ஒரு அற்புத ஞானி J.K. SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்
'துப்பறியும் சாம்பு ' ஸ்வாமிகள்
நூறு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்பு பதினைந்து ரூபாய் என்பது பெரிய ''அமௌன்ட்.'' வெங்கட்ராமன் என்கிற பையன், டி .வி. சுப்ரமணிய ஐயரின் சொந்தக்காரன். பையனுக்கு ஏதோ பண முடை போல் இருக்கிறது. ஒருநாள் திருச்சியில் தனது வீட்டிலிருந்து பதினைந்து ரூபாய் அபேஸ் பண்ணிவிட்டு சென்னைக்கோ எங்கோ, ஓடிவிட்டான். ''ஓடி'' என்றால் காலால் அல்ல, ரயிலில் என்று அது சென்னைக்கு ஓடியதை குறிக்கும்.
ரெண்டுநாளாக பையன் வருவான் என்று காத்திருந்த அவன் தகப்பனார் ''சுப்ரமணிய அய்யரே, ஒருவேளை என் பையன் திருவண்ணாமலை வந்தால் அவனை ஜாக்கிரதையாக திருச்சிக்கு உடனே அனுப்பி வையுங்கள் '' என்று கடிதாசு போட்டிருந்தார்.
அதிருஷ்டவசமாக ஐயர் எதிர்பார்த்தபடி, வெங்கட்ராமன் திருவண்ணாமலைக்கே வந்து விட்டான். சுப்ரமணிய ஐயர் சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர். அவனை ஸ்வாமிகளிடம் அழைத்துச் சென்று அவனுக்கு தக்க புத்திமதி சொல்லவேண்டும் என்று ஐயர் தீர்மானித்ததால் ஸ்வாமிகளைத் தேடி பூத நாராயணன் கோயில் அருகே மரத்தடியில் ஸ்வாமிகளை சந்தித்து பையனோடு சேர்ந்து வணங்கினார்.
ஐயர் எதுவும் சொலலும் முன்னாலேயே ஸ்வாமிகள் ''இந்த பையனை ஏன் இன்னும் இங்கே வச்சிண்டிருக்கே. சீக்கிரமா அனுப்பிடுன்னு அவன் தகப்பன் உனக்கு நேத்திக்கே கடிதாசு போடலை. அதைப் பாத்தியா இல்லையா?'' என்று கேட்டார்.
ஐயர் திகைத்து நின்றார். இதைப் படிக்கும் நாமே இது எப்படி சாத்தியம் என்று திகைக்கிறோமல்லவா?சுப்ரமணிய ஐயர் திகைக்க மாட்டாரா? பையனும் ஸ்வாமிகள் தீர்க்க தரிசனத்தை புரிந்து கொண்டு அதிசயித்து அன்று முதல் மாறிவிட்டான்.
++
இன்னொரு ஆச்சரியமான சம்பவம்.
எண்ணற்ற பேர் வாழ்வில் எத்தனையோ அதிசயங்கள் ஸ்வாமிகள் சம்பந்தப் பட்டு நடை பெற்று இருக்கிறது. சிலர் வெளியே சொல்லாமலே அதெல்லாம் மறந்து மறைந்து போய்விட்டன.
ஸ்ரீரங்கம் சுந்தரம் பிள்ளை ஒரு பெரிய பணக்காரர். ஷோக்கு பேர்வழி. பெண்கள் சகவாசம் கொஞ்சம் ஜாஸ்தி. கடைசி காலத்தில் வைராக்கியம் வந்துவிட்டது. காவி அணிந்து தாடி வளர்த்து ருத்திராக்ஷம் விபூதி பட்டையில் இப்போது அவர் வாமதேவர். ஆள் வேஷம் மாறினாலும் பழக்கம் மாறுமா? இளம் வயசில் ஒரு பெண்ணை ரகசியமாக மணந்து அந்தக்காலத்து மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் (இப்போது கோடிகள் ) வைர தங்க ஆபரணங்களை அவளுக்கு பூட்டி அழகு பார்த்தார். இப்போது அவளும் அவரோடு திருவண்ணாமலைக்கு வந்தாள்.
பிள்ளையின் அந்த இளம் மனைவி சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தை. அவரை அடிக்கடி தரிசித்து வந்தாள் . பிள்ளை தங்கியிருந்த இடத்துக்கு எப்ப வேண்டுமானாலும் ஸ்வாமிகள் திடீர் விஜயம் செய்வார். பிள்ளை வீட்டில் ஒரு வேலையாள். பல காலமாக சமையல்வேலை பார்த்து வந்தான்.
ஒருநாள் பிள்ளையின் மனைவி கோவில் குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டு வருவதற்குள் அந்த அம்மாளின் பத்தாயிரம் ரூபாய் பெருமான அவளது வைர தங்க நகைகளை திருடி வீட்டுக்கு பின் புறம் ஒரு சாக்கடையில் போட்டு மறைத்து வைத்தான். பின்னால் நேரம் கிடைத்தபோது சௌகரியமாக எடுத்துக்கொள்ள திட்டம்.
அம்மாள் ஸ்நானம் முடிந்து வீட்டுக்கு வந்தவள் பூஜை எல்லாம் செய்துவிட்டு நகைகளை அணிய தேடினாள் . வைத்த இடத்தில் இருக்குமா? தேடினாள். காணோம். அழுதாள், அந்த சமையல்காரனும் ஒன்றுமறியாதவனாக அவளோடு சேர்ந்து நகைகளை தேடினான். அவளைத் தேற்றினான். அம்மாள் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடின சமயம் அவள் மனது ஸ்வாமியை நினைத்தது.
என்ன ஆச்சர்யம்! சொல்லி வைத்தாற் போல ஸ்வாமிகள்அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்தவர் அவளையும் சமையல்காரனையும் மாறி மாறி பார்த்தார். நேராக அவன் அருகே சென்று கன்னத்தில் அறைந்தார்.
''திருடா திருடா, இந்த பூனையும் பால் குடிக்குமா வா? சீ சீ இந்த பேமானி பிழைப்பு 'எதற்கு. போய் உடனே சாக்கடையிலிருந்து நகையை எடுத்து அம்மாள் கிட்டே கொடு '' என்கிறார். அவன் ஒன்றும் புரியாதவனாக நடித்தான்.
அம்மாள் போலீசில் புகார் கொடுத்தாள். பிள்ளை எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் தெரியாது என்று அந்த வேலையாள் அழுது நடித்தான். போலீஸ் அவனை விலங்கிட்டு அழைத்து போனார்கள். சரியான அடி அவர்களிடம் கிடைத்ததும் வலி தாங்கமுடியாமல் அவனை உண்மையைக் கக்க செய்தது.. வலி தாங்கமுடியாமல் கதறிக்கொண்டு வந்து சாக்கடை யிலிருந்து தான் ஒளித்து வைத்த நகைகளை எடுத்து அந்த அம்மாளிடம் கொடுத்தான்.
No comments:
Post a Comment