Saturday, October 27, 2018

NOSTALGIA



ஒரு பழங்கதையில் பிள்ளையார் J.K. SIVAN

எங்கள் பூர்வீகம் தஞ்சாவூர். அதற்கும் எனக்கும் இருக்கும் ஒரே தொடர்பு அந்த பெயர் தரும் மயக்கம். புகை படிந்த சில நினைவுகள். அவை என் சொந்த அனுபவம் அல்ல, அங்குமிங்குமாக எப்போதோ என் தாயிடம் அறிந்த , தந்தை சில வார்த்தைகளில் சொன்ன, இப்போது என் மூத்த சகோதரன் மூலம் அறிந்த தொடர்பு அறுந்த விவரங்கள்.

கிருதா மீசை தேள் கொடுக்கு போல் ரெண்டு கன்னங்களிலும் கூறிய முனையோடு திருகி விடப்பட்டிருக்கும். . புசு புசு வென்று மீசையோடு தாடி. நெற்றியில் பட்டையாக விபூதி. காதுகளை மறைத்து தலையில் கெட்டியாக சுற்றப்பட்ட முண்டாசு. அடர்ந்த கம்பளிப்பூச்சி புருவங்கள். கழுத்தை மறைத்து முழங்கால் தாண்டி அடர்ந்த நீளமான ஒரு கனமான கோட்டு . அதில் வரிசையாக கழுத்து ஆரம்பத்திலிருந்து எட்வர்ட் கால வெள்ளி ரூபாய் போல பெரிய ரவுண்டு பித்தான்கள் .இடுப்பில் பஞ்சகச்சம். காலில் மரக்கட்டையை தோல் வார் வைத்து ஆணி அடித்த செருப்பா பாத்ரோட்டு கட்டையா? நான் குமிழ் வைத்த அந்த மரக்கட்டை பாதுகைகளை பார்த்தபோது ஐந்து-ஆறு வயது இருக்கலாம். . காலை அதில் நுழைத்துக் கொண்டு நடந்து பார்த்து விழுந்தது தான் மிச்சம். சுவற்றில் வீட்டில் ஒரு நீள ஆறு அடி உயர பழுக்கா தடி பூண் போட்டிருந்து சுவற்றில் சாய்த்து வைத்திருந்தது ஞாபகம் இருக்கிறது. அது அவரது ஆயுதம். அதை கையில் எடுத்து மனிதர் அனாயாசமாக சுற்றுவார். எவனும் அருகில் வரமுடியாது. விதி வசத்தால் அந்த தடிமனான கம்போடு தொடர்பு கொண்டவனுக்கு இடுப்பு துண்டாகி இருக்கும் அல்லது முட்டி கழண்டிருக்கும், அல்லது கபால மோக்ஷமடைய, மண்டை பிளந்திருக்கும். திருடர்களை, காட்டில் சந்தன மரங்களை திருட்டுதனமாக வந்து வெட்ட முயற்சிப்பவர்களுக்கு ஜம்புநாத சாஸ்திரி தரும் தடியடிப்ரசாதம் இது.கூர்மையான கண்கள். அவரை நான் பார்த்தது ஒரு படத்தில் தான். கருப்பு வெளுப்பில் கையால் எழுதிய படமா? புகைப்படமா? சரியாக நினைவில்லை. அவரை நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. என் தந்தையார் சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்தவர். என் தந்தையே அவரது தந்தையை சரியாக பார்த்திராத போது நான் எப்படி அவரை அறிந்திருக்க முடியும் . என் தாத்தா ஜம்புநாத சாஸ்திரி என்னைப் பொறுத்தவரை குரலும் உருவமும் அறியாத ஒரு பெயர். இப்போது அவருடன் எனக்கு இருக்கும் உறவு மாதாமாதம் அமாவாஸ்யா தர்ப்பணத்தில் அவருக்கு எள்ளும் தண்ணீரும் இறைக்கும் போது பக்தியுடன் நான் சொல்லும் தர்ப்பை ரூபத்தில் காணும் பித்ரு பிதாமகன், அவர் தந்தை மிருத்யுஞ்சய சாஸ்திரிக்கும் எனக்கும் அதே உறவு தான் பித்ரு ப்ர பிதாமஹான் .

