1735 ம் வருஷம் மார்கழி மாதம் செங்கம் ஜவ்வாது மலைக்கு பக்கம் சென்னசமுத்ரம் என்கிற கிராமத்தில் கோபால பிள்ளை , ஆயி அம்மாள் என்பவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அருள்மொழி என்று பெயர் வைத்தார்கள். தாய் மாமன் தாண்டவன் பிள்ளைக்கு தான் அவள் என்று நிச்சயம் பண்ணினார்கள். அந்த பெண் மனதில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் குடிகொண்டுவிட்டதால் வேறு யாருக்கும் இடமில்லை. தாண்டவராயனுக்கு இடம் கொடுத்ததால் அவள் மனதில் தாண்டவன் மாமனுக்கு இடமில்லை. தாய் தந்தை எண்ணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாள் குறித்தாகி விட்டது திருமணம் முடிந்தது. தாண்டவனிடம் அவள் '' ஐயா என் மனம் அருணாச்சலேஸ்வரர் பால் இரவும் பகலும் சென்றதால் மணவாழ்க்கையில் எண்ணம் போகவில்லை. எல்லோரும் போல கணவன் மனைவி வாழ்க்கை நடக்க வழியில்லை'' என்றாள் . வார்த்தைகள் வலுத்தது. அருள்மொழி வீட்டை விட்டு வெளியேறி ஒரு மைல் தரத்தில் கோமுட்டி குளத்தில் இறங்கிவிட்டாள். தேடினார்கள் கிடைக்கவில்லை. தானே மூன்றாம் நாள் வெளியே வந்தவள் ஆச்சர்யமாக மந்திரங்கள் ஜபித்தாள் . மண்ணை வாரி அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்தாள் . அவர்கள் கை நிறைய அவல் பொரி. காட்டுத்தீயாகி செயதி பறந்து அந்த பெண்ணை ஒரு சித்தராக வணங்கினார்கள். நெற்றியில் பளீரென்று வெண்ணீறு, கண்களில் அனல். வார்த்தைகள் புரிபடாமல் மந்திரச்சொல். அருள்மொழி பராசக்தி என்று பேர் பெற்றாள்.
அண்ணாமலையார் கோவில் அடைக்கலம் தந்தது. தினமும் கிரிவலம். ஈசன் தொண்டு அவள் வாழ்க்கையானது.
பராசக்தி கைலாசத்தில் ஒருநாள் பரமேஸ்வரன் கண்களை விளையாட்டாக மூட, சூரிய சந்திரர்கள் ஒளிவீசாததால் பிரபஞ்சம் இருளில் மூழ்க சிவன் சபிக்கிறார்.'''பூமியில் ரெண்டு பிறவி எடுத்து மீண்டு வா'. அந்த ரெண்டு பிறவியும் சென்ன சமுத்திரத்தில் நிகழ்ந்தது.
முதல் பிறவி ஆதியன் என்ற ஒரு விவசாயிக்கும் அவர் மனைவி கோதாவரிக்கும் வளர்ப்பு குழந்தை. சிறந்த சிவபக்தர்கள் அந்த தம்பதியர். வெகுநாள் குழந்தை பாக்யம் இல்லை. சிவனிடம் வேண்டி ''ஆதியா இங்கிருந்து வடக்கே ஒரு பெரிய குளத்தங்கரையில் ஒரு கல் மேடை இருக்கும். அதில் உன் குழந்தை காத்திருக்கிறது என்று சிவன் அருள '' அங்கே அந்த பெண் கிடைத்தாள். சென்னம்மா என்று பெயர் வைத்தார்கள். அந்த ஊர் சென்னசமுத்ரம் என்று பெயர் பெற்றது.
சென்னம்மா வளர்ந்தாள். சிவபக்தையானாள். தினமும் சிவபூஜை. ஜபம். செங்கம் அப்போது ஒரு நவாப் ஆளுகையில் இருந்தது. சுல்தானுக்கு விஷயம் எட்டி அவன் சென்னம்மாவை பார்க்க ஆவல் கொண்டான். அவள் பெற்றோர்களை அவளோடு வர ஆணையிட்டான். ''இந்த பெண்ணை என்னிடம் கொடு. அவளை ராணியாக்குகிறேன் '' என்றான் நவாப்.
''நீ என்னம்மா சொல்கிறாய்?"' என்று சென்னம்மாவை கேட்டபோது ''இன்றிலிருந்து எட்டாம் நாள் நீங்கள் இங்கே வாருங்கள்'' என்றாள் நவாபிடம் அந்த பெண் குழந்தை.
ஏழாம் நாளே இரவோடு இரவாக அந்த பெண்ணை ஒரு படகில் ஏற்றி வெளியே அனுப்பிவிட்டார்கள். நவாப் கையில் அவள் கிடைக்கக்கூடாது என்று எண்ணம். படகு நீரில் மிதந்து நீப்பத்துறை என்ற இடத்தில் கரை சேர்ந்தது. அந்த ஊரில் ஒரு துறவி இருந்தார். வெள்ளியப்ப செட்டியார் என்று பெயர். இந்த குழந்தை தெய்வீகமானவள். இங்கே ஒரு குகை இருக்கிறது. அதில் சப்த கன்னிகைகள் ஜீவனோடு இருக்கிறார்கள் அவர்களோடு இவள் இருக்கட்டும். அவர்கள் இவளை பாதுகாப்பார்கள் என்கிறார் துறவி. அந்த பெண் குகைக்குள் செல்கிறாள்.
அம்மணி அம்மன் சரிதம் தொடரும்..
No comments:
Post a Comment