Monday, October 29, 2018

JKS STORIES




            உலகம் பலவிதம்.    J.K. SIVAN 

கொடை வள்ளல்  யார் பேராவது ஒன்று சொல்லு என்றால் எனக்கு  பாரி, ஓரி, காரி என்று எல்லாம் சொல்ல வராது. உடனேயே பட்டென்று  பட்டாபிராமன் என்று தான் சொல்வேன்.

பட்டாபிராமன் எந்த ஊர் அரசர், என்ன வள்ளல் தன்மை அவரிடம் என்று யோசிக்கவேண்டாம். அவர்   பழைய மாம்பலம்  பார்ட் டைம் ஜோசியர். பள்ளிக்கூட வாத்தியார்.    வேலை ஒய்வு பெற்று பலகாலம் பள்ளியில் பாடம் எடுக்கும் நேரத்தில் குரு, புதன், சுக்ரன் எங்கெல்லாம்  எப்போதெல்லாம் வீடு மாறுகிறார்கள் அதனால் வீட்டுக்காரனுக்கோ, ஜாதகனுக்கோ என்ன பலன் என்று யோசித்து கணக்கு போட்டு  அனுபவம் பெற்றவர்.  அவர் எப்படி கொடை வள்ளல் என்று பெயர் பெற்றார் என்பது தான் இங்கே  நான் விளக்கவேண்டியது அவசியமாகிறது. 


சுப்ரமணியன்  பட்டாபி அய்யர்  தம்பி.  ரொம்ப ஞாபக மறதி. ஒரு விதத்தில் விசித்திர ஞாபக மறதி கூட.   நமக்கு ஞாபகமறதி என்றால் போன இடத்தில் செருப்பை விட்டு விடுவது, மேல் அங்கவஸ்திரத்தை மறந்து வைத்து விடுவது,  குடை, கைப்பை, பொடி டப்பா, பர்ஸ் (அதிகம்  நாம் தொலைக்காத, ஆனால்  நமக்கு தெரியாமல் அபேஸ் ஆகும்,  கோட்டை விடும் வஸ்து பர்ஸ் ) ஆனால்  சுப்ரமணியனுடைய  ஞாபக மறதி விசேஷமானது. எங்கேயாவது வெளியே போனால்  ஞாபகமறதியாக யாரிடமாவது பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் மேசையில் இருந்த பேனா, சாவி, சாக்பீஸ்  எதையாவது எடுத்து பையில் போட்டுக் கொள்வான்.  புதிதோ பழையதோ  எவர் செருப்பிலாவது காலை நுழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவான். அவனிடம் புது செருப்பு இல்லாததால் பாவம் அதன் சொந்தக்காரருக்கு அவனது பழைய செருப்பு ஆறுதல் பரிசு அளிக்கும்.

அதே போல் தான் அடிக்கடி உள்ளூர்  பொது இலவச நூலகம் செல்வான்.  செய்தித் தாள் எல்லாம் படிப்பான். வெறும் கையோடு  போனவன் ஏதோ ஒரு குடையோடு வீட்டுக்கு வருவான்.  கொடையாளி  இலவசமாக  நூலகத்தில் ஊர் செயதிகள் எல்லாம் அறிந்து கொண்டு தன்னுடைய குடை இன்றி வீடு செல்வார்.  

பட்டாபிக்கு  சுப்ரமணியன் ஞாபகமறதி தெரியும்.  வீட்டில் குடை அதிகமாக இருந்தால் யாராவது வந்து கேட்கப்போகிறார்களே, இந்த குடை என்னுடையது இங்கே எப்படி வந்தது என்று கேட்பார்களோ என்று பயம்  ஆகவே  கோவிலுக்கு சென்று அங்கே  ஞாபகமாக  ''மறந்து போய் '' குடையை வெளியே செருப்பு விடும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிடுவார்.  யாராவது  ஏழைகள் வழியில்  மழையில் நனைந்தால், வெயிலில் காய்ந்தால் ஓடிச்சென்று  வலது கை  கொடுப்பது இடது கை  அறியாமல் ஒரு குடையைக்   கொடுத்து விடுவார்.  இது சில காலமாக நடப்பது எனக்கு சமீபத்தில் ஒரு ஊர்க்குருவி,  (கோபாலன் தான்-- எங்கு யார் வீட்டில் என்ன நடந்தாலும்  இந்த கழுகுக்கு மூக்கில் வியர்த்து விடும்)  மூலம் அறிந்த விஷயம்..  