ஜம்புநாத சாஸ்திரி காட்டிலாகா காவல் அதிகாரி. வெள்ளைக்காரன் காலத்தில் தற்போதைய தமிழ்நாடு கர்நாடக எல்லை காடுகளில் ரோந்து சுற்றி பாதுகாக்கும் வேலை. FOREST RANGER. வெள்ளைக்கார அதிகாரிகளிடம் நல்ல பெயர். அவர் அப்பா மிருத்யுஞ்சய அய்யருக்கு காலம் காட்டும் வேலை.! எல்லோருக்கும் மணி சொல்லமாட்டார். மணி அடித்து நினைவூட்டுவார். தஞ்சாவூர் மணிக்கூண்டு பார்க்கும்போது நினைக்கும்போது என் கொள்ளுத்தாத்தா நினைவு தான் வரும்.. தஞ்சாவூர் மராத்தி ராஜாக்கள் வசம் இருந்த காலம்.மிருத்யுஞ்சய ஐயருக்கு நெல், பருப்பு, மூன்று ரூபாய் சம்பளம். அரைக்காசானாலும் அரமனை உத்யோகம். ராஜபோகம். வீடு நிறைய சொந்த பந்தம் மூன்று வேளையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. வேதம் கற்றறிந்த மிருத்யுஞ்சய சாஸ்திரி வாழ்க்கையை சட்டை பண்ணாதவர் மட்டும் அல்ல. வாழ்க்கையில் சட்டை போட்டுக்கொள்ளாதவர். எங்கு போனாலும் மணியடிக்கும் நேரத்திற்கு வந்துவிடுவார். டாண் டாண் என்று ஆராய்ச்சி மணி எங்கும் கேட்டு காலத்தை அறிவுறுத்தும். என் கொள்ளுப்பாட்டி சரஸ்வதி அம்மா அரமனையில் மராத்தி ராணிகளுக்கு பிராமண சமையல் ஐட்டங்கள் சொல்லிக்கொடுத்து செய்து காட்டி நல்ல பெயர், மரியாதை பெற்றவர். அய்யருக்கு மூன்று பிள்ளைகள், ரத்தினசாமி அய்யர்(என் மூத்தவர் பிச்சைக்கு இந்த பெயர் வைத்தார்கள்) , ஜம்புநாதய்யர் (என் தாத்தா). எனக்கு அடுத்த காலம் சென்ற என் அண்ணாவுக்கு தாத்தா பெயர் வந்தது.. கடைசி பிள்ளை சிவஸ்வாமி ஐயர் (எனக்கு அமைந்த பெயர் இவரால் தான்)

தாத்தா ஜம்புநாத சாஸ்திரி பற்றி ஒரு விவரம் என் மூத்த சகோதரன் மூலம் சமீபத்தில் அறிந்த விஷயம். தாத்தா ஜம்புநாத ஐயர் , குஸ்தி சண்டை பயில்வான். உடல் பயிற்சி செய்த இரும்பு தேகம். எனவே காட்டிலாக வேலை சுலபமாய் வெள்ளைக்காரர்களால் கொடுக்க பட்டது. பயம் வீசை என்ன விலை என்று கேட்பவர்.

எங்கள் தாத்தா குதிரை மேல் தான் பயணம் செல்வார். ஒரு முறை அரை இருட்டில் எங்கோ மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார். வழியே எதிரே ஏதோ அசைவது போல் தெரியவே குதிரையை நிறுத்தி கவனித்தார். எதிரே மலைப்பாதை ஓரத்தில் ஒரு பெரிய கரு நாகம் கருப்பாக எதையோ சுற்றிக்கொண்டு படமெடுத்து பார்த்தது. அருகே தாத்தாவின் குதிரை குளம்பொலி கேட்டு நாகம் சட்டென்று அந்த கரிய உருவத்தை விட்டு விலகி காட்டில் சரசரவென்று நெளிந்து ஓடி மறைந்தது.

ஜம்புனாத சாஸ்திரி குதிரையைவிட்டு குதித்து இறங்கினார். அந்த கருப்பு உருவம் ஒரு கரிய கல் சிலை.மஹா கணபதி. வீட்டிற்கு சந்தோஷத்தோடு கொண்டு சென்றார். தஞ்சாவூரில் பிறகு எங்கெங்கோ எங்கள் குடும்பத்தில் நிறைய வாடகை வீடுகளில் வாசம் செய்து இப்போது என் தமையன் ரத்தினமய்யர் வீட்டில் ஆனந்தமாக கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக உள்ளகரத்தில் சொந்த வீட்டில் இருந்து எங்களை ரட்சிப்பவர். இருநூறு வயது கடந்தவர் இந்த பிள்ளையார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...