Sunday, October 7, 2018

PESUM DEIVAM

பேசும் தெய்வம்:  J.K. SIVAN 

                                                                                   தேவையில்லா வேலை 

மதம் என்பது தனிமனிதன் சுதந்திரம். அவனது மனம் விரும்பும் மார்க்கம்.  அவனது நம்பிக்கை அதில் பக்தியை வளர்க்கிறது. அதில் மற்றொருவன் தலையிட்டு  என் கடவுளை கும்பிடு. வா உனக்கு  துணி தருகிறேன், காசு தருகிறேன், வீடு தருகிறேன், வேலை தருகிறேன் என்று கட்டாயப்படுத்தி தனது மனத்துக்கு  ஆள் சேர்ப்பது அநாகரிகம். அயோக்கியத்தனம். கண்டிக்கத்தக்கது.  

இது இன்றும் நடந்துவருகிறது.  கீழ் தட்டு மக்கள் மேல்தட்டு மக்கள் என்று ஒரு பிரிவு இருந்தவரை கீழ் தட்டு மக்களை இப்படி ஆசை காட்டி மாற்ற முடிந்தது. இப்போது  பணத்தால் எல்லோரையும் விலைக்கு வாங்குவது சகஜமாகிறது.  அவனவனுக்கு சுய சிந்தனை வேண்டும். தன்னம்பிக்கை இருக்கவேண்டும். தைர்யம், திட மனது அவசியம்.  ஏழையானாலும் தனது மனதில் பற்று இருக்க வேண்டும்.  இதில்  ஜாதி குலம் குறுக்கிட அனுமதி இல்லை.

மஹா பெரியவா காலத்தில் இந்த மத மாற்ற முயற்சிகள் நிறைய நடந்து வந்தது அவருக்கு தெரியும். ஒருமுறை என்ன நடந்தது தெரியுமா?  கீழே படியுங்கள்:   ஆனந்த விகடன் சாவி  மணியன்  ஆகியோர்  பெரியவாளை தரிசிக்க இளையாத்தங்குடி போயிருந்தபோது  அவர்களைப்பார்த்து :

”உங்க விகடன்ல கிறிஸ்துவ மதத்துல சேரச் சொல்லி வாரா வாரம் ஒரு விளம்பரம் வரதே, நீ அதை பாத்திருக்கியோ?”

சாவியும், மணியனும் பெரியாரைப் பேட்டி கண்டு விகடனில் எழுதுவதற்காக திருச்சிக்குப் போயிருந்தார்கள். அங்கே பெரியார் மாளிகையில் பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து இளையாத்தங்குடிக்குப் போனார்கள். இவர்கள் போன போது ஸ்வாமிகள் ஒரு மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

சாவியைக் கண்டதும், ‘நேரே மெட்ராசிலிருந்து வரயா ? இல்ல வழில எங்கேயாவது தங்கிட்டு வரயா ?’ என்று கேட்டார்.

‘திருச்சியில் பெரியாரைச் சந்தித்து விட்டு வருகிறோம்’ என்ற உண்மையைச் சொல்ல அப்போது சாவிக்கு தைரியம் வரவில்லை. அதனால், ‘மெட்ராஸ்லேர்ந்து வரோம்’ என்று பொய்யும் சொல்லாமல் மெய்யும் சொல்லாமல் பொதுவாகச் சொல்லி விட்டார்.

ஸ்வாமிகள் அமர்ந்திருந்த அந்தச் சூழ்நிலையே வித்தியாசமாக இருந்தது. சற்று தூரத்தில் யாரோ ஒரு வயசான வெள்ளைக்கார பெண்மணி ஒருத்தி உட்கார்ந்திருந்தார். அந்தப் பெண்மணி அங்கிருந்தபடியே மஹா பெரியவரைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘நீ என்ன சொன்னாலும் வாசன் கேப்பாராமே’ என்று திடீரென ஸ்வாமிகள் பேச்சை ஆரம்பித்தார்.

‘பெரியவா நினைக்கிற மாதிரி அப்படியெல்லாம் இல்லை. பெரியவா ஏதாவது சொல்லச் சொன்னா அதை அப்படியே வாசன் அவர்களிடம் சொல்லத் தயாராக இருக்கிறேன்’ என்றார் சாவி.

