யாத்ரா விபரம் J.K SIVAN
எருமை வெட்டியில் ஈஸ்வர தரிசனம்
8.7.2018 அன்று நண்பர்களோடு வந்தவாசி செய்யாறு கோவில்களுக்கு செல்லும்போது எச்சூர் என்கிற கிராமத்தில் வாலீஸ்வரர் ஆலயம் சென்றதை பற்றி கடைசியாக எழுதியிருந்தேன். அங்கிருந்து சற்று தொலைவில் கிராம பாதையில் சென்றால் வந்தவாசி செல்லும் வழியில் எருமை வெட்டி என்ற கிராமம் பச்சை நிற பெயர்பலகையில் தனது பேரை சொல்லியது அருவருப்பாக இருந்தது. எருமையை வெட்டவேண்டாம். அப்படி வெட்டினாலும் அது பச்சை நிறமாக அந்த ஊர் பெயராக வேண்டாமே என்று தோன்றியது. காரை வேகமாக செலுத்தினோம். ஆனாலும் கார் மேலே வேகமாக போகமாட்டேன் என்று முரண்டு பிடித்தது. காரணம். அந்த பாதையில் ஒரு அற்புத பெயரை கண்டு படித்ததால். ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் என்ற பெயர்.
யாருமே இல்லாத இடம். எங்கும் மனித தலையே காணப்படவில்லை. எருமைகளையும் காணோம். ஓஹோ. எருமை மீது ஏறிக்கொண்டு எமதர்ம ராஜன் அங்கே மார்கண்டனை தேடிக்கொண்டு வந்திருக்கிறான். அவன் உயிர் தப்ப சிவனை அணைத்துக்கொண்டு மன்றாடுகிறான். சிவனின் மேல் எமனின் பாசக்கயிறு விழுந்தது. சிவன் கோபம் கொண்டு மறலியை காலால் உதைத்து மார்க்கண்டனை காப்பாற்றுகிறார். கால சம்ஹார மூர்த்தி என்று எருமையை ஒட்டி வந்த யமனை வீழ்த்தினார் என்ற சமாச்சாரம் திரிந்து எருமை வெட்டியாக ஆகியிருக்கலாம்.
கோவில் திறந்து இருந்தது. உள்ளே அமைதி. நிசப்தம். சிறிய கோவில் மேலே ஒரு அஸ்பேஸ்ட்டாஸ் கூரைக்குள் நந்திகேஸ்வரர். சிறிய சிவன் சந்நிதி. அம்பாள் அபிராமி அழகாக காட்சி அளித்தாள் . மன நிறைவோடு பெயர் கசப்போடு அங்கிருந்து சென்றோம் . எவ்வளவோ நல்ல பெயர்களை மாற்றிவிடுகிறார்கள். கொலைகாரன் பேட்டை எருமை வெட்டி போன்ற பெயர்கள் இன்னும் ஏன்?
No comments:
Post a Comment