இன்னும் ஆறுநாளில் டமால் டுமீல் எங்கும் காதை கிழிக்கும் சப்தம் கேட்கப்போகிறதோ? அல்லது உச்ச கோர்ட்டை விட சக்தி வாய்ந்த வருணதேவன் எண்ணத்தில் மண்ணை போடுவானோ, இல்லை மழையைத் தெளிப்பானோ? பட்டாசு கிடக்கட்டும். வெடிக்காவிட்டால் வெத்து வேட்டு . நமக்கு தெரிந்த சில மனிதர்கள் போல.
ஆனால் தீபாவளிக்கு கங்கையோடு நிறைய பரிச்சயம் உண்டு. தீபாவளி அன்றைக்கு ஒரு நாள் மட்டும் எல்லா வெந்நீரிலும் கூட அருணோதயதிலிருந்து ஸூர்யோதயம் வரை ஒரு முஹூர்த்தம் – அதாவது இரண்டு நாழிகை – கங்கை இருக்கிறாள்.
தீபாவளி அன்று ''என்ன சார் கங்கா ஸ்னானம் ஆயிற்றா?'' என்று கார்பொரேஷன் குழாயில் குளித்தவனை கேட்டாலும் அது சரி தான். பைத்தியக்காரத்தனம் அல்ல.
தீபாவளியன்று முதலில் நாம் அருணோதயத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு கங்கா ஸ்மரணத்தோடு வெந்நீர் ஸ்நானம் பண்ண வேண்டும். அப்புறம் ஸூர்யோதயமானபின், ஆனால் ஆறு நாழிகைக்குள், பச்சை ஜலத்தில் இன்னொரு ஸ்நானம் செய்ய வேண்டும்.
இந்த ஸ்நானத்தின் போது துலா காவேரியை ஸ்மரித்துக்கொண்டு பண்ணவேண்டும். முதல் ஸ்நானத்தில் நரகாஸுரன், பூமாதேவி, ஸத்யபாமா, கிருஷ்ணர் எல்லார் நினைவும் வரும். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேச்வரன் நினைவும் வந்துவிடும்.
என் அம்மா எங்களை உட்காரவைத்து தொடையில் சுடச்சுட மிளகாய் பழம் போட்டு காய்ச்சிய நல்லெண்ணையை ''அஸ்வத்தாமா, பலி, வியாச..... என்று ஏழு சிரஞ்சீவிகளை பேரை சொல்லி நாங்களும் அப்படி சிரஞ்சீவியாக இருக்கவேண்டும் என்று ஸ்லோகம் சொல்லி ஏழு புள்ளி வைத்து பிறகு நெற்றி உச்சித் தலையில் தேய்ப்பாள் . பின்னால் கொல்லைப்புறத்தில் விறகு மூட்டி மண் அடுப்பு பெரியதாக இருக்கும் அதன் மூன்று முண்டுகளில் அலுமினியம் தவளை ஒன்று வாயைத் திறந்து நிறைய தண்ணீர் குடித்து பாதிக்கு மேல் கொதித்துக் கொண்டு இருக்கும். பக்கத்தில் ஒரு துருப்பிடிக்காத கனமான வாளி . அதில் கிணற்று நீர் பாதி ரொம்பி இருக்கும். சுடசுட வென்னீரை பித்தளை சொம்பினால் மொண்டு பக்கெட்டில் விளாவி, ஒவ்வொருத்தருக்கும் ஸ்நானம். துண்டை வைத்துக்கொண்டு அப்பா காத்திருப்பார். எல்லோர் தலையும் தண்ணீரில்லாமல் துடைத்து உள்ளே அழைத்துக் கொண்டு போவார். சுவாமி ரூமில் பலகையில் புது வஸ்திரங்கள். ஸ்கூலுக்கு அந்த வருஷம் போட்டுக்கொண்டு போக புது காக்கி நிஜார், கட்டம் போட்ட அரைக்கை சட்டை. மூன்று பேருக்கும் ஒரே அளவு. பெரியண்ணா சைஸ். அப்போது தான் நாங்கள் வளர்ந்தால் புதிதாக தைக்கவேண்டாம். அவனுக்கு சரியாக இருக்கும் சட்டை எங்களுக்கு தொள தொளவென்று ஜிப்பா போல் இருக்கும்.
தீபாவளி அன்று இப்படி இப்படி கங்கா ஸ்நானம் பண்ணியவர்களுக்கு நரக பயமும், அபமிருத்யுவும் (அகால மரணம், கோர மரணம்) ரோகங்களும் ஏற்படாமலிருக்க வேண்டும் என்று கூடுதலாக நம்மெல்லோருக்காகவும் வரம் வாங்கித் தந்தாவள் பூமாதேவி. நரகாசூர ( பூமாதேவி மகன் என்பதால் பௌமாசுரன்)னுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தாய் .Mother Earth. பசு, பூமி, வேதம் மூன்றுமே அனைவருக்கும் தாய்.
பூமாதேவியின் மகன் பௌமாசுரன். தவம் செய்து வரம் பெற்றான். என்ன வரம். தனது தாயைத்தவிர எவராலும் அவனைக் கொல்ல முடியாது. அவனது அக்கிரமங்கள் அதிகமாகி தேவர்கள் பூமியில் அனைவரின் வேண்டுதலுக்கு இசைந்து கிருஷ்ணன் சத்யபாமா (பூமா தேவியின் அவதாரம்) உதவியோடு அந்த அசுரனை கொன்ற நாள் தீபாவளி, நரகாசுரன் என்றும் அவனுக்கு பெயர். அவன் மாண்ட நாள் நரக சதுர்த்தசியை பூமியில் அனைவரும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும். அன்று எந்த நீரில் குளித்தாலும் அது கங்கை நீர் என்று நமக்கு அருள் செய்தவன் அந்த அசுரன். அதனால் தான் குளிக்காதவனை தீவுளிக்கு தீவுளி குளிப்பவன் என்கிறோம்.
கங்கையின் சகோதரன் கீதை, கங்கைக்கும் காவேரிக்கும் சம்பந்தம் போன்ற ருசிகர விஷயங்களை தொடர்ந்து சொல்கிறேன்.
No comments:
Post a Comment