Wednesday, October 3, 2018

YATHRA VIBARAM



யாத்ரா விபரம் J.K. SIVAN
எச்சூர்
வாலீஸ்வரர் தரிசனம்

அடிக்கடி எல்லாமே மறந்து போகும் வயது. ஆகவே முடிந்தவரை நினைவில் நம்பாமல் சிறிய பாக்கெட் நோட் புக் ஒரு பேனா இரண்டும் எங்குபோனாலும் என்னுடைய சங்கு சக்ரமாகி விட்டது.

19.8.2018 அன்று ஸ்ரீ அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் சகிதம் சில கோவில்களை செய்யாறு வந்தவாசி பக்கம் சென்று தரிசித்ததில் விட்டுப்போன ஒன்று ரெண்டு கோவில்களைப் பற்றி சொல்கிறேன்.

தென்னாங்கூரிலிருந்து வந்தவாசி செய்யார் கோவில்களை சென்று தரிசிக்கும் வழியில் வந்தவாசியிலிருந்து 8 கிமீ. தூரத்தில் ஒரு கிராமம் எச்சூர்.

ஒரு இருவரை வழிகேட்டு அவர்கள் தப்பாக சொல்லி, அதை மூன்று நான்குபேர் திருத்தி, எச்சூர் சிவன் கோவில் போக வழி தெரிந்து அங்கே சென்றால் கதவு மலை நாலரை மணிக்கு பூட்டி தான் இருந்தது. காரை நிறுத்தி கோவிலை சுற்றி வந்தோம். வாலீஸ்வரர் என்று பெயர் பலகை. மேலே வாலி உட்கார்ந்து தவம் பண்ணிக்கொண்டிருந்தார்.

ரிஷிகள் வழிபட்டதும், முனிவர்கள் பூஜித்ததும், சித்தர்கள் ஸ்தாபித்ததும், மன்னர்கள் நிர்மாணித்ததுமான எண்ணற்ற திருக்கோயில்கள் நம் நாட்டில் அநேகம் உண்டு. அது நமது பாக்யமாக இருப்பது தான் தப்பு. எது அதிகமாக இருக்கிறதோ அதன் மீது மனம் செல்லாது. இல்லாதது எதையோ தேடி அலையும்.

வாலி அமைதியை வேண்டி, அதிக ஜனநடமாட்டம் இல்லாத இந்த ஊரை செலெக்ட் பண்ணி இருக்கிறான். வாலி வழிபட்ட ஈசனின் ஆலயம்...எச்சூர் ஸ்ரீவாலீஸ்வரர்

திரேதாயுகத்தில் இந்திரனின் மகன் தான் வாலி. சிறந்த சிவபக்தன். நாளெல்லாம் பரமேஸ்வரனை பூஜித்து உதயகாலம் முதல் சந்தியாகாலம் வரை பல சமுத்ரங்களுக்கு பறந்து சென்று நீராடி, சிவ பெருமானை வழிபடுவான் வாலி. ராவணனைத் தன் விரல் இடுக்கில் பற்றிக்கொண்டு, (வாலில் சுற்றிக் கொண்டு என்றும் சொல்வதுண்டு) ராவணன் அலறித் துடிக்கும்படியாக எட்டு திசைகளையும் சுற்றி வந்து, ராவணன் மன்னிப்பு கேட்ட பிறகே, அவனை விடுவித்தான். அந்த அளவுக்கு வலிமை கொண்டிருந்தவன் வாலி. பத்து தலை இருப்பது கை பொம்மையாக ராவணனைக் கட்டி, தனது மகன் அங்கதனுக்கு விளையாட்டு காட்ட தொட்டில் மேல் தொங்க விட்டான் என்று என் அம்மாவிடம் கதை கேட்டிருக்கிறேன். ஒரு காலத்தில் இந்த எச்சூருக்கு லக்ஷ்மிநிவாசபுரம் என்று பெயர்!

