அம்மணி அம்மன் 5 J.K. SIVAN
பணி நிறைவேறியது. எல்லாம் இன்ப மயம்
ஹிந்து சனாதன தர்ம கொள்கை கொண்ட நமக்கு கிடைத்த ஒரு வர பிரசாதம் திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ உண்ணாமுலை அம்மை உடனுறை ஸ்ரீ அண்ணாமலையார் சிவாலயம்.
திருவண்ணாமலை சென்னையிலிருந்து 185 கி.மீ தூரத்தில் இருக்கிறது. பஸ் கார் ரயில் எதுவில் வேண்டுமானாலும் போக முடியும். அதிக பட்சம் மூன்று மணி நேரத்தில் அடையலாம். 25 ஏக்கர் அளவில் மிகப் பெரியது, பழைமையானது அருணாச்சலேஸ்வரர் ஆலயம்.
கார்த்திகை மாதத்தில் கடைசி பத்து பன்னிரண்டு நாட்கள் கார்த்திகை தீபம் வரையில் உலகெங்கும் இருந்து சிவபக்தர்கள் கூடும் இடம் திருவண்ணாமலை. கூட்டம் சமாளிக்க முடியாது பிரத்யேக பஸ், ரயில் விடுவார்கள் அப்போது. பக்தி இன்னும் சாகவில்லை.
திருவண்ணாமலைக்கு மணிப்பூரக ஸ்தலம் என்றும் பெயர். ரமணர் சேஷாத்திரி ஸ்வாமிகள் இன்னும் எத்தனையோ தெரிந்த தெரியாத சித்தர்கள் இன்றும் வாழும் ஊர் இது. பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரபலமாகிவிட்டது.நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம்
அருணாச்சலேஸ்வரர் ஆலயம் ஐந்து பிரஹாரங்கள் கொண்டு ஒவ்வொன்றிலும் அருணாச்சலேஸ்வரரை தரிசித்தவாறு நந்திகள். ஐந்து பிரஹாரங்களும் ஆத்மா, ஜீவனை சூழ்ந்திருக்கும் பஞ்ச கோசங்கள் . அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்கள். அருணாச்சலேஸ்வரர் தான் ஆத்மா, பரமாத்மா.
ஐந்தாவது வெளி பிரஹாரத்தில் நான்கு கோபுரங்கள். திருமஞ்சன கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், பேய் கோபுரம் ராஜகோபுரம். ராஜகோபுரம் 217 அடி உயரம். 11 நிலை. தென்னிந்தியாவில் உயரமானது. அபூர்வ சிற்ப வேலைப்பாடு கொண்ட ஆயிரங்கால் மண்டபம் அருகே சிவகங்கை குளம். பாதாள லிங்கம் குகை கோயில். இங்கே தான் ரமணர் சிறுவபதில் தியானத்தில் இருந்தார். கம்பத்து இளையனார் சந்நிதி க்ரிஷ்ணதேவராயர் காலத்தியது. அருணகிரி நாதர் மண்டபம் முக்கியமானது. தெற்கு கோபுரம் வல்லாள மகாராஜா காட்டியது. அருணாச்சலேஸ்வரர் இந்த மஹாராஜா சந்ததி இல்லாமல் மரணமடைந்ததால் அவன் மகனாக அவனது அந்திமக்ரியைகளை செய்தவர். கிழக்குகோபுரம் வல்லாள கோபுரம். அங்கே வல்லாளனின் சிலை கோபுரத்தின் கிழக்கே வைக்கப்பட்டிருக்கிறது. நாலாவதுபிராஹாரத்தில் ப்ரம்ம தீர்த்தம். வாசலில் கிளி கோபுரம். கிழக்கே கொடிமரம். அம்பாள் உண்ணாமுலையின் சந்நிதி வடக்கே இருக்கிறது. ரெண்டாம் பிராஹாரத்தில் நிறைய சிவலிங்கங்கள்.
