Wednesday, October 10, 2018

NALACHARITHRAM



ஐந்தாம் வேதம்              J.K. SIVAN
நள சரித்திரம்10


                                                                                                                                           
பிரிந்தவர்  கூடினால்......

நள  தமயந்தி சரித்திரம் நமக்கு கிடைத்த ஒரு அபூர்வ விருந்து. மஹாபாரதத்தில் அது இருப்பது ஒரு பொக்கிஷத்தில் உள்ளே இருக்கும் ஆபரண பெட்டகம்.

தமயந்திக்கு  தன் முன்னே நிற்பவன் தனது கணவன் என்று புரிந்து விட்டது. ஆனால் அவன் உருவமே மாறிவிட்டதா. பெயரும் வாஹுகன் என்கிறான். ஒருவன் எப்படி ரெண்டு பேராக இருக்க முடியும்.  பார்ப்போம். மேலும் கேட்போம்   என்று அவனை கேள்விகள் கேட்கிறாள் அவன் பதில் சொல்கிறான்:
''தமயந்தி, நான் தான் நளன் . என்னுள் இருந்த கலி   இப்போது நீங்கி விட்டான். என்னை மறந்து,வெறுத்து வேறு ஒருவனை நீ மணந்துகொள்ள முடிவெடுத்தாய் என்று அறிந்த  போது  நான் துடித்தேன். வாடினேன்.  பிறன் மனைவியாகுமுன்பு  என் மனைவியாக  ஒரு முறை உன்னைக் காண, நானே உன்னைத் தேடி இங்கு ஒரு அரசனின் தேரோட்டியாக வந்தேன்.''

''நானும்  என்றும்  உங்கள் மனைவிதான்.   நீங்கள் அறிந்த அத்தனை நற்குணங்கள், கற்புள்ள பெண்ணின் உயர்ந்த குணங்கள் கொண்ட உங்கள் தமயந்தி தான்.   உங்களைதவிர எந்த ஆடவன் மீதாவது என் எண்ணம் செல்லுமா ?  எவனையாவது  மறு மணம் செய்து கொள்வேனா? இந்த விஷயம் அறிந்தால் நீங்கள் ஓடி வருவீர்கள் என்று எனக்கு உங்களை தெரியுமே. ஆகவே . உங்களை வரவழைக்கவே இந்த ஏற்பாடு. உங்களைத் தவிர மூவுலகிலும் இனி ஒருவனை ஏறெடுத்தும் பார்ப்பேனா. மனிதிலும் நினைப்பேனா? தெய்வங்களே நீங்களே சாட்சி சொல்லுங்கள் நான் தவறிழைத்தேனா? என்கிறாள் தமயந்தி.

வாயுதேவன் '' நளா , தமயந்தி குற்றமற்றவள் '' என்கிறான். மலர்மாரி பொழிகிறான் அவர்கள் மீது. நளனுக்கு கார்கோடகன் கொடுத்த வஸ்த்ரம் நினைவுக்கு வர, அதை உடுத்தியவுடனே, தனது உண்மை சுய உருவைப் பெறுகிறான். தமயந்தி அவனை அணைத்துக் கொள்கிறாள். அவனும் அவளை கண்களில் நீரோடு அணைக்கிறான்.

நள மகாராஜாவே தனக்கு தேரோட்டியாக சேவை செய்தான். மீண்டும் தமயந்தியை அடைந்தான் என அறிந்து ருதுபர்ணன் மகிழ்கிறான்.
நளன் நிஷாத நகரம் திரும்புகிறான். அங்கு அரசனாக இருக்கும் புஷ்கரனை அணுகி ''மீண்டும் செல்வம் சேர்த்து வந்திருக்கிறேன், மறுபடியும் சூதாடுவோம்''   என்று அழைக்கிறான். மற்றுமொருமுறை சூதாட்டம் நிகழ்கிறது. ருதுபர்ணனிடம் கற்ற சூதாட்ட வித்தையால், நளன் எளிதில் புஷ்கரனை வென்று தனது நாடு, மக்கள், செல்வம், அனைத்தும் மீட்டுப் பெறுகிறான். புஷ்கரன் அனைத்தும் இழந்து நாட்டை விட்டு அடிமையாக வெளியேறுகிறான்.அப்போதும் நளன் அவன் மீது கருணை வைத்து ஒரு சிறுநாட்டையும் , சில செல்வங்களும் வழங்கி ஆசியோடு உயிரோடு அனுப்புகிறான். நளன் மீண்டும் அரசனானதில் நிஷாத தேச மக்கள் மகிழ்கிறார்கள்.

வ்ரிஹதஸ்வ ரிஷி நளன் சரித்திரத்தை கூறி ''யுதிஷ்டிரா, கவலையை விடு. நளனைப் போலவே நீயும் குற்றமற்றவன். விதி உன்னை வீழ்த்தியது. நீயும் நளனைப் போலவே வெற்றிபெற்று மீண்டும் இழந்ததைப் பெறுவாய். உனக்கு கடவுள் துணை நிற்பான். மீண்டும் ஒருமுறை எங்காவது இந்த சூதாட்டம் ஆடி மறுபடியும் இழந்துவிடுவோமோ என்கிற அச்சம் வேண்டாம். எனக்கு அது பற்றிய தந்திரம் மந்திரம் தெரியும். அதை உனக்கு போதிக்கிறேன். ஒருவரும் சூதிலும் உன்னை இனி வெல்ல முடியாது. ஒரு விஷயம் சொல்கிறேன் கேள்: 

''(வாசகர்களே, உங்களையும் சேர்த்து தான் வ்ரிஹதஸ்வ ரிஷி சொல்கிறார்) நள சரித்திரம் படித்தோர்கள், கேட்டோர்கள் எவரையும் கலி ''நான் அவர்கள் கிட்டேயே அணுகமாட்டேன்'' என்று சத்யம் செய்திருக்கிறானே'' என்று முடித்தார் 

வீட்டுக்கு வெளியே சென்றவர்கள்  முதலில்  கால் முழுதும் ஈரமாக நனையும்படி காலை அலம்ப வேண்டும். நளன் சரியாக கால் அலம்பாமல் அவன் குதிகால் நனையவில்லை என்பதால் அதன் மூலம் கலி  அவன் உடலில் புகுந்தான் என்று என் அம்மா சொல்வாள்.   அப்போதெல்லாம் செருப்பு போடாமல் நடப்பவர்கள் ஜாஸ்தி. ஆகவே  வெளியே இருந்து ஏதாவது விஷ கிருமிகள் வீட்டில் சேரக்கூடாது என்பதற்காக கூட இது சிறந்த பழக்கமாக இருந்தது. இப்போது குடிக்கவே தண்ணீர் இல்லை. கால் கழுவ எங்கே முடிகிறது?

கிரேக்க நாட்டு  கவி  ஹோமர் எழுதிய  இலியாத் என்ற புராணத்தில்  அசில்ல்ஸ் என்பவனை அவன் தாய் தெட்டிஸ்   அவன் குழந்தை யாக இருந்தபோது  இரு கால்களை பிடித்து  ஒரு அமிர்த நீரில் முழுக வைக்கிறாள். அவள் அவன் குதிகால் நனையாமல் பிடித்துக் கொண்டிருந்ததால் அந்த இடத்தில் அவனை அம்பாள் அடித்து  பாரிஸ்  என்பவன் கொல்கிறான் .  கிரேக்க புராணம் பாரதம் போலவே இருக்கிறது. படிக்க அவ்வளவு விறுவிறுப்பு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...