யாத்ரா விபரம் J.K. SIVAN
வந்தவாசி அருகே சில கிராம கோவில்கள்.
19.8.2018 அன்று எருமை வெட்டி என்கிற பிடிக்காத பெயரில் ரொம்ப பிடித்த அம்ருத கடேஸ்வரர் அபிராமி அம்பாளை தரிசித்து விட்டு சற்று தூரம் சென்று வந்தவாசியை அணுகியபோது ஒரு அற்புத கோவில் வழியில் தென்பட்டது.
பாக்ஷீஸ்வரர் ஆலயம் என்று அதற்கு பெயர். மிக அருமையான கண்கவரும் கோபுரம் நிறைய புராண சம்பவங்கள் சிலா ரூபத்தில் சுதையாகி நின்றது. ஒரு பெரிய பக்ஷியாக கருடன் சிவனை வணங்குவது ஆச்சர்யமாக இருந்தது. எதனால் கருடன் சிவனை வணங்கினான் என்பது ஆராய வேண்டிய தில்லை. கருடன் வணங்கினான் நாம் வணங்கவேண்டாமா என்று ஞாபகப் படுத்துவதற்காக என்று எடுத்துக் கொள்வோம்.
நாம் கோவில்களை மறக்கிறோம். நிறைய பேர் மறுக்க கிளம்பிய காலம் இது. பக்தி என்பது கேலிக்கிடமாகி விட்டது. பக்தி கொண்டவன் ஒரு புறம் பைத்தியக்காரனாகவும் மறுபுறம் சந்தர்ப்பவாதியாகவும் தோற்றம் அளிப்பது தான் வளர்பிறை தேய்பிறையோ?
பக்தியை நாம் ஒற்றுமையாக காலம் காலமாக பின் பற்றுவது போதவில்லை என்பதால் நமது நீதி மன்றங்கள் மூலம் அறிவுரை பெரும் வசதி நமது முன்னேற்றம் தானே!!
அணுக்காவூர் என்று வழியில் ஒரு சிறு கிராமத்தில் வாலீஸ்வரரை பார்த்தது பற்றி சொன்னேனே. அங்கே ஒரு சிவனும் தரிசனம் தந்தார். ராஜராஜேஸ்வரன் என்று பெயர். அவருக்கு கற்பூரம் ஏற்றி ஸ்லோகம் சொல்லி புஷ்பங்கள் சார்ந்தும் பாக்யம் கிட்டியது. ஒரு கோவில் ப்ரம்மாயினி பார்த்தேன். 80 வயதில் இதுவரை எல்லா கோவில்களின் கோஷ்டத்தில் பிரம்மாவை தரிசித்ததுண்டு. இங்கே தான் ப்ரம்மாயினி முதல் முறையாக !
நிறைய கோவில்கள் இருக்கிறதே. பழங்கால சின்னங்கள். நம் முன்னோர் கண்டு களித்த ஆலயங்கள். அவர்களை மதிப்பதற்காகவாவது இந்த அருமையான கோவில்களை அந்தந்த ஊரிலேயே இருப்பவர்கள் சிலர் முயற்சி எடுத்து முக நூலிலோ, வாட்ஸப்பிலோ போடலாமே. எதெதையோ இரவும் பகலாக திருப்பி திருப்பி அனுப்புகிறார்களே. அழித்து ஒழித்து கை விரல்கள் அளவில் குறைந்து போகிறதே. இதை செய்யக்கூடாதா?
No comments:
Post a Comment