Tuesday, October 2, 2018

BISMILLA KHAN





                                                                               ''அபூர்வ ராகம்''           J.K. SIVAN 
 
                      
இதில் கண்ட விஷயத்தை ஒரு டாக்டர் நண்பர் எனக்கு அனுப்பியதற்கு அவருக்கு நிறைய நன்றி கடன் பட்டிருக்கிறேன். அந்த விஷயத்தை கொஞ்சம் விவரித்து எழுதியிருக்கிறேன்.

நிறைய பத்திரிகைகள் இப்போது காணோம்.  பிளிட்ஸ் என்ற சுவாரஸ்யமான பத்திரிகையை R .K  கரஞ்சியா எழுதி நடத்திவந்தார்.  பாபுராவ் படேல்  MOTHER  INDIA  என்று ஒரு பெரிய பத்திரிகை நடத்தி வந்தார். அவரது கேள்வி பதிலுக்காகவே அதை படிப்போம். சரியான கிண்டல் நிபுணர்.  ILLUSTRATED WEEKLY  என்று வாராவாரம் வரும். அதில் பேண்ட் மேல் ஜட்டி போட்டுக்கொண்டு  தலை முக்காடுடன் ஒரு பனியன்  முழுக்கை மூடி, கண்ணுக்கு  மூடியோடு  ஒரு வீரன் நிற்பான். PHANTOM . அவன் சாகசங்களை  வண்ணச் சித்திரத்தில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.  அவனோடு  'குரன்'  என்று தொப்பி போட்ட குள்ளன், 'டெவில்' என்கிற குதிரை நிற்கும்.  ஷங்கர் வீக்லி என்ற கார்ட்டூன் பத்திரிகை எல்லோரையும் சிரிக்க வைக்கும்.

ILLUSTRATED WEEKLY யில் ஒரு அற்புத கட்டுரை வந்திருந்தது. பிரபல ஷெனாய் வித்துவான் உஸ்தாத் பிஸ்மில்லா கான் பத்திரிகை ஆசிரியரிடம் சொன்னதாக  ஒரு விபரம்: 

பிஸ்மில்லா கானின் மாமா அலி பக்ஸ். அந்த மாமா அடிக்கடி தன் வீட்டுக்கருகே  இருந்த பாலாஜி (மஹாவிஷ்ணு) கோவில் வேலைக்கு  போவார். அங்கே நாள் முழுதும்  ஷெனாய் வாசித்தால் மாசம் நாலு ரூபாய் சம்பளம்.  கூடவே  மருமான்  சிறுவன்  பிஸ்மில்லாகானும் போவான். மாமா  வாசிப்பதை கவனிப்பான்.   பாலாஜி கோவில்  அறைகளில் ஒன்று அலிபக்ஸ் ஒய்வு எடுக்க கொடுத்திருந்தார்கள்.  அதில் பிஸ்மில்லா  கான்  மாமாவோடு சேர்ந்து தங்குவான்.  அங்கே  மாமா  விடாமல் ஷெனாய் வாசித்து  மேலும் நன்றாக வாசிக்க  பழகுவார்.   சாப்பாடு நேரம் வரை  பிராக்டிஸ் பண்ணுவார். பசியோடு அவரை பார்த்துக்கொண்டே இருப்பான். கொஞ்சம் கொஞ்சமாக அவனும் வாசிக்க ஆரம்பித்து விட்டான். தனியாக வாசிக்கும் திறமை வந்து விட்டது. 

ஏன் மாமா  அந்த பாலாஜி கோவில் அறையில் தனியாக  வாசித்து பழகுகிறார்? வீட்டில் நிம்மதியாக  வாசிக்கலாமே என்று பிஸ்மில்லா யோசித்தான்.   அதை மாமாவிடம் ஒருநாள் கேட்டும் விட்டான்.  மாமா பதில் சொல்லவில்லை. அவன் தலையை தடவி  ''பையா  உனக்கும்  ஒருநாள்  தானாகவே புரியும்''  என்கிறார்.

''மாமு  நான்  என்றைக்கு வாசிக்க தொடங்குவது? என்றான் பிஸ்மில்லாகான்.

''என்றைக்கா?   இன்றைக்கே  என்கிறார் மாமா.

