Sunday, October 7, 2018

NOSTALGIA



                    
        வாழ்த்திய   ஆசீர்வதித்த  நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி 
                           J.K. SIVAN 
                  
           
ஒரு மனிதனுக்கு  ஒரு பிறந்த நாள் மட்டும் தான்  என்பது  சந்தேகமில்லாமல்  ஒப்புக் கொள்ளக்கூடிய உண்மை.  அது நமது  பாரத  தேசத்தில் அதுவும் தமிழ் நாட்டில்  அநேகர்  பின்பற்றிய  பாம்பு, திருக்கணித பஞ்சாங்க கணக்குப்படி, வருஷம் மாசம் தேதி கிழமை நக்ஷத்ரம்  பிரகாரம்   குழந்தை ''குவா குவா'' என்று கத்திய நேரம் தான்  பிறந்த நாள் என்பார்கள். இது ஆதி காலம் முதல் வழக்கத்தில் இருப்பது.


பிற்பாடு தான் சங்கடங்கள் வந்து சேர்ந்தன. நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் ஒரு  புது ஆண்டு கணக்கு கொண்டு  வந்தான். கிரிகோரியன் காலண்டர் என்று அதற்கு பெயர். அதன் படி     வெள்ளைக்காரன் அறிமுகப்படுத்திய  ஜனவரி பிப்ரவரி போன்ற பன்னிரண்டு மாதங்களில் எந்த தேதியில் ஒருவன்  பிறந்தானோ அந்த தேதி வருஷா வருஷம் அவனது  பிறந்தநாள் என்று மாறாமல் வரும்.    

ஆனால் ஒருவர்  பிறந்த   ஆங்கில மாச தேதியும் அன்று இருந்த  தமிழ் வருஷம் மாசம் தேதியும்   அடுத்த வருஷம்  ஒரே நாளில் சேர்ந்து வராது.  காரணம்  நாட்களின் கணக்கு  ஆங்கில காலண்டருக்கும் தமிழ் பஞ்சாங்கத்திற்கும் வேறே வேறே.    ஆகவே ஒருவர் தனது பிறந்த நாளை தமிழ் பஞ்சாங்க கணக்குப்படி ஒரு நாளும்  ஆங்கில மாச கணக்குப்படி வேறே ஒரு நாளும்  கொண்டாட வேண்டும். . 

என் போன்ற சிலருக்கு இன்னொரு பிறந்தநாளும் உண்டு.  அது சில மனிதர்களால் உண்டாக்கப்பட்டது. இந்த விஷயத்தில் அது   கம்சபுரம் என்கிற கஞ்சனுர் அப்பனையங்கார் குமாரர் அண்ணாவையங்காருக்கு பிறகும் சாஸ்த்ரோக்தமாக கணிக்கப்பட்டது என்று பாம்புக்கு மேல் போட்டிருக்கும் மஞ்சள் கலர் பஞ்சாங்கமோ  வெள்ளைக்காரன் காலண்டர் கணக்கோ  சம்பந்தப்படாது. அது உண்மையில் நான் பிறக்காத நாள். 

உலகம் பூரா  என்னுடைய  தஸ்தாவேஜிகள் , பாஸ்போர்ட்,  PAN, ADHAR   வாகன ஓட்ட  அங்கீகாரம், ( லைசென்ஸ்), VOTER  கார்டு, போன்ற சகல   ரெக்கார்டுகள்  சொல்லும் பிறந்த நாள் நான் அந்த  உண்மையாக நான்  பிறக்காத நாள்.    ஏப்ரல் 1ம் தேதி.  இது எப்படி புதிதாக முளைத்தது என்று யோசிக்க வேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். என்னைக்கேட்டு யாரும் இந்த நாளை என் பிறந்தநாளாக  நிர்ணயிக்கவில்லை.   

இப்போது போல் அல்ல அப்போது. 

 குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர் அழைத்து செல்லும்போது கையில் எந்த காகிதமும் இன்றி குழந்தையை கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துப் போய் பள்ளிக்கூடத்தில் சேர்க்க  அவனுக்கோஅவளுக்கோ  ஆறு வயது பூர்த்தி ஆகி இருக்கவேண்டும்.    பெற்றோர் சொல்லும் தேதி தான்  பிறந்தநாள்.  எந்த PROOF உம்  கொண்டு போகவேண்டாம்.   

 இப்போதெல்லாம்  அடி வயிற்றில் குழந்தை இன்னும் பிறக்காமல் இருக்கும்போதே நிறைய  பணம் கட்டி பள்ளிக்கூடத்தில் இடம் தேடுகிறார்கள். பிறந்த பிறகு  மூன்று  வயதான பிறகு  பள்ளிக்கூடத்தில்  சேர்க்கமுடியாதே. பள்ளிக்கூடத்தில்  இடம் இருக்காதே.    

நான் பிறக்காத  அந்த  மூன்றாவது பிறந்த நாள் பற்றி ஒரு சம்பாஷணை என் தந்தையுடன் நடந்தது. அப்போது எனக்கு வயது 35.
'' அப்பா, நான் ஏப்ரல் முதல் நாளிலா பிறந்தேன்.?''
''இல்லியே.''
''பின் எதற்கு இந்த தேதி கொடுத்தீர்கள் பள்ளியில்'?'
'' ஒ அதுவா'' என்று மெதுவாக சிரித்தார்.
'' என்ன சொல்லுங்கோ ?''
'' ஒன்றுமில்லை. உன்னைப் பள்ளிக்கூடம் சேர்க்கும்போது சூளைமேடு  கார்பொரேஷன்  எலிமெண்டரி (தமிழ்  ஆரம்ப கல்வி நிலையம் )ஸ்கூல் வாத்தியார்,  சுப்ரமணிய அய்யர் ''உம்ம பையனுக்கு என்ன பிறந்த தேதி என்று என்னிடம்  கேட்டார்.

மூக்குக் கண்ணாடிக்கு மேல் வழியாக என் அப்பாவைக் கேட்டு விட்டு,  கட்டை ஸ்டீல் நிப் பேனாவை பதிவு ரிஜிஸ்தரிடம் கொண்டு போயிருக்கிறார் சுப்ரமணிய அய்யர் .

''எனக்கு சட்டென்று உனது பிறந்த தேதி ஞாபகத்துக்கு வரவில்லை.

(இதைச் சொன்ன அன்றைக்கு கூட அவருக்கு எனது உண்மை பிறந்த தேதி தெரியாது. பெரிய குடும்பம். நிறைய குழந்தைகள், பலதில் சிலது அல்பாயுசில் மரணம். எஞ்சியதில் மிஞ்சியதற்கு எதற்கு என்ன பிறந்த தேதி என்று அவரால் எப்படி சொல்லமுடியும்?) கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும் இது தான் நடைமுறையில் அக்கால வழக்கம்.. அதே போல் ஜாதக  பெயர் ஒன்று, அழைக்கும் பெயர் வேறு. பள்ளியில் இன்னொன்று).

''சரி அப்பறம் என்னாச்சு?''
''சுப்ரமணிய அய்யர்  என்னை அவசரப்பத்தினார். யோசிக்க விடவில்லை. சீக்ரம் சொல்லுங்கோ நிறைய வேலை இருக்கு. ரிஜிஸ்டரில் DOB என்ட்ரி பண்ணனும்'' என்றார்

''புரட்டாசிலே மஹம், ஆனால் என்ன வருஷம்னு தான் யோசிக்கிறேன்....'' என் அப்பா.
''தமிழ்  தேதி எல்லாம் வேண்டாம்  இங்க்லீஷ் தேதி தான் வேணும். அதைச் சொல்லுங்கோ முதல்லே.''
''.............................''
அப்பாவின் யோசனையை அறுத்தவாறு, ''டேய் இங்க வா என்று என்னை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் கதவின் நிலைப்படியில் நிற்க வைத்தார் சுப்ரமணிய அய்யர். ஏதோ மரண தண்டனை எனக்கு  அளித்து அதை  நிறைவேற்ற அழைத்து க்கொண்டு போவது போல் நான் பயந்தேன். ஐந்து ஐந்தரை வயது.  

