Monday, October 29, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்      J.K. SIVAN 
மஹா பாரதம் 

     
உங்கள் எலும்பு தான் வேண்டும் 
                                    
நாம்  எங்காவது ஒரு ஊர் சென்றோமானால்  அங்கே சென்றதை,  பார்த்ததை எல்லாம் மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வோம்.   சிலர் அப்படியா   என்று சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்வார்கள். 

சிலர்  '' ஓ  ஓஹோ அங்கே   சென்றாயா,  இதை ப்பார்த்தாயா   அதைப் பார்க்கவில்லையா? என்று  நாம் பார்க்காத அற்புதங்களை சொல்வார்கள்.   அடடா  அவ்வளவு தூரம்   ,சென்றோமே அதை எல்லாம் பார்க்கவில்லையே  என்று ஒரு ஏக்கம் நமது மகிழ்ச்சியை தின்று விடும்.  நாமும்  அந்த அதிசயங்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.  அந்த அதிசயம் நாம் சென்ற இடத்தில்  இருக்கிறது என்பது தெரியாமல் இருக்கலாம். என்ன செய்வது. அடுத்து முறை பார்த்துக்கொள்வோம் என்று தலையை சொரிந்து கொள்ளவேண்டியது தான். 

அதற்காகத்தான் எங்காவது செல்லுமுன்பு  அந்த இடததை பற்றி நன்றாக அறிந்துகொண்டு, அங்கே என்ன வெல்லாம் நாம் பார்க்க வேண்டும், செய்ய வேண்டும் என்று ஒரு துண்டு காகிதத்திலாவது நமது பையில் இருக்க வேண்டும்.  தெரியவில்லை என்றால் அந்தந்த ஊரில் இருப்பவர்களிடமாவது கேட்டு தெரிந்து கொண்டு சென்று பார்க்கவேண்டும். செய்யவேண்டியதை செய்ய வேண்டும்.

யுதிஷ்டிரனுக்கு அந்த கவலையே இல்லை.  ரிஷி  லோமசர் சிறந்த டூரிஸ்ட் கைட் . எல்லா விஷயமும் விரல் நுனியில் வைத்திருந்தவர். அவர் யுதிஷ்டிரனுக்கு ஒவ்வொரு இடம் செல்லும்போதும்  அங்கே சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயம் எல்லாம் சொல்கிறார்.
            
''யுதிஷ்டிரா, இது தான் பிருகு தீர்த்தம் பரசு ராமர் ஸ்நானம் செய்த இடம். இதில் ஸ்நானம் செய்.''   லோமசர் ஆங்காங்கே ஒவ்வொரு இடத்தையும் இவ்வாறு விளக்குகிறார். யுதிஷ்டிரன்  ஆர்வமாக அவரை நிறைய   கேள்வி கேட்டு துளைத்து எடுக்கிறான்.

லோமசர் ரெண்டு ராமர்கள் கதையை யுதிஷ்டிரனுக்கு சொல்கிறார்;

''விஷ்ணு, ராவண சம்ஹாரத்திற்காக தசரதன் புத்திரன் ராமனாக அவதாரம் செய்தார். பிருகு வம்ச பரசுராமன் க்ஷத்ரியர்களை வதம் செய்ய விரதம் பூண்டவன். ராமன் மிதிலையில் சிவ தனுசுவை ஒடித்து பெருமை பெற்றது பரசுராமனுக்கு தெரிகிறது. பரசுராமனிடம் சக்தி வாய்ந்த  ஒரு விஷ்ணு தனுசு வைத்திருப்பான். அதை எவராலும் எடுத்து நாண் மீட்டி அம்பு தொடுக்க முடியாது. மிதிலையிலிருந்து விஸ்வாமித்ரரோடு அயோத்தி திரும்பிக் கொண்டிருந்த ராம லக்ஷ்மணர்களை  பரசுராமன் வழியில் சந்திக்கிறான். பேச்சு தொடர்கிறது.

''நில்  யார் நீ?

''நமஸ்காரம்  முனிவரே,  நான்   அயோத்தி நகர ராஜா  தசரதனின்  மகன்  ராமன்.''

''ஓஹோ  நீ தான் அந்த  ராமனா?  ஏதோ ஒரு பழைய வில்லை ஒடித்து பெருமைப் படாதே. உன்னால் என்  கரத்தில் உள்ள  இந்த தனுசுவை நிலை நிறுத்தி நாண் ஏற்றி இழுத்து வளைத்து அம்பு தொடுக்க முடியுமா? முடிந்தால் நீ உண்மையிலேயே  ஒரு வீரன் என்று  உன் வீரத்தை ஒப்புக்கொள்வேன்.'' என்கிறான் பரசுராமன். .

''இஷ்க்வாகு வம்சத்தினர் தமது வீரத்தை பற்றி வெளியே டம்பமாக பேசும் வழக்கமில்லை'' என்கிறார் ராமர்.
''சாமர்த்திய பேச்சால் என்ன பயன். இந்தா இதை உன்னால் தூக்கவாவது முடிகிறதா பாரேன்'' என்று தன்னுடைய விஷ்ணு தனுசுவை நீட்டுகிறான் பரசுராமன்.. ராமருக்கு சிரிப்பும் கோபமும் வருகிறது.  அட   பரசுராமனுக்கு பாடம் கற்பிக்க நினைக்கிறார். அவனது வில்லை அலட்சியமாக பிடுங்கி நாண் ஏற்றுகிறார்.