‘உங்க விகடன்ல கிறிஸ்துவ மதத்துல சேரச் சொல்லி வாரா வாரம் ஒரு விளம்பரம் வரதே, நீ அதை பாத்திருக்கியோ?’

‘பாத்திருக்கேன்’

‘அந்த விளம்பரத்தை நிறுத்திடணும்னு ஆனந்த விகடன்லேர்ந்து வரவா கிட்டேயெல்லாம் சொல்லிப் பார்த்துட்டேன். அவா எல்லாரும் உன் பேரைச் சொல்லி சாவி சொன்னா வாசன் கேட்பார்னு சொல்றா. அதனால நீ அதை வாசன் கிட்டச் சொல்லி உடனே நிறுத்திடு’ என்றார்.
‘சரி.. சொல்கிறேன்’ என்று சாவி உடனே பதில் சொல்லி விடவில்லை. பெரியவரிடம் கொஞ்சம் வாதாடிப் பார்த்தார்.

‘இந்து மதம் கடல் போன்றது. பெரும் சிறப்புகளை உள்ளடக்கியது. அது அவ்வளவு எளிதில் அழிந்து விடக் கூடியதல்ல. ஒரு வேளை இந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொஞ்சம் பேர் கிறிஸ்துவ மதத்துக்குப் போய் விடுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் ஹிந்து மதத்துக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடப் போவதில்லை.அது அத்தனை பலஹீனமான மதமும் அல்ல’ என்று ஒரு துணிச்சலோடு சொல்லி விட்டார் சாவி.

சாவி இப்படிப் பேசுவதைக் கேட்டு பெரியவர் கோபம் அடையவில்லை.

”அப்படியா சொல்கிறாய் நீ ? இத பார், 1920-லிருந்து எவ்வளவு பேர் இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மாறியிருக்கிறார்கள்’ என்ற புள்ளி விவரங்களை எடுத்துச் சொல்லி ‘வர வர இந்து மதத்திலிருந்து வேறு மதம் மாறுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. இப்படியே போனால் ‘எறும்பு ஊறக் கல்லும் தேயும்‘ என்கிற மாதிரி ஆயிடும்” என்றார் மஹா பெரியவர்.

சிறிது நேரம் மௌனம்.