அன்றைக்கு சாயங்காலம்  மாமா பிஸ்மில்லா கானை மஹா விஷ்ணு  கோவிலுக்கு கூட்டி சென்றார். தான் வாசித்து முடித்ததும்  அங்கேயுள்ள தனது தனி அறைக்கு அவனை இட்டுச் சென்றார். பதினெட்டு வருஷம் அவர் வாசித்து பழகிய அறை அது. 

''இதோ பார் பிஸ்மில்லாகான்.  இங்கே வாசி.  இது தான்  சிறந்த இடம் வாசிக்க.   ஒரு விஷயம். முக்கியமாக கவனி.  இந்த கோவிலில் நீ ஏதாவது  அதிசயமாக அபூர்வமாக கண்டால் அதை எவரிடமும் சொல்லாதே.''  என்கிறார் மாமா அல்லா பக்ஸ்.

பிஸ்மில்லா  நாலு மணிமுதல் ஆறுமணிநேரம்  ஒவ்வொருநாளும்  அந்த அறையில் தொடர்ந்து வாசிக்க பழகினான். அந்த நான்கு சுவர்களுக்குள்  வெளி உலகத்தில் அவன் அறியாத அபூர்வ சங்கீத சங்கதிகள் அவனுடைய ஷெனாய் வாத்தியத்தில் பேசின.  மேலும் மேலும் அதில் சஞ்சரிக்க அவனுக்கு ஆர்வம் மேலிட்டது.  நாதக்கடலில் மூழ்கிப் போனான்.

ஒரு நாள் அதிகாலை நாலு மணிக்கு பிஸ்மில்லா கான்  பாலாஜி கோவில் அறையில் வாசித்துக் கொண்டிருந்தான்.  அதி அற்புதமாக அவனது ஷெனாய் வாசிப்பு  தொடர்ந்தது.  யாரோ அவன் அருகில் அமர்ந்து கொண்டு  அவன் வாசிப்பதை  தலையாட்டி ரசிப்பது போல் உணர்ந்தான்.. யார் என்று பார்த்தான்.  அவனுக்கு தெரிந்த முகம்.  அந்த கோவில் நாயகன் மஹாவிஷ்ணு. கிருஷ்ணன். . அவன் அருகே ரசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது  சாக்ஷாத் பாலாஜி கிருஷ்ணன்  தான்.
அவனுக்கு மயிர்க்கூச்செரிந்தது. வாசிப்பதை நிறுத்தினான். பாலாஜியை வைத்த விழி வாங்காமல் பார்த்தான்.
''ஏன் நிறுத்தி விட்டாய் வாசி''   புன்சிரிப்பு.  தொடர்ந்து  வாசித்தான்.    பாலாஜி மாயமாக மறைந்தார்.
அதிர்ச்சி அடங்கவில்லை  பிஸ்மில்லாகானுக்கு.   மாமா எச்சரித்தது நினைவுக்கு வந்தது.  மாமாவும் குருவுமான  அல்லாபக்ஸ் காலில் விழுந்தான். நடந்ததைச்  சொன்னான்.
கன்னத்தில் அறைந்தார்  மாமா.  
''யாரிடமும் சொல்லாதே என்று சொன்னேனே  ஏன் என்னிடம் சொன்னாய்?''

உஸ்தாத் பிஸ்மில்லா கான்  என்ற உலகப்புகழ்   பெற்ற பிரபல ஷெனாய் வித்துவான் ஸ்ரீ  கிருஷ்ணனை நேரில் பார்த்தவர்.  ஜாதி எங்கிருந்து வந்தது  பூரண பக்தியில், நாத உபாசனையில்?. அவருக்கு கிருஷ்ணன் மேல் வாத்சல்யம் இருந்தது. அதனாலேயே கண்ணன் காட்சி தந்தான்.

இந்த சம்பவத்தை  பிஸ்மில்லா கானிடம் நேரில் கேட்டவர்  மலையாள மனோரமா பத்திரிகையை சேர்ந்த டாக்டர் மது வாசுதேவன். 

