Friday, October 26, 2018

nappinnai



தெரிந்த பெயர்கள் தெரியாத விபரங்கள்
J.K. SIVAN

ராதையைத் தெரியாதவர்கள் கிடையாது. ஆனாலும் அவளைப்பற்றி நிறைய விஷயங்கள் கிடையாது. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அநேக கேள்விக்குறிகள். கிருஷ்ணன் மீது பிரேமை கொண்டவள். அவளுக்கு வருஷாவருஷம் அநேக இடங்களில் பல முறை ராதா கல்யாணம் கிருஷ்ணனோடு நடந்தாலும் அவன் மனைவி அல்ல. பட்ட மகிஷி அல்ல. கோபியர்களில் கிருஷ்ணன் மனதை கவர்ந்தவள். அவ்வளவு தான். சிறுவயதில் கோகுலத்தில் பிருந்தாவனத்தில் ஒன்றாக சேர்ந்து விளையாடியவர்கள். அவள் அவனை விட பத்து வயது பெரியவளாம். இப்படியும் ஒரு இடத்தில் படித்தேன். வைஷ்ணவம் ஏனோ ராதையை அதிகம் கண்டு கொள்ளவில்லை. காரணம் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமுமில்லை. எனக்கு ராதையை கிருஷ்ணனோடு சேர்த்து பார்க்க படிக்க எழுத பிடிக்கும். வைஷ்ணவத்தில் ராதைக்கு பதிலாக ஒரு பெண் உலவுகிறாள். அவள் பெயர் நப்பின்னை.

ஹரிவம்சத்தில், கருட புராணத்தில், ஆழ்வார் பாசுரங்களில் நப்பின்னை வருகிறாள். அவளை நந்தகோபன் மனைவி யசோதா வின் சகோதரன் கும்பகனின் பெண் என்று சொல்கிறது. கிருஷ்ணனுக்கு வளர்ப்பு தாய் மாமன் மகள். நீளாதேவியின் அவதாரம், அம்சம். கிருஷ்ணன் நப்பின்னையை மணக்க தாயமாமன் ஒரு சோதனை, டெஸ்ட், வைக்கிறான். ஏழு பொல்லாத பலமிக்க காளைகளை கண்ணன் அடக்கவேண்டும். இப்படி ஒரு ஜல்லிக்கட்டுக்கு அப்புறம் தான் நப்பின்னையைக் கை பிடிக்கிறான் ஏழு காளைகளை அடக்கிய அந்த காளை கண்ணன்.

இன்னொரு விஷயமும் இதே அஸ்திவாரத்தில் கட்டப்பட்டு பிரபலமானது தான். சத்யா என்கிற ராஜகுமாரியை அவள் தந்தை நக்னஜித் எனும் அயோத்யா நகர ராஜா ஒரு போட்டி வைத்து தான் கிருஷ்ணனுக்கு அவள் மனைவியாகிறாள். அதே ஏழு காளை விஷயம். காளைகள் கிருஷ்ணன் மட்டும் தான் மாறவில்லை. சத்யா தான் நப்பின்னையா. கும்பகன் தான் நக்னஜித்தா? அயோத்யா?

நாம் கருட புராணத்தை பின் பற்றினால் ''நீளா என்கிற பெண் குழந்தை கும்பகனுக்கு பிறந்தது. அவன் நந்தகோபனின் மைத்துனன். கருடா அப்புறம் என்ன ஆயிற்று தெரியுமா? நான் சிவனை வேண்டிக்கொண்டு கும்பகன் வீட்டுக்கு சென்றேன். வ்ரிஷபாசலன் (ரிஷபாரூடன்) என்றும் அவனுக்கு இன்னொரு பெயர். அவனோடு போர் புரிந்து வென்று கொன்று நீளாவை மணந்தேன்'' என்று விஷ்ணு சொல்கிறார் கருடனிடம்.

நீளாதேவியின் அம்சமாக பிறந்தவள் நக்னஜித் (காவ்யவாஹன் இன்னொரு பெயர்) மகள் சத்யா. ஸ்வயம்வரத்தில் ஏழு காளைகளை அடக்கி வென்று கிருஷ்ணன் சிவன் அருளால் அவளை மணக்கிறான்.

தாத்பர்ய நிர்ணயம் என்று ஒரு நூலில் மதவாச்சார்யர் என்ன சொல்கிறார்? '' அப்புறம் கிருஷ்ணன் நக்நஜித் அரண்மனைக்கு சென்றான். ஸ்வயம்வரம் கூட்டம். அநேக ராஜாக்கள் அவன் மகள் சத்யாவை கை பிடிக்க தயாராக இருந்தார்கள். ஏழு பொல்லாத காளைகள் எதிரே. அவற்றை அடக்குபவனுக்கு சத்யா மனைவி. ஏழுகாளைகளும் சிவனிடம் வரம் பெட்ரா அசுரர்கள். எவராலும் வெல்ல முடியாத பலமிக்க பயங்கர காளைகள். இந்த ஜல்லிக்கட்டில் பல ராஜாக்களுக்கு காயம். கிருஷ்ணன் வென்று நீளாதேவி அம்சமான சத்யாவை மணக்கிறான். அவள் கோபியரில் ஒருவளாக இருந்தவள் (நப்பின்னை?) ''

ஒருவரே ரெண்டு பேராக ஒரே சமயத்தில் இருக்க முடியுமா என்றால் முடியும்.கிருஷ்ணன் பலராமன் ஆகிய இருவராக விஷ்ணு ஒரே சமயத்தில் காட்சி தரவில்லையா? மத்வாச்சாரியார் சொல்வதும் ஞாயம் தான். நீளா தேவி நப்பின்னையாகவும் அதே சமயம் சத்யாவாகவும் இருக்கிறாள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...