கதவின் வாசற்கால்  நிலையில்  கருப்பு நிறத்தில்  பட்டையாக  பென்சில் கோடுகள் சில தெரிந்தன. என் தலை உச்சி அருகே ஒரு கோடு தென்பட்டது. பரவாயில்லே உயரம் சரியாகத்தான் இருக்கு.

''டேய் பயலே, உன் வலது கையை  தலைக்குமேலே கொண்டு போய் இடது காதைத்  தொடு''. கஷ்டப்பட்டு கொஞ்சம் தொட்டேன்.
'' சரி பரவாயில்லை. ஆறு வயசுன்னு போடறேன். இன்று என்ன தேதியோ அதுலேர்ந்து 6 வருஷம் முன்னாலே'   அப்பதான் அட்மிஷன் கிடைக்கும். இல்லேன்னா HM சுந்தரேசன் தொலைச்சுடுவான் என்னை''.
''சரி'' என்றார் அப்பா
''புரியறதா கிருஷ்ணய்யர் உங்களுக்கு ? இன்றைய தேதிக்கு உங்க பையனுக்கு 6 வயது என்று எழுதிக்கிறேன் "?'' என்று என்னை எக்ஸ்ரே கண்களோடு கண்ணாடி வழியாக பார்த்தார் வாத்தியார் சுப்ரமணிய அய்யர் ( பாதிநாள் தலைமை ஆசிரியர் வரமாட்டார் எனவே சு. அ. தான் பள்ளிக்கூடத்தின் சர்வாதிகாரி) .
'இல்லேன்னா,  இப்படி செய்யட்டுமா?    6 வருஷத்துக்கு முன்னாலே ஏப்ரல் முதல் தேதி என்று போட்டுக்கட்டுமா?'' என்று கேட்டார் சு. அ ,
'' அப்படிப் போட்டால் என்ன ஆகும்? - என் அப்பா.
'' நீங்கள் ஜூலை 1 அன்று வந்திருக்கேள் . ஏப்ரல் 1 என்று D.O .B. போட்டால் மூன்று மாதம் பையன் முன்னாலேயே பிறந்ததாக காட்டும். 6 வயது தாண்டிட்டுது என்று ரெகார்டு பேசும் . சந்தேகமில்லாமே பள்ளியில் சேர்த்துக் கொள்வோம். தேதியும் சுலபமா கவனத்திலே நிக்கும். உங்களுக்கும் சிவன் பிறந்த தேதி சட்டென்று ஞாபகம் இருக்கும். இப்படி யோசிக்கவோ தடுமாறவோ வேண்டாமே.

''ததாஸ்து'' என்றிருக்கிறார் அப்பா.

இப்படியாகத்தானே இந்த பூவுலகில் நான் சத்தியமாக பிறக்காத ஏப்ரல் முதல் நாள் 1939 அன்று அரசாங்க கணக்கு தொடங்கும் நாளில் ''பிறந்து'' நிறைய பேரிடம் வாழ்த்துகளை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன். என்னைவிட ஒரு சிறந்த ஏப்ரல் முதல் நாள் ''அறிவாளியை'' பார்த்ததுண்டா?  இப்போது நான் எந்த வேலையிலும் இல்லை, அதுவும்  FB யில்  என்  DOB   1.4.1939  என்று இருந்ததை   9.10.1939 என்று  உண்மையான  நான் பிறந்த நாளை போட்டிருக்கிறேன்.  ஆகவே  இப்போது தான்  6.10.18  அன்று எனது  80வது பிறந்த நாளை அறிவித்து  வாழ்த்து  ஆசிகள் எல்லாம் நிறைய கூடை கூடையாக பெற்றதற்கு நன்றி.  மீண்டும்  ஒரு தடவை நாளைக்கு என்னை  வாழ்த்தவேண்டாம்.  உங்களுக்கே  எரிச்சலாக இருக்கும்.
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...