பிறகு தொடர்ந்தார் மஹா பெரியவர்…

“ஆர்தர் கொய்ஸ்ட்லர்னு ஒரு கம்யூனிஸ்ட் ரைட்டர் என்னை வந்து சந்திச்சான். பல கேள்விகள் கேட்டான். கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்யும் சர்ச்சுகளில் எப்பவும் அமைதி நிலவுகிறது. ஆனா உங்க கோயில்களில் எப்பவும் வாத்தியங்களின் சத்தம், குழந்தைகளின் கூச்சல், மக்களின் இரைச்சல் என்று ஒரே சத்தமாயிருக்கிறதே. பிரார்த்தனை செய்யும் இடம் அமைதியா இருக்க வேண்டாமா ?” என்று என்னைக் கேட்டான்.
-
“சர்ச்சுகள் நீங்க பிரார்த்தனை செய்கிற இடமாக இருப்பதால் அங்கே அமைதி காக்கப்படுகிறது. இந்துக்கள் பிரார்த்தனை செய்வது கோயில்களில் அல்ல. ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகிற இடமாகத்தான் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்று ஒரு அறை இருக்கும். அங்கேதான் பிரார்த்தனை பண்ணுவோம். அதை விட்டால் நதிக் கரையில் பிரார்த்தனை செய்வோம். கோயிலுக்குப் போய் நைவேத்தியங்கள் வைத்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்துவோம். விவசாயிகள் அறுவடை முடிந்ததும் பொங்கல் படைத்து ஆண்டவனுக்கு ‘நன்றி’ செலுத்துவதற்காகவே பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். ராஜாக்களுக்குக் கப்பம் கட்டி நன்றி செலுத்துவது போல் ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதனால் இந்துக்கள் நன்றி செலுத்துகிற இடம் சப்தமாகத்தான் இருக்கும். மேள தாளங்களுடன் மகிழ்ச்சி பொங்கும்” என்று நான் சொன்ன பதிலில் அவன் ரொம்ப ‘கன்வின்ஸ்’ ஆயிட்டான்.
-
“என்னைப் பார்க்கும் போது ஏசுநாதரைப் பார்ப்பது போல் இருப்பதாக (I saw Christ in him) அவன் எழுதிய ‘Lotus and Wheel‘ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளான். உனக்கு டாக்டர் ராகவன் தெரியுமோல்லியோ? மியூசிக் அகாடமி செக்ரட்டரி, அவனிடம் அந்தப் புத்தகத்தோட காப்பி இருக்கு. நீ மெட்ராஸ் போனதும் அதை வாங்கிப் படி” என்று கூறிய பெரியவர் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. “அதோ அங்கே உட்கார்ந்திருக்கிறாளே அந்தப் பெண்மணி, அந்த ரைட்டர் – அவர்கள் இரண்டு பேருமே கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப் பெண்மணியும் என்னிடம் ஏசுநாதரைக் காண்பதாகச் சொல்கிறாள். ஆனா இந்து மதத்தைச் சேர்ந்த நாம் இந்துக்களை கிறிஸ்துவ மதத்தில் சேரச் சொல்லி விளம்பரப்படுத்தறோம், இது சரியா ?” என்று கேட்டார்.
-
இதையெல்லாம் கேட்கக் கேட்க சாவிக்குப் பெரியவர் பேச்சில் இருந்த நியாயம் விளங்கியது. அவரை வணங்கி ஆசி பெற்று, “நான் வாசன் அவர்களிடம் உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்” என்று மட்டும் சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டார்.
-
சாவி சென்னை திரும்பியதும் முதலில் இது பற்றி வாசன் அவர்களைப் பார்த்துப் பேசத் தான் எண்ணியிருந்தார். ஆனாலும் பாலு அவர்களிடமே முதலில் தெரிவித்து அவர் அபிப்பிராயம் அறிந்து கொள்வது தான் முறை என்று தீர்மானித்து பாலு அவர்களிடம் விஷயத்தை எடுத்துச் சொன்னார்.

“இது ஒரு விளம்பரம்தான். நம்ம கருத்து இல்லையே… இதெல்லாம் வியாபாரம்… இது காஞ்சிப் பெரியவருக்கு நன்றாக விளங்குமே!” என்றார் பாலு.

“அதென்னவோ, எப்படியானாலும் விளம்பரத்தை நிறுத்தி விடுங்கள். பெரியவர் வார்த்தைக்கு நாம் மதிப்புத் தர வேண்டியது அவசியம்” என்றார் சாவி.
-
சாவி நீண்ட நேரம் விவாதித்துப் பார்த்தார். பாலு அவர்கள் சம்மதிக்கவில்லை.
-
சாவியும் விடாக் கண்டனாயிருந்து மேலும் மேலும் வாதாடிக் கொண்டிருந்தார். கடைசியில் பாலு சற்று நேரம் யோசித்து விட்டு விளம்பரத்துறை மேலாளரை அழைத்து அந்த விளம்பரம் பற்றிய விவரங்களைத் தெளிவாக விசாரித்துத் தெரிந்து கொண்டார்.
-
‘ஒரு வருட ஒப்பந்தம். இன்னும் ஆறு வாரம் பாக்கியிருக்கிறது’ என்றார் மேலாளர்.
-
‘பரவாயில்லை. இந்த வாரமே அதை நிறுத்தி விடுங்கள். அந்த விளம்பரம் தந்தவர்களுக்கு கன்வின்சிங்கா ஒரு லெட்டர் எழுதி விடுங்கள்’ என்று சொல்லி அனுப்பி விட்டார். சாவி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
-
‘இப்போது திருப்திதானே ?’ என்று கேட்டார் பாலு.
-
‘ரொம்ப ரொம்ப…’ என்று சாவி நன்றி உணர்வோடு அவரைப் பார்த்தாராம்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...