடனேயே கலகலவென்று சப்தம் வரும். நரசிம்ஹன் பாதி பானகத்தை ஸ்வீகரிப்பான். அதன் பிறகு மீதி உள்ளே செல்லாமல் வெளியிலே வரும். அப்படி வருவதை சேஷமாக சங்கத்திலே எடுத்து, நம்மிடம் பிரசாதமாகக் கொடுத்து விடுவார்கள்.
சின்னஞ்சிறு குடத்திலே நைவேத்யம் கரைத்து வைத்தாலும் பாதி; பெரிய கங்காளத்திலே நிவேதனம் பண்ணினாலும் பாதி தான் ஸ்வீகரிப்பான் எம்பெருமான். “அர்தம் தாஸ்யாமி! பாதி கொடுக்கிறேன்; பாதி நான் எடுத்துக் கொள்கிறேன்” என்கிறான் பரமாத்மா. இன்றளவும் பானக சகதியாக இருக்கும்படியான அந்த இடத்திலே ஒரு ஈ எறும்பு கூட வராது. ஆகையினாலே பகவானுக்குப் பண்ண வேண்டிய பானகத்தில் ஒரு ஈ - எறும்பு இருக்காது. ஆனால், நிவேதனம் பண்ணி எடுத்து வந்த பிற்பாடு அதிலே ஈ – எறும்பு மொய்க்கும்! சாமானிய ஜந்துக்களெல்லாம் கூட “ இது நிவேதனம் பண்ணிய பதார்த்தம்; இது நிவேதனம் பண்ணாதது” என்று அறிந்து ஈடுபடுகிற ஒரு க்ஷேத்திரம் மங்களகிரி.”
“ அன்னமய கோசத்தில் சுத்தி ஏற்பட மங்களகிரி நரசிம்ஹனை தியானம் பண்ணவேண்டும். அடுத்து, பிராணமய கோசத்தில் சுத்தி ஏற்பட வேதாத்ரி நரசிம்ஹனை தியானம் பண்ண வேண்டும். மனோமய கோசத்தில் சுத்தி ஏற்பட மட்டபல்லி லஷ்மி நரசிம்ஹனை தியானம் பண்ண வேண்டும். விஞ்ஞான மயகோசத்தில் சுத்தி உண்டாக வாடபல்லி லஷ்மி நரசிம்மனைத் தியானம் பண்ண வேண்டும். ஆனந்த மயகோசத்தில் சுத்தி பெற கேதவரம் லஷ்மி நரசிம்ஹனைத் தியானம் பண்ண வேண்டும்.
இந்த ஐந்து க்ஷேத்திரங்களிலும் நரசிம்ஹனைத் தியானம் பண்ண, இந்த ஐந்து நிலைகளிலும் சுத்தி ஏற்படும்; தெளிந்த ஞானம் பிறக்கும். பகவானை அனுபவிக்
கும்படியான நிலையை நாம் அடைவோம்” என்கிறார் முக்கூர் லஷ்மி நரசிம்மாசாரியார்.
பானகம் எவ்வளவு பருகினாலும் திருப்தி ஏற்படவில்லை. கேட்க கேட்க தருகிறார்
கள். மங்களகிரியிலேயே தங்கிவிட ஆசைதான். மெட்ராஸில் குடும்பம் இருக்கிறதே. பானக ஆசையில் அங்கே தங்கியது தெரிந்தால் பிடித்துக்கொண்டு போய் கரும்புச் சாறாக பிழிந்து விடுவார்களே! நரசிம்மா!!!!
No comments:
Post a Comment