அதன் சப்தம் எங்கும் எதிரொலிக்கிறது. ''என்ன  மகரிஷி பரசுராமரே , இப்போது என்ன செய்யட்டும்.   அம்பை  ஒரு முறை  செலுத்தினால் அதற்கு ஒரு இரை கண்டிப்பாக  வேண்டும்''.

ஜமதக்னி புத்திரன் பரசுராமன் ஒரு அம்பை எடுத்து கொடுக்கிறான். இதை காதுவரை இழுத்து வளைத்து வில்லில் பொருத்து''
அவ்வாறே செய்கிறார் ராமர்.    பரசுராமன் திகைத்து நிற்கிறான். அவனுக்கு ராமர் தனது விஷ்ணு ரூபத்தை காட்டினவுடன் வணங்கி கர்வம் நீங்கி தவம் செய்ய மகேந்திர மலை நோக்கி செல்கிறான் பரசுராமன். அவனுடைய சக்தி பூராவும் ராமருக்கு வந்து சேருகிறது.

 யுதிஷ்டிரா இதையும் கேள்

க்ருத யுகத்தில் சில ராக்ஷசர்கள் பலம் மிக்க வ்ரித்ராசுரன் தலைமையில் ஆயுதங்களோடு, இந்திரனையும் தேவர்களையும் எதிர்த்தனர். தேவர்கள் இந்திரனோடு பிரம்மாவை அணுகி வணங்குகிறார்கள். ''இந்திரா உனது கவலை, பொறுப்பு எல்லாமே எனக்கு புரிகிறது. ததீஸி  எனும் முனிவரிடம் செல். அவரை வணங்கி வரம் கேள். அவர் அளித்த வரத்தினால் அவரது எலும்புகளைக் கேள். அவர் கொடுப்பார். அவரது எலும்புகளால் ஒரு ஆயுதம் செய். வஜ்ராயுதம் என்று அதற்கு பெயர். ஆறு பக்கங்கள்  தாக்கும் சக்தி அதற்குண்டு. அதன் மூலமாகத்தான் நீ வ்ரித்தாசுரனை வதம் செய்ய முடியும். வேறு வழியில் வ்ரித்தாசுரனை அழிக்க முடியாது'' என்கிறார் பிரம்மா.  ததீசி முனிவரை  சந்திக்க இந்திரன் செல்கிறான்.

ஸரஸ்வதி நதியின் மறு கரையில் எழில் பூத்த மரங்கள் செடி கொடிகளுக்கிடையே ஒரு அமைதியான ஆஸ்ரமத்தில் ததீஸி  முனிவர் இருந்தார். ஆசிரமத்திலிருந்து  வேத சப்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. தவம் செய்துகொண்டிருந்த முனிவரை தேவர்கள் வணங்கினார். அவரிடம் இந்திரன் ஒரு வரம் தரவேண்டும் என்றவுடன் அவர் தருவதாக வாக்களிக்க, பிரமன் சொற்படி '' மகரிஷி  உங்களது உடலின் எலும்புகள் தான் அவசியம்  வேண்டும், அதனால்  தான் மட்டுமே  அசுரன் வ்ரித்ராசுரனை கொல்ல முடியும்''  என்று வேண்டினான் இந்திரன். முனிவர் மிக்க மகிழ்ச்சியோடு தனது வாழ்வை முடித்துக்கொண்டு உடலை அளிக்கிறார். இந்திரன் தேவலோக ஆயுத நிபுணன் த்வஷ்திரி யிடம் அந்த எலும்புகளைக் கொடுத்து வஜ்ராயுதம் தயார்செய்து முடித்தான். தேவாசுர யுத்தம் மிக பயங்கரமாக நடக்கிறது. விஷ்ணுவின் சக்தியும் இந்திரனுக்கு சேர, அவன் வஜ்ராயுதத்தை வீசி வ்ரித்ராசுரனை கொல்கிறான்.  தேவர்கள் புத்துணர்ச்சி பெற்று மற்ற அசுரர்களை தாக்க, அவர்கள் உயிர் தப்ப பாதாள லோகம் செல்கிறார்கள்.

ராக்ஷசர்கள் பழி வாங்க தொடங்கினார்கள். இரவில், ரிஷிகள் ஆஸ்ரமங்களுக்கு கூட்டமாகச் சென்று முனிவர்கள், ரிஷிகளை  எல்லாம் விழுங்க ஆரம்பித்தார்கள். ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு உயிரிழந்தனர். யாகங்களைக் கெடுத்தனர். ஆச்ரமங்களின் தூய்மையை அழித்தனர். கடலில் ஒளிந்துகொண்டிருந்த ராக்ஷசர்களை எப்படி அழிப்பது. இந்திரன் முதலானோர் நாராயணனை வேண்டினார்கள். அவர் ''அகஸ்தியர் கடலையே வற்றச் செய்பவர் அவரிடம் செல்லுங்கள்'' என்றார். அகஸ்தியரிடம் சென்று முறையிட்டார்கள்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...