Thursday, October 11, 2018

PESUM THEYVAM

பேசும் தெய்வ

ம் J.K. SIVAN

மஹா பெரியவாளின் ஒரு பாசத்தாய்.

ஒரு ஆச்சர்யத்தை ஞாபகப்படுத்துகிறேன். மஹா பெரியவா விக்ரஹத்தை சுவாமிமலையில் அழகாக தயார் செய்து ஜாக்கிரதையாக காஞ்சிபுரம் கொண்டு போகும் வழியில் பண்ருட்டி அருகே 58வது பீடாதிபதி போதேந்திர ஆசார்ய ஸ்வாமிகள் அதிஷ்டானம் வடவம்பலம் என்கிற ஊரில் இருக்கிறபடியால் அங்கே வண்டியை நிறுத்தி போதேந்திராச்சார்யாள் அதிஷ்டானத்தில் மகா பெரியவா சிலைக்கு ஆரத்தி காட்ட எண்ணம். இங்கே தான் போதேந்திராள் சமாதியடைந்தார் என்று அங்கே அதிஷ்டானம் ஸ்தாபித்ததே மஹா பெரியவா தானே.

மாலை ஆறு மணி ஆகிவிட்டது. ஆரத்தி காட்டியவுடன் ஏனோ வண்டி நகரவில்லை. ஒரு டிராக்டர் வைத்து இழுத்து பார்த்தும் ஒரு கோளாறும் இல்லாத இதுவரை ஓடிய வண்டி நகரவில்லையே ஏன்? வேறு வழியில்லை அன்றிரவு அங்கே தங்கிவிட்டு காலை வேறு ஏதாவது ஏற்பாடு பண்ணவேண்டும் என தீர்மானித்தார்கள். பொழுது விடிந்தது. வண்டியை கிளப்பி பார்த்தார்கள். ஒரு சிறு தள்ளு தள்ளி விட்டார்கள் ஜிவ்வென்று வண்டி கிளம்பிவிட்டது. எப்படி? மஹா பெரியவா அன்றிரவு அங்கே தங்க நினைத்துவிட்டால் மற்றவர்கள் என்ன செய்ய முடியும். வண்டி எப்படி நகரும்?
+++
மகா பெரியவா ஒரு தடவை எசையனூர் சென்றபோது என்ன நடந்தது தெரியுமா? ஸ்ரீ மடம் மானேஜர் ''பெரியவா நாம் ஆற்காடு சீக்கிரம் போகவேண்டும். நிறைய பக்தர்களுக்கு தரிசனம் ஏற்பாடு ஆகியிருக்கிறது. காத்துக் கொண்டிருப்பார்கள்'' என்றார்.

''முதல்லே போற வழியிலே இருக்கிற கிராமத்திலே எல்லாரையும் பார்த்து ஆசீர்வாதம் பண்ணிட்டு அப்புறம் ஆற்காடு போவோம்'' என்கிறார் பெரியவா.

ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயன் எழுதிய “பக்த சாம்ராஜ்யம்” புத்தகத்திலிருந்து சில அற்புத விஷயம் பரிமாறுகிறேன்.

தசரதர் தன்னுடைய முற்பிறவியில் ரிஷி ஸ்வாயம்புவமனு. ஸ்ரீமன் நாராயணன் அந்த ரிஷியின் முன் தோன்றி ''உங்களுடைய அடுத்த பிறவியில் நானே உங்களுக்கு மகனாக பிறவி எடுப்பேன்'' என்கிறார். (ஆகவே தான் தசரதர் மகன் ராமனாக அவதரித்தார் நாராயணன்).

நாராயணனிடம் ஸ்வாயம்புவமனு '' பகவானே எனக்கு ஒரு வரம் தரவேண்டும்.''

'' ஆஹா, என்ன வரம் வேண்டுமோ அதைக் கேளுங்கள்''

“சுவாமி! என்னை யார் எப்படிவேண்டுமானாலும் , பைத்தியக்காரன் என்று கூட சொல்லட்டும், தாங்கள் எனக்கு பிள்ளையாக பிறக்கும் போது ஒரு தகப்பனுக்கு ஒரு பிள்ளையிடம் எவ்வித அன்பு இருக்க வேண்டுமோ, அது மட்டும் எனக்கு இருந்தால் அதுவே போதும்''

“அப்படியே” என நாராயணன் அனுக்ரஹித்தார். அப்புறம் என்ன, தசரதன் ராமனிடம் எவ்வளவு பாசம் வைத்தார், அவன் பிரிவு தாங்காமல் எப்படி மரணமடைந்தார் என்பது தான் நமக்கு தெரியுமே.

