அம்மணி அம்மன். 4 J.K. SIVAN
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் பரமேஸ்வரனே உத்தரவிட்டு விட்டான்... ''கவலைப்படாதே வேலையை தொடர்ந்து செய். வடக்கு கோபுரம் உயரட்டும் ..''
அம்மணி அம்மாள் எங்கெங்கோ சென்று மேலும் மேலும் நிதி திரட்டியது ஒருபுறம் கட்டுமான பணிகளுக்கு உதவினாலும் பெரும்பாலான நிதி ஆலய நிர்மாணத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு அன்றாட கூலி கொடுக்க தேவைப்பட்டது..
மாங்கு மாங்கு என்று உற்சாகத்தோடு அம்மணியம்மாள் அளித்த அன்பு கட்டளையை ஏற்று ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்தார்கள். மாலை அனைவரும் வரிசையாக அம்மணி அம்மாள் எதிரில் நின்றார்கள். பணத்துக்கு பதில் அம்மணி கைநிறைய அருணாச்சலேஸ்வரர் விபூதியை கமகமக்க அளித்தாள் .
என்ன ஆச்சரியம். வேலையாட்கள் கையில் அம்மணி அளித்த திருநீறு அவரவர்க்கு உண்டான ஊதியமாக காசாக, பொன்னாக மாறியது. இந்த திருவிளையாடல் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். எத்தனை பேருக்கு தெரியும்? ஒருநாளா இருநாளா. பல மாதங்கள் வருஷங்கள் என்றும் சொல்லலாம். தொடர்ந்து நடந்து அருணாச்சலேஸ்வரர் ஆலய வடக்கு கோபுரம் 11 நிலைகள் உயர்ந்து விண்ணை முட்டுவதை இன்றும் நாம் வாய் பிளந்து அண்ணாந்து பார்க்கிறோம். எல்லாம் அம்மணி அம்மாள் முயற்சிதான். அதன் ரகசியம். அவளது தூய பக்தி. துணிவு. இறை நம்பிக்கை. சுயநலமற்ற பரிசுத்தம். அருணாச்சலேஸ்வரர் அருள்.
நிதி பற்றாக்குறை விஷயம் மைசூர் மஹாராஜா காதுக்கும் அம்மணி அம்மாள் மூலமாக நேரிடையாக எட்டியது. அவனும் மீண்டும் நிறைய பொன்னும் பொருளும் அம்மணிஅம்மாளிடம் கொடுத்து அனுப்பி னான். யானை குதிரை ஒட்டகம் மேல் நிதியோடு அம்மணி வருவதை திருடர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் அறிந்தார்கள். காட்டு வழியாக திருவண்ணாமலை நோக்கி பரிவாரம் நிதியோடு அம்மணி என்ற பெண்ணோடு வருவதை எதிர்பார்த்து மஞ்சவடி கணவாய் என்ற மலைப்பாதையில் வழிமறித்தார்கள்.
''இது பரமேஸ்வரன் சொத்து. சிவன் சொத்து தொடாதீர்கள்'' என்றாள் அம்மணி அம்மாள்.
திருடர்கள் கொள்ளையர்கள் சிரித்தார்கள். கண் எதிரே நிறைய பொன்னும் பொருளும். ஒரு நிராயுத பாணி ஏழைப் பெண் தொடாதே என்றால் சும்மாவா இருப்பார்கள். அனைவரும் கூட்டமாக மொய்த்து பொன்னையும் பொருள்களையும் ஒன்றுவிடாமல் எடுத்து மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு போக முயன்றபோது ஒரு ஆச்சர்யம் நடந்ததே தெரியுமா?
ஒருவர் பாக்கி இல்லாமல் அத்தனை திருடர்களுக்கும் கண் பார்வை உடனே போய் விட்டது. குருடர்களாக தவித்தார்கள்.
எவ்வளவு பெரிய குற்றம் செய்த்துவிட்டோம் என்று அவர்களுக்கு புரிந்தது. தட்டு தடுமாறி அம்மணி அம்மாள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். அனைவருக்கும் விபூதி அளித்தாள் அம்மணி அம்மாள்.
அனைவரும் மீண்டும் பார்வை பெற்றார்கள். புது பார்வை அவர்களை புதிதாக்கியதா, புனிதமாக்கியதா?
ஒரு துரும்பு விடாமல் ஏற்கனவே தங்களிடமிருந்த பணம், பொன் பொருள் அனைத்தையும் சேர்த்து வண்டியில் ஏற்றி ஓம் நமசிவாய என்று முழங்கிக்கொண்டே அனைவரும் திருவண்ணாமலை நோக்கி நடந்தார்கள். சென்ன சமுத்திரம் வந்தடைந்தார்கள். அங்கே பிரயாச்சித்தமாக ஒரு பெரிய குளம் வெட்டினார்கள். மைசூரிலிருந்து கொண்டுவந்த தாவரங்களை நட்டு ஒரு நந்தவனமாக்கினார்கள். காட்டு விலங்குகளுக்கு அந்த குளம் நீர்நிலையானது ஒரு புண்ணியம். அனைவரும் திருவண்ணாமலை சென்றடைந்தார்கள். திருடர்களும் இப்போது ஆலயத்திருப்பணி ஊழியர்கள். விபூதி பெற்று அதன் மூலம் ளது கை நிறைய ஊதியமானது தொடர்ந்தது.
அருணாச்சலேஸ்வரர் ஆலய வடக்கு கோபுர உயர்வுக்கு பின் இந்த உண்மை மறைந்திருக்கிறது...
அப்புறம்...
No comments:
Post a Comment