அருணாச்சலேஸ்வரர் சந்நிதி பின்னால் வேணுகோபால சுவாமி. மூலவர் சந்நிதியை சுற்றி சோமாஸ்கந்தர், லிங்கோத்பவர், துர்கா, சண்டிகேஸ்வரர், கஜலக்ஷ்மி, அறுமுகஸ்வாமி, தக்ஷிணாமூர்த்தி, ஸ்வர்ணபைரவர், நடராஜர், பள்ளியறை, தென்மேற்கே கல்யாண மண்டபம். சிவகங்கை குளத்தின் வடகரையில் சிவகங்கை விநாயகர்.
ஆராய்ச்சியாளர்கள் சங்கம வமிச ராஜாக்கள் 48 கல்வெட்டுகள், (1336-1485) துளுவ வம்சத்தார் 55 கல்வெட்டுகள் (1491-1570) நிறைய கிருஷ்ணதேவராயர் கால கல்வெட்டுகள் (1509-29) சில மதுரை நாயக்க வம்சத்தார் கல்வெட்டுகள், திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ளன. அந்தக்கால தமிழ், கன்னடம், சமஸ்க்ரித மொழிகளில் இந்த எழுத்துகள் காண்கிறதால் நமக்கு அதில் சொன்ன விஷயங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்வதுமில்லை. யாராவது மெனக்கெட்டு தெரிந்து கொண்டார்களா என்றும் தெரியாது.
நிறைய கோவில்களில் கல்வெட்டுகள் மீது சிமெண்ட் பூசி, சுண்ணாம்பு அடித்து, தரையில் நடக்க உபயோகித்து வாசல் படிக்கட்டாக உபயோகித்து துஷ்ப்ரயோகம் பண்ணுவதை தான் கண்ணில் ரத்தத்தோடு பார்க்கிறேன். வெளி நாட்டுக்காரர்கள் இப்படி விட்டுவிடுவார்களா ?
நான்காவது கோபுரத்தை அம்மணி அம்மாள் வெகு சிறப்பாக சிவனின் கட்டளைப்படி கட்டி முடிட்பதற்கு முக்கிய காரணமாக இருந்தாள். ஒரு நல்ல நாளில் கும்பாபிஷேகத்தை நடத்தினாள் . இன்றைக்கும் அந்த கோபுரம் அம்மணி அம்மன் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. காசே இல்லாமல் தன்னந்தனியாக ஒரு துறவறம் பேர்கொண்ட பெண் சாதித்து காட்டிய மிகப்பெரிய உலக அளவு சாதனை. அப்போது நாட்டை ஆண்ட வெள்ளைக் காரர்களே மூக்கின் மேல் விரல் வைத்து அம்மணியின் சாதனையை மெச்சி
அதிசயித்தனர்.
சித்த புருஷர்கள் தங்கள் பூமியில் அவதரித்த காரணம் காரியம் முடிந்தவுடன் விடை பெற்று விண்ணுலகம் திரும்புவார்கள். மஹான்கள் அப்படித்தான் மறைந்தவர்கள். அவர்கள் அருள் என்றும் பூமியில் மற்றவர்களுக்கு அவர்களது ஜீவ சமாதியில் நமக்கு பரிபூர்ணமாக கிடைத்து வருகிறது. தனது கடைசி நேரம் வரை பல்லாயிரக்கணக்கான சிவ பக்தர்களுக்கு திருநீறு வழங்கி வாழ்த்தினர் அம்மணி அம்மாள். எத்தனையோ விந்தைகளை, அதிசயங்களை அந்த மந்திரத்திருநீறு புரிந்திருக்கிறது. 1875ம் வருஷம், 50வது வயதான அம்மணி அம்மாள் தை பூச நன்னாளில் கைலாச பதவி அடைந்தார்.
திருவண்ணாமலை செல்பவர்கள் இனியாவது அம்மணியை நினைத்து மனதார போற்றி வணங்கி நான்காவது கோபுர தரிசனம் செய்யுங்கள். கிரிவலம் செய்யும்போது எட்டாவது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அம்மணி அம்மனின் ஜீவ சமாதி உள்ளது. இன்னும் அவரது பெயரால் அளிக்கப்படும் திருநீறு பல வியாதிகளிலிருந்து காப்பாற்றவதாக பக்தர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். அங்கே அமர்ந்து தியானம் செய்தால் மனம் ஆனந்தமயமாக காற்றில் பறப்பதை உணர்வீர்கள்
No comments:
Post a Comment