ஒருநாள், வழக்கம்போல் காலையில் வாலி வானத்தில் பறந்து கிழக்குக் கடலில் நீராடி விட்டு மாலையில் மேற்குக் கடலில் நீராட செல்லும்போது கீழே எச்சூரில் பயணம் தடைப்பட்டது. . ஏன் நம்மால் பறக்க முடியவில்லை என்று கீழே இறங்கினான் வாலி. ஒரு அசரீரி அவனிடம் ''என்னருமை வாலி, நான் இங்கே பூமியில் புதைந்து இருக்கிறேன் என்னை தேடி கண்டுபிடி, வழிபடு'' என்றது பரமசிவன் குரல்.

வாலி பலிஷ்டன், எல்லா இடத்தையும் நொடியில் தோண்டினான். பூமியில் புதையுண்டிருந்த சிவலிங்கத்தை எடுத்து, முறைப்படி ஓர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து தியானம் பண்ணினான். அந்த சிவனுக்கு அதனால் வாலீஸ்வரர் என்று பெயர் வந்தது.. பச்சை நிறக் கல்லால் ஆன அம்பிகையின் பெயர் ஸ்ரீஅபீதகுஜாம்பாள்.

எப்படி இந்த பூட்டியிருக்கும் கோவிலுக்குள் செல்வது என்று யோசிக்கும்போது எதிரே ஒரு சிறுவன் கார் எதிரே கை காட்டினான்.
காரை நிறுத்தினோம்.

''உங்களுக்கு இந்த கோவில் உள்ளே போகணுமா? எங்கள் வீட்டில் சாவி இருக்கு. எடுத்துக் கொண்டு வருகிறேன். அய்யர் இன்று வரமாட்டார்.''
ஐந்தே நிமிஷத்தில் பையன் ஓடிப்போய் சாவி கொண்டுவந்து கதவுகளை திறந்தான். புராதன ஆலயம் சிதிலமடைந்து மீண்டும் ஊரார் ஒத்துழைப்பில் சிறிய கோவிலாக நிற்கிறது. முதலாம் குலோத்துங்க சோழன் இக்கோயிலை அழகான கற்கோயிலாக எழுப்பி, திருப்பணிகள் செய்ததாகக் கல்வெட்டுகள் இருந்து அந்நியர் படையெடுத்து கோயிலும் கல்வெட்டுகளும் சிதைந்து எஞ்சிய ஒரு கல்வெட்டில் முதலாம் குலோத்துங்க சோழன் திருப்பணிகள் செய்தது அறிகிறோம். வாலீஸ்வரர் சுயம்பு. ஆவுடையாரில் சற்று பின்னம் தாக்குதல் போது அம்பாளை எங்கோ கொண்டு சென்று பாதுகாத்திருக்கிறார்கள்.

2011ல் ராஜாமணி ஐயர் என்ற அரசு அதிகாரி இந்த ஊர்க்காரர் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்ற எச்சூர் சேம்பி அம்மன் கோயிலுக்கு வந்திருந்தார். வாலீஸ்வரர் கோயிலின் புராதனச் சிறப்பையும், சிதிலமான அதன் நிலையும் அவர் மனதை புண் படுத்தி, அவர் முயற்சியால் ஊர் மக்கள் ஆதரவில் ஒருவாறு கோயில் புது உருவம் பெற்றிருக்கிறது.

அந்த ஊர் பையனின் உதவியால் கற்பூர ஹாரத்தி என் கையால் வாலீஸ்வரருக்கும் அம்பாள் அபீத குஜாம்பாளுக்கும் காட்டி ஸ்லோகம் சொன்னேன். மனது திருப்தியாக இருந்தது.

நாம் எல்லோருமே முடிந்த போதெல்லாம் சில கிராமங்களுக்கு சென்று பழங்கோவில்களை அறிந்து தெரிந்துகொண்டு நம்மால் ஆனா உதவியை உள்ளூர் மக்கள் மூலம் அளித்து கோவிலை தக்கமுறையில் பராமரிக்க பங்கேற்க வாலீஸ்வரர் அருள் புரியட்டும்.









No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...