இதை எதற்கு நினைவு படுத்துகிறேன் என்றால் ஸ்ரீ மஹா பெரியவாளிடம் பரம பக்தியும் பிள்ளைப் பாசமும் அபரிமிதமாக கொண்ட பெருமை ஒரு பெண்மணிக்கு உண்டு. அவள் தான் எசையனூர் கோகிலா பாட்டி.

கோகிலாம்பாள் அம்மாள் தென்னாற்காடு ஜில்லா, எசையனூர் கிராமத்தில் பணக்கார குடும்பம் ஒன்றில் வாழ்க்கைப்பட்டு, இளமையில் கணவரையும் குழந்தைகளையும் இழந்தவள். ஞான பக்தி வைராக்யம் மட்டுமே அவளிடம் இருந்தது. காஞ்சி மட பரமாசார்யாளே கதி என்று சரணாகதி அடைந்தவள்.

“பரமாச்சார்யாள் ஞானி, தெய்வ புருஷர்” என்ற மரியாதையும் பக்தியும் ஒரு பக்கம். கொள்ளை அன்பும், பாசமும், பரிவும் மறுபக்கம் அவளுக்கு.

“ஏண்டா, ராமமூர்த்தி! பெரியவா இன்னிக்கிச் சரியாக பிட்சை பண்ணினாளோடா? ஏன் தான் இந்த ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் சேர்ந்தாப்போல வரதோ? தசமி ஆரம்பிச்சு நாலு நாளைக்குப் பட்டினியா? இப்படிக் காய்ஞ்சா அந்த உடம்பு என்னத்துக்குடா ஆகும்?”

“மேலூர் மாமா! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ. நீங்க சொன்னாத்தான் பெரியவா கேட்பா! இப்படி ஒரே திரியாகக் கபம் கட்டிண்டிருக்கே! இருமக்கூட முடியாமல் தவிக்கிறாரே! வென்னீர் போட்டுக் கொடுத்து ஸ்நானம் பண்ணச் சொல்லுங்கோ .”

“ஏண்டா, விஸ்வநாதா! பெரியவா கொஞ்ச நேரம் தூங்கட்டுமேடா! எதற்கடா அவர்கிட்டே பேச்சுக் கொடுத்திண் டிருக்கேள்?”

“இல்லே பாட்டி! பெரியவா தான் பேசறா. நாங்க கேட்டிண்டிருக்கோம்.”

“ஏண்டாப்பா! நெய்வேத்யக் கட்டிலே இத்தனை பேர் இருக்கேளே? பெரியவாளை ஸ்நானத்துக்குக் கூப்பிடுங்களேன். காலா காலத்திலே பூஜை செய்து பிட்சை பண்ணட்டுமே? நேரமாறுதே உடம்பு வாடுமே.''

பெரியவாளை மேனாவில் வைத்து தூக்கிச் செல்லும் சவாரிகாரர்களிடம் பாட்டி விறுவிறுவென்று
போவாள்.

“நீங்கள் எல்லோரும் புண்யாத்மாக்கள். நன்னா இருங்கோ! இந்தாங்கோ! கொஞ்சம் பட்சணம் கொண்டு வந்திருக்கேன். எல்லாருமாச் சாப்பிடுங்கோ! (டின் நிறைய பட்சணம்) பாவம் உங்களுக்கு நேரம் காலமே கிடையாது. பெரியவா எப்ப கிளம்பராளோ? தயாரா இருக்கணும். வழியிலே ஜாக்ரதையாப் பார்த்துக் கொள்ளுங்கோ! இருட்டிலே கண்ட இடத்திலே மரத்தடியிலே படுத்துக்கிறேன்னு ஆரம்பிச்சுடுவா பெரியவா. தீவட்டியை எடுத்துண்டு சுத்திவரப் பாருங்கோ. பாம்பு, பல்லி இருக்கப்போறது. கவனமா இருங்கோடாப்பா! உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு.” என்பாள்.

