Saturday, October 13, 2018

garudapuranam



கருட புராணம்       J.K. SIVAN

                                                                                     

மரணத்துக்கு பின்னால்......2

 நண்பர்களே  உங்களை பயமுறுத்துவது என் நோக்கமில்லை.  இப்படி ஒரு கருட புராணம் இருப்பதை நீங்களும் அறியவேண்டும் என்ற எண்ணத்தோடு  எழுதியது. .  தண்டனைகள் ;போலீஸ், சிறை, எல்லாமே  மனிதர்கள்  ஒழுக்கமாக வாழவேண்டும், தவறுகள் செய்யக்கூடாது என்பதற்காகவே.   சவுதி அரேபியாவில் திருடினால் கையை வெட்டுவார்களாமே. இங்கே அந்த தண்டனை இருந்தால்  பாதி பேருக்கு கையே  இருக்காதே. ஆகவே இவைகளை நன்றாக  பரப்பி தண்டனைக்கு பயந்து தப்பு செய்யாமல் இருக்கட்டுமே. நல்லது தானே ?


கருட புராணம் பகவான் விஷ்ணு கருடனிடம் மக்களின் பாவங்களுக்கு ஏற்ப நரகத்தில் என்னென்ன தண்டனைகள் கொடுக்கப்படும் என்பது பற்றி நமக்கு கேட்கும்படியாக உரக்க சொன்னது 

மகா ரௌரவ நரகம்:  இது யாருக்காக ஏற்பட்டது என்றால்,  தன்னலத்திற்காக, சுயநன்மைக்காக,
கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள்,  பேராசைப்பட்டு, பிறர் பொருளுக்காக அவர்கள் குடும்பங்களை நாசம் செய்தவர்கள் ஜாக்கிரதையாக  போய் சேர்வதற்காக.   அங்கே அவர்களுக்காக யார்  மரியாதையுடன் வரவேற்க  காத்திருப்பார்?   குரு என்ற பார்ப்பதற்கே கோரமான மிருகம் ஒன்று  . இப்படிப்பட்ட   பாபம் செய்தவர்களைச்  சூழ்ந்து, முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும். கொஞ்சம் கொஞ்சமாக  விரல்களை கடித்து சுவைத்து, மூக்கு காது கண் வயிறு எல்லாம் நிறைய பற்களோடு கடித்து சுவைத்து ருசித்து சாப்பிடும்.

கும்பி  பாகம்: இது  ஏதோ  நளபாகம் என்ற சிறந்த உணவு என்று நாக்கில் ஜாலம் சொட்ட
வேண்டாம். நரகத்தின் ஒரு பகுதி.   தனது  உணவுக்காக  பிற உயிர்களை துன்புறுத்துதல், கொல்லுதல்,    வதைத்தல் ஆகியவற்றை  செய்தவர்களுக்கு  மேலே  யமதர்ம ராஜன் ஏற்படுத்தியது.

தனது நோட்புக்கில்  எந்த தேதியில்  யாருக்கு என்னென்ன  கெடுதல்  கிடுதல் செய்தான்  என்று  விபரம் குறித்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப  சரியான சைஸ் கொப்பரையில்  தாங்கமுடியாத கொதிக்கும் சூட்டில்  அப்பம், அப்பளம், வடை போல்  பொறித்து எடுப்பான்.இது நமக்கு தெரிந்த ஒன்றுதான், எண்ணெய்க் கொப்பறையில் போட்டு துன்புறுத்தப் படுவோம் என்று நிறைய பேருக்கு தெரியுமல்லவா.  அப்பளம் சாப்பிடும்போது, வடை சாப்பிடும்போதெல்லாம் தப்பு செய்ய கூடாது என்று எண்ணவேண்டாமா? இல்லையென்றால் நாமும் இந்த வடை, அப்பளம் தான்.

காலகுத்திரம்:  இது ஒரு நன்றாக டிபார்ட்மென்ட்.    பெரியோர்களையும், பெற்றோர்களையும் அவமதிப்பவர்கள், துன்புறுத்துபவர்கள் போன்ற குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை கொடுக்கும் இடம்.  இங்கே  அப்படி செய்தவர்கள்  மேலே சென்றதும், அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு பட்டினி போடப்படுவார்கள்.  தேவையா?

