Monday, October 22, 2018

PESUM DEIVAM



பேசும் தெய்வம்  J.K. SIVAN 

         ரெண்டு சீட்  இருக்கு 

சங்கீத உலகத்தில் தனக்கென ஒரு கனமான  அடித்தொண்டை சாரீரத்தால்  மந்திர வித்தையால் கட்டிப்போட்டதை போல ரசிகர்களை மகிழ்வித்தவர்  ஸ்ரீ M D  ராமநாதன். அவரது குரு டைகர் வரதாச்சாரியார். அவரைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் என்ற அளவுக்கு விஷயங்கள் உண்டு. ஒவ்வொரு வித்வானுக்கு தனித்த தன்மை,  பாணி, கற்பனாசக்தி, சங்கீத ஞானம் பரிமளித்தது. இது ரசிகர்களுக்கு கிடைத்த பெரிய விருந்து.

அந்த டைகர் வரதாச்சாரிக்கு  ஒரு ரெட்டையர்கள் சிஷ்யர்களாக இருந்தார்கள். அவர்கள் தான்  ஸ்ரீ B V  ராமன்.  ஸ்ரீ  B V. லக்ஷ்மணன்.  சாஸ்திரீய சங்கீதத்தில் சிறந்த ஞானத்தோடு, கீர்த்தனைகள், ஸ்லோகங்கள், பிரபந்தங்களை எல்லாம்  அற்புதமாக ஒலிக்கச்  செய்தவர்கள். கர்நாடக இசை உலகத்தில் கொடிகட்டி பறந்தவர்கள் இந்த  ரெட்டையர்கள்.

காஞ்சி பரமாச்சார்யாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள்.  மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவை காஞ்சிப்பெரியவரின் உத்தரவின் பேரில் தொடங்கியவர்கள். 

அடிக்கடி அவர்கள் குரல்  காஞ்சி மடத்தில்  மஹா பெரியவா முன்னால்
ஒலிக்கும்.  ஒருமுறை, நவராத்திரி பூஜை மூன்றாம் நாள் விழாவுக்கு காஞ்சிமடத்தில்  இந்த ரெட்டையர்கள் பாட ஏற்பாடு. ஆனால்  அந்த நாளில்  அவர்கள்  திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலிலும் நவராத்திரி நிகழ்ச்சியில் பாட  திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து 
இந்த ரிட்டையர் வித்வான்களுக்கு அழைப்பு வந்தது. 

ரொம்ப பவ்யமாக   ஏற்கனவே  காஞ்சி காமகோடி மடத்தில் கச்சேரி இருப்பதால், பாடவேண்டியிருப்பதை குறிப்பிட்டு   திருவனந்தபுரத்திற்கு பதில் கடிதம் அனுப்பி வைத்தனர்.  இருந்தபோதிலும்,  நவராத்திரி விழா துவங்குவதற்கு இருபது நாளைக்கு முன் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்து சகோதரர்களுக்கு மீண்டும் அழைப்புக் கடிதம் வந்தது. அதில் நவராத்திரி கலைவிழாவில் முதல்நாள் பாடவேண்டிய பாலக்காடு கே.வி. நாராயண சுவாமிக்கு வரமுடியவில்லை. அவர் மூன்றாம் நாள் பாட வருவதாக ஒத்துக் கொண்டார். அதனால் முதல்நாள் நிகழ்ச்சியில் அவசியம் பாடும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். சகோதரர்கள் இருவரும் ரயிலில் முன்பதிவு செய்ய முடியாததால், பஸ்சில் திருவனந்தபுரம் கிளம்பினர். முதல்நாள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மூன்றாம் நாள் காஞ்சிபுரம் புறப்பட்டனர்.  

வழியில் கன மழை பிடித்துக்கொண்டது. அடாடா  இப்படி யாகிவிட்டதே, நம்மால்  நவராத்திரி மூன்றாம் நாள் அன்று காஞ்சிபுரத்தில் இருக்குமுடியுமா? என்று கவலையும்  வருத்தமும் உண்டானது. 

''மஹா பெரியவா  நீங்களே கதி, உங்கள் திருவடிக்கே சரணம்'' என்று  வேண்டிக் கொண்டு மழையை லக்ஷியம் பண்ணாமல் நனைந்து கொண்டு பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தனர்.  அப்போது ஒரு  எக்ஸ்பிரஸ் பஸ் சென்னைக்குக் கிளம்பத்   தயாராக இருந்தது.    பஸ்ஸில்  இடம் கிடைக்குமா?  மழை தொர  தொர வென்று கொட்டிக் கொண்டிருக்கிறதே. பஸ்ஸில் கூட்டமாக இருக்கிறதே.?  இதை விட்டால் காஞ்சிபுரம் நேரத்திற்கு போய் பெறமுடியாத நிலை.   பெரியவாளை வேண்டிக்கொண்டே கண்டக்டர் முன் நின்றபோது  யாரோ ரெண்டு பேர் நாங்கள் பிரயாணம் செய்யவில்லை பணம் திருப்பி தரவேண்டும்  என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். சந்தோஷமாக அவர்களிடம் பணம் கொடுத்து விட்டு சௌகர்யமாக  அந்த ரெண்டு இருக்கைகளில்  அமர்ந்து கொண்டார்கள். பஸ் உடனே கிளம்பிவிட்டது. 

 நவராத்ரி மூன்றாம் நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தனர். காலை பத்து மணிக்கு பூஜை ஆரம்பம். பூஜையில் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடினார்கள்.  பிரசாதம் வழங்கும் நேரம்… 

சங்கீத ரெட்டையர்கள்  பெரியவா  முன் நின்றார்கள்.  பெரியவா முகத்தில் புன்னகை.  

 “”என்ன! நவராத்திரி விழாவில் முதல் நாள் பாடியாச்சா? நல்ல மழையாச்சே! எப்படி  கடைசி நிமிஷம் டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?”  

திருவனந்தபுரம் சென்று வந்த விஷயம் பெரியவருக்கு எப்படி தெரிந்தது என்று சகோதரர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். சாஷ்டாங்கமாக அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, 

”பெரியவா அனுகிரஹத்தாலே திருவனந்தபுரத்திலேயும், காஞ்சியிலேயும் பாடும் வாய்ப்பு கிடைச்சுது!” என்று பணிவுடன் சொன்னார்கள். 

 “”அப்படி ஒன்றும் இல்லை! அம்பிகை தான் ஒரே கல் அடிச்சு  உங்களுக்கு இரண்டு மாம்பழம் கொடுத்துட்டான்னு சொல்லு!” என்று பெரியவா சிரித்துக்கொண்டே வாழ்த்தினார்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...