புதுப் பெரியவர்கள் பீடத்திற்கு வந்த பிறகு பாட்டிக்கு, ஒரு அலாதித் தெம்பு. அவர்களிடம் பரமாசார்யாளைப் பற்றி, தான் படும் கவலையெல்லாம் மனம் விட்டு கொட்டுவாள். அவர்களும் அவளுடைய அளப்பரிய பக்தியை நினைத்துக் கண்ணீர் மல்கச் சிரித்துக் கொண்டே கேட்பார்கள்.

பரமாசார்யாளுடன் காசி யாத்திரை சென்றிருந்த பாட்டி, தான் கண்ட அனுபவத்தை சொன்னாள்:

“நான் சொல்றதை நன்னா கேட்டுக்கோ! பெரியவா அப்படியே தண்டத்தை தோளோடு அணைச்சுண்டு உட்கார்ந்திண்டு கண்ணை மூடிக்கிறா. திடீர்னு சந்திரக்கலை தெரியறது. கங்கை தெரியறாள். ஜடை தெரியறது. பளபளன்னு நெத்தி. சாந்தமாச் சிரிச்ச முகம். அப்படியே தேவேந்திரன் தங்கத் தாமரைகளாக் கொண்டு வந்து தலைலே கொட்டறான். நான் கண்ணாலே பார்த்தேன். எல்லாரும் சொல்றா, மாளவ்யா புஷ்பாபிஷேகம் பண்ணினார்னு.”

பழைய மேனேஜர் விஸ்வநாத அய்யர்:

“பெரியவா பூஜை செய்யற அம்பாளே எசையனூர்ப் பாட்டியாக வந்து கண்காணிக்கிறாள்''
பாட்டியிடம் அவர் '''பாட்டி , நிர்வாகத்திலே குற்றம் குறை இருந்தால் என் கிட்ட சொல்லுங்கோ!” என பவ்யமாக கேட்பார்.

மடத்து சிப்பந்திகள் அனைவருமே பாட்டிக்குப் பிள்ளைகள். அவர்களுக்குப் பல வித உபகாரம் செய்வாள். ஊறுகாய், பட்சணம் என்று பணத்தால் ஆக முடியாத பல உபசாரங்களைப் பரிவோடு செய்வாள்.

“எசையனூர்ப் பாட்டி எதாவது சொல்லப் போறா. ஜாக்ரதையாக இருங்கோ!” என்று பரமாசார்யாளே தமக்கு சிசுருக்ஷை செய்பவர்களைச் சிரித்துக் கொண்டே எச்ச்சரிப்பார்களாம்.

ஒரு தடவை பரமாச்சார்யாள் மயிலை ஸம்ஸ்கிருதக் கல்லூரியில் முகாம் போட்டிருந்தா. 9.1.1959 அன்று பெரியவாளுக்கு ஒரு செய்தி வந்தது: “எசையனூர்ப் பாட்டியை மாடு முட்டி காலமானாள்.” தொடர்ந்து மூன்று நாட்கள் மஹா பெரியவா மௌனம்.

“ ஒரு அம்மா தன் பிள்ளைக்கு செய்வது போல மஹா பெரியவாளுக்கு திருஷ்டி கழிப்பா எசையனுர் பாட்டி,

பெரியவா பாட்டியிடம் “நீ இங்க கைங்கர்யம் பண்றவாளுக்கு காத்தாலே என்ன ஆஹாரம் கொடுப்பே?

''இட்லி''

‘ஒ இட்லி போட்டு காபி கொடுப்பியோ? அப்பறம் சாயங்காலம் உப்புமா கிளறி காப்பி டீ போட்டு கொடுப்பியோ?'”

''அதுக்கென்ன பண்ணிட்டா போச்சு''



மஹா பெரியவாளிடத்தில் ஒரு தாயின் கருணை எசையனூர் கோகிலா பாட்டியிடம் இருந்தது மடத்தில் அவளுக்கு ஒரு தனி கௌரவத்தை அளித்தது. எவ்வளவு சிறந்த புண்யாத்மா பாட்டி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...