அசிபத்ரம்:  தெய்வ நிந்தனை செய்தல், அதர்ம வழியை கடைபிடிப்பவர்கள் போன்றவர்களுக்கான தண்டனை. பூதங்கள் மற்றும் பேயால் பயமுறுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள். நமக்கு தெரிந்தவர்கள்  நிறைய பேர் பெரிய கும்பலாக இந்த அறைக்கு செல்ல தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கும் இது தெரியட்டுமே  என்றால்  அவர்களுக்கு தான் இதிலும் நம்பிக்கை இல்லையே. அனுபவம் சொல்லித்தரும்.

பன்றிமுகம்:  இப்படி பெயர் கொண்ட ஒரு விசித்திர மிருகம்.  அதை ஸ்பெஷலாக வளர்க்கிறான் நரகத்தில் யமன். அதற்கு நிறைய தீனி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.  ஏனென்றால்  குற்றமற்ற எளியோர்களை தண்டிப்பவர்கள், நீதிக்குப் புறம்பாக நடக்கும் நபர்களை  நம்பி தான்  இந்த பன்றி முகம் கொண்ட கொடிய மிருகம் தனது கூர்மையான அநேக பற்களோடு  வாயைத் திறந்துகொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது.  
அதன் வாயில் அகப்பட்டு,   அதன் கூரிய பற்களால்  சதக் சதக் என்று  கடிக்கப்பட்டு இப்படிப்பட்ட பாவம் செய்தவர்கள் அவதிப்படவேண்டும். கண்னை  ஒரு கணம் மூடிக்கொண்டு இப்படி ஒரு பெரிய கருப்பு மிருகம் கடித்தால் எப்படி இருக்கும் என்று தொப்பையை தடவிப் பாருங்கள்.

அந்த கூபம்:   இது ஒரு பெரிய  அகல ஆழமான தொட்டி இருக்கும் இடம்.    இதில்  யாரை  தூக்கிப்  போட்டுவிடுவார்கள் தெரியுமா?  பிற  உயிர்களை கொடுமையாகக்  கொன்று சித்ரவதை செய்பவர்கள்,  துரோகம், கொலை, புரிவோர்களை. நரகத்தின் ஒரு தனிப்பகுதி  ''அந்த கூபம்''.   

 தொட்டியில்  பெரிய பெரிய   மாடுகள் போன்ற மிருகங்களால்  நசுக்கி, மிதிக்கப்பட்டு ஐயோ காள்  காள்  என்று கத்திஎன்று   யாரும் கேட்கப் போவதில்லை. அது வழக்கமான சத்தம் தானே என்று கவனிக்காமல் போய்விடுவார்கள்.

அக்னிகுண்டம்:  அர்த்தம் புரிகிறதா?  இங்கே    ஜிவ்வென்று   ஜ்வாலை வீசிக்கொண்டு  ஆயிரம் நாக்குகளோடு  அலையும் தீ நிறைந்த பெரிய  யாக குண்டம் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும். 

நிறைய பேர்களை கொள்ளும். கவலை வேண்டாம்.  இடவசதி நெருக்கடி கிடையாது.  பிறரின், பொருளை, சொத்தை,  உடைமைகளை தனது வலிமை,  அதிகாரம், பதவி, மூலம்  அப கரிப்போர், பலாத்காரம் செய்வோர், செல்வாக்காலும்  பலாத்காரத்தாலும்  மற்றவர்களுக்கு துன்பம்  தீங்கு  செய்தவர்களுக்காக   பிரத்யேகமான நரகம்.  என்ன  தண்டனையாம்?  
 இவர்கள் கை, கால் கட்டப்பட்ட நிலையில்நீண்ட தடியில் மிருகத்தைப்போல் பிணைக்கப்பட்டு  ழ்ந்த பாவிகள் அக்னியில் வாட்டி எடுக்கப்படுவார்கள்-- சுட்டப்பளம் தான். அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டம்:
   கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம் தக்க ட்ரீட்மென்ட்  தரப்போகிறது.  சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அங்கேயும் கட்டி தழுவ வசதி உண்டு.  ஆனால்  அப்படி யாரைக்  கட்டித்தழுவலாம் என்றால் நெருப்பால் செய்யப்பட்ட  சிகப்பாக ஒளிரும் பொம்மைகளை.  ஆணையோ பெண்ணையோ கூடி மகிழும் காம வெறியர்களுக்கான  குளுகுளு  வசதி இது. 

இப்போதைக்கு இது போதும். மேற்கொண்டு  பார்ப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...