சில வருஷங்களுக்கு பின்  ஜாம்ஷெட்பூரிலிருந்து  வாரணாசிக்கு ஒரு  ரயில் பயணம்.    ஜிக் புக் கரி என்ஜின். மூன்றாம் வகுப்பில்  பிஸ்மில்லா கான் பயணம். நடுவில் எங்கோ ஒரு சிற்றூரில் இரவில்  ரயில் நின்றபோது ஒரு மாடு மேய்க்கும்  பையன் அந்த பெட்டியில் ஏறினான். கருப்பு ஒல்லி பையன். கையில் புல்லாங்குழல்.  ரயில் பெட்டியில் வாசிக்க ஆரம்பித்தான். பிஸ்மில்லா கானுக்கு அவன் வாசித்த ராகம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அதன் த்வனி  நெஞ்சை தொட்டது. அகலவில்லை.  ஆஹா  அவன் தான் விரும்பிய  கிருஷ்ணன் தான். இல்லாவிட்டால் இவ்வளவூர் அபூர்வ ''பிடிகள்''  வாசிக்கமுடியாது.  ஷெனாய் மாஸ்டர் என்பதால்  வாசிப்பதற்கு அது எவ்வளவு கடினம் என்று அவருக்கு தெரியும். கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது. வேணுகானம் அவ்வளவு அமிர்தத்தை பொழிந்தது. நிறுத்தினான்.  அவரைப் பார்த்தான் அந்த பையன்.  தன்னிடமிருந்த  ரூபாய்களை அள்ளி  அவனிடம் தந்தார்.  '

'இன்னும் வாசி''   என்று கெஞ்சினார் ''  
''சரி''  என்று தலையாட்டி மீண்டும் தொடர்ந்தான் அந்த பையன்.    சங்கீத ஆனந்தத்தில் கண்களை தன்னையறிமால் மூடி சுகமாக ரசித்தார்.  வைகுண்டத்தில்  மதுராவில், பிருந்தாவனத்தில் கண்ணனோடு  உலாவிக்கொண்டுருந்த  பிஸ்மில்லாகான்.  கண்ணை  திறந்த போது  அந்த பையனை ரயில் பெட்டியில்  காணவில்லை.

உண்மையில் என்ன நடந்தது தெரியுமா.  கும்பமேளா உற்சவம்  நேரம் அது.  மறுநாள் பிஸ்மில்லா கானின் நிகழ்ச்சி. அதற்கு வாசிக்கத்தான் போய் கொண்டிருந்தார்.  அவர் நிகழ்ச்சியில் அன்று வாசித்தது
அந்த  '' கிருஷ்ண பையன்''   வாசித்த அதே ராகம். நீண்ட ஆலாபனையுடன்  கண்ணை மூடி அவனை தியானித்து  காற்றில் அவர் கீதம் எங்கும் வியாபித்தது.

''மீண்டும் வாசியுங்கள்''    என்று அவர் அந்த கிருஷ்ண பையனிடம்  கெஞ்சியதைப் போலவே எல்லா ரசிகர்களும் கெஞ்சினார்கள். 

''என்ன ராகம் அது நீங்கள் புதிதாக வாசித்தது?''   என்று எல்லோரும் கேட்டபோது பிஸ்மில்லா கான்  அது தான் ''கண்ணையா ராகம்'' என்கிறார்.

மறுநாள்  செயதிதாள்கள் அவரது நிகழ்ச்சி பற்றி, அவர் கண்டுபிடித்த அபூர்வ ''கண்ணையா ராகம்'' அதன் காந்த கவர்ச்சி பற்றி எல்லாம் பக்கம் பக்கமாக எழுதின.  புல்லாங்குழல் மேதை ஹரிப்ரசாத் சவுராசியா அந்த ராகம் பற்றி  பிஸ்மில்லாகானிடம்  கேட்டு தெரிந்து கொள்ள விரும்பினார்.

ரயில் சம்பவத்தை  அவரிடம் சொன்னார் பிஸ்மில்லாகான்.  புல்லாங்குழல் மேதை  ஹரிப்ரசாத் கண்களிலும் கங்கை ஆறு.  கண்ணன்  தாமரை இதழ்களிலிருந்து புறப்பட்ட சங்கீதம் கண்ணையா  ராகம்  இனிக்காதா என்ன?




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...