இதில் பட்டாபி அய்யர்  தனக்கு  கெட்ட பெயர் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்ததற்கு  ஒரு காரணம் சொல்ல வேண்டியி ருக்கிறது.   ஜோசியத்தை தவிர  அவருக்கு இன்னொரு விதமான உத்யோகம். அதுவும் பார்ட் டைம் தான்.  கையிலும் காசு, வயிற்றிலும் நல்ல சாப்பாடு. அதோடு கூட  வாருங்கோ என்று கூப்பிட்டு கால் கழுவி விட்டு  மரியாதையோடு சந்தன குங்குமம் வேறு தந்து எல்லோரும் நமஸ்காரம் பண்ணி  திருப்தியாக சாப்பீட்டீர்களா என்று கேட்பார்களே!  இன்னும் புரியவில்லையா?

அந்த பேட்டை யில்  பிரபல ராமு கனபாடிகள் நிறைய வீடுகளில் வாத்யார். வைதிகர்.   சுப அசுப காரியங்கள் பண்ணி வைப்பவர். அடிக்கடி  அவருக்கு உதவியாளர்கள் தேவைப்படும். ரிட்டையர் ஆனவர்களில் கைக்கடக்கமாக  சிலரை வைத்திருப்பவர் . அதில் ஒருவர்  பட்டாபி. சாது.  ப்ராம்மணார்த்தம் சாப்பிட அழைத்து செல்வார்.   பட்டாபி அக்ஷதை போடுவார். ததாஸ்து சொல்வார்.  சின்ன சின்ன மந்திரங்கள் மனப்பாடம்.  ராமுவுக்கு  வேண்டிய  ஸாமக்ரியைகளை வாங்கி வருவார். ராமு பட்டாபிக்கு என்று சொல்லி ஐநூறு வாங்கினால் அதில் 200 ரூபாய் தான்  தருவார்.  பட்டாபி மீதி எங்கே என்று கேட்கமாட்டார். அவருக்கே தெரியும். தனது மந்திர ஞானத்திற்கு இருநூறு அதிகம் என்று.     வேஷ்டி சொம்பு செருப்பு எல்லாம்  ராமு வாத்யார் தான் வைத்துக்கொண்டு  சின்ன குடைகள்,  பஞ்ச பாத்திரம் சந்தனக்கட்டை துண்டு, வாழைக்காய், அரிசியை பட்டாபியிடம் கொடுத்துவிடுவார். 

ஆகவே அவருக்கும் பல இடங்களில்  குடைகள்  பஞ்சபாத்ர  கீதை புஸ்தகம்   தானம் கிடைக்கும். ஆகவே  யாருக்காவது குடையை விற்றால் அது  ராமுவுக்கு தெரிந்து தெரிந்தால் கோபிப்பார். அது அவர் உரிமை.  சுப்பிரமணி குடையை விற்றாலும் அபவாதம்.   தப்பாகி விடுமே. ஆகவே  தான் கொஞ்சம் புண்யம் தேட இப்படி  ''கொடை '' தானம் செய்து கொடையாளி ஆகிவிட்டார்.  நாம் குடை என்று எங்கே சொல்கிறோம் ? கொடை  என்று தானே வாயில் வார்த்தை வருகிறது?

இதை யாரையாவது குறை சொல்வதாக கொள்ள வேண்டாம். எங்கோ சில இடங்களில் இப்படியும் நடப்பதுண்டு என்பதால் எவரையும் குறிப்ப்பாக உணர்த்துவது  ஆகாது.  ஆனந்த விகடனில் அப்போதெல்லாம் ''இதில் வரும் பெயர்கள் பாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுபவன அல்ல '' என்று எழுதி இருக்கும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...