Thursday, October 18, 2018

oru arpudha gnanai




ஒரு அற்புத ஞானி         J k. sivan 


சேஷாத்திரி ஸ்வாமிகள்
     
                                                                              
                                                                        சித்தன் போக்கு சிவன் போக்கு''

ஒரு அற்புத ஞானி சேஷாத்திரி ஸ்வாமிகள் என்றால் மிகையாகாது. அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் ஏதோ ஒரு பக்தருக்கு  அருள் புரிந்தவராக, துயர் தீர்க்கும் தெய்வமாக வாழ்ந்தார் என்பது வெளியே தெரியாமல் வாழ்ந்த மஹா  சித்த புருஷர்.

சாம ராவ்  சமாச்சாரம் பார்க்கலாம்:

தாலுக்கா ஆபிஸ் குமாஸ்தா உத்யோகம் பார்த்த  சாம ராவுக்கு  வீட்டில் நிம்மதி இல்லை. அவர் மாமியார் உடல் நலம் பாதிக்கப் பட்டு  அவளைக்  கவனிக்க கூட ஆளில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.  அவர்  சேஷாத்திரி ஸ்வாமிகளின் தீவிர பக்தர்களில் ஒருவர்.  திருவண்ணாமலையில் வசித்தவர்.  அடிக்கடி ஸ்வாமிகளை தேடிப்  போவார். பாதிநாள் ஸ்வாமிகள் கண்ணில் தென்படமாட்டார்.  அதிர்ஷ்டம் இருந்தால்  பார்க்கலாம்.  பாக்யம் இருந்தால் பேசுவார்.

ஒருநாள் பல முயற்சிகளுக்குப் பிறகு  ஸ்வாமிகளை  சிவகங்கை குளத்தருகே பார்த்து  சாமராவ்  அங்கேயே தரையில் விழுந்து நமஸ்கரித்தார்.

''சுவாமி  என் மாமியார் உடம்பு ரொம்ப முடியாம  கஷ்டப்படறா. மருந்துலே  குணம் ஆகலை.   அவள் தான் வீட்டைப்பார்த்துக்கிறவ. குணமடைவாளா?''   என்று வருத்ததோடு சாமராவ் ஸ்வாமிகளை கேட்டார் . சிவகங்கை குளத்தில் இறங்கி  ஜலத்தில்  ஸ்வாமிகள்  நின்றுகொண்டிருந்தார்.

'திருவண்ணாமலைக்கு டிக்கெட் வாங்கியாச்சு. ஓ,    இது தானே  திருவண்ணாமலை. இப்படி முழுக்கு '''   என்று  கடகடவென்று ஸ்வாமிகள் சிரித்தார்.  நீரில் மூழ்கி எழுந்தார். அப்புறம் ஒன்றுமே பேசவில்லை. அங்கிருந்து போய்விட்டார்.

சாமராவுக்கு  ஸ்வாமிகள் சொன்ன வார்த்தைகளின்  அர்த்தம் அன்று இரவு தான் புரிந்தது. அன்றிரவே  அந்த அம்மாள் சிவலோகப் பிராப்தி அடைந்தாள். சிவ பக்தை ஆகையால்  ''அருணாசலா என்று கடைசியாக சொன்னாள் ''  அது தான் திருவண்ணாமலைக்கு  டிக்கெட்டோ.  அருணாசலேஸ்வரரை அடைந்து விட்டாள்  என்பதை  ''ஓ  இது தான் திருவண்ணாமலை'' என்று  ஆலயத்தை சுட்டிக்காட்டியது புரிந்தது.  முழுக்கு  தான்  உன்னால் முடிந்தது, எல்லாமே முடிந்தது  என்று அர்த்தம்.  ??

++
சேஷாத்திரி  ஸ்வாமிகள் என்ற கடலில் மூழ்க மூழ்க முத்துக்கள் கை  கொள்ளாமல் கிடைக்கிறது. அதன் அடியில் செல்ல முடியாத பெரும் ஆழம்.....

திருவண்ணாமலையில் சுந்தர சாஸ்திரியை தெரிந்தவர்கள்  நிச்சயம் அவரிடம் வேதம் சாஸ்திரம் பயின்றவர்களாக இருப்பார்கள். சேஷாத்திரி ஸ்வாமிகளிடமும் பராசக்தியிடமும் அதிக பக்தி ஈடுபாடு.  குழந்தை பாக்யம் தக்கவில்லை.  வயதும் ஏறிக்கொண்டே போகிறதே. கவலை அவரைத் தின்றது. ஒருநாள் மனம் உடைந்துபோய் சுவாமியிடம்  கதறினார்.
காலைப்பிடித்துக்கொண்டார்.

''எழுந்திருடா'' என்று வணங்கியவரை பிடித்து தூக்கி தலையில் ஒரு அடி அடித்தார்  ஸ்வாமிகள்.
 ''புள்ளே பொறப்பான்.  நீ விடாம  லலிதா சஹஸ்ர நாமம் சொல்லிண்டுவா . சீக்கிரம் புள்ளையைத் தூக்கிண்டு வா''.  ஒரு சில மாதங்களில்  ஸ்வாமிகளின்  ஹஸ்த நக்ஷத்ரத்திலேயே  ஒரு குண்டு பையன் பிறந்தான்.  சந்தோஷத்தோடு  சாஸ்திரி அவனுக்கு  ''சேஷாத்திரி'' என்றே பெயர் வைத்தார்.  திருவண்ணாமலையில் மட்டுமல்ல  அநேக பக்தர்கள் வீட்டிலும் சேஷாத்திரி என்ற பெயர் சர்வ சாதாரணம்.
 +

வைணவ சைவ சம்பந்தங்கள் பல  குடும்பங்களில் வெகுகாலமாக இருக்கிறது. இப்போது புதிதாக வந்ததல்ல.  ராமசாமி முதலியார் மனோன்மணி எனும் தம்பதிகளுக்கு  இரு பெண்கள் பிறந்தார்கள். சொகுசாம்பாள்  வள்ளியம்மாள் என்று பெயர்.  சொகுசாம்பாளை  சைவ முதலியார் குடும்பத்திலும் வள்ளியம்மாளை வைஷ்ணவ ஐயங்கார் குடும்பத்திலும் சம்பந்தம் செய்து கொண்டார்.   பாவம், அந்த இரு பெண்களுக்கும்  பித்த வாத  ஜுரம் வந்து தவித்து  ரொம்ப ஆபத்தான நிலை உண்டாகி  தந்தி கொடுத்து உறவினர்களும்  வந்து சேர்ந்து விட்டார்கள். முதலியார் சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தராச்சே.  ஓடினார்.  தம்பதிகள்  அவருக்காக  காத்திருந்து அன்ன சத்திரத்தில் பார்த்து விட்டு அவரிடம் சென்று அழுதார்கள்.
''மனோன்மணி,  ஸ்வாமிகளை வணங்கி  என் பெண்கள் பிழைக்குமா?'' என்று  அழுதுகொண்டே கேட்டாள் .
 ''அய்யங்கார் வீட்டுப்  பெண் அபாக்யசாலி'' என்று சொல்லிவிட்டார் ஸ்வாமிகள்.  அன்றிரவே  வள்ளியம்மாள்  காலமானாள். ஸ்வாமிகள் நேராக அவர்கள் வீட்டுக்கு இரவே வந்துவிட்டார்.  ''வள்ளி போய்ட்டாளா. சொகுசாம்பாள் கொடுத்து வைத்தவள் '' என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...