ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஜே.கே. சிவன்
1. ''அம்பாளை அறிவோம்''
மஹாவிஷ்ணு, ப்ரம்மா, இந்திராதி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சிவகணங்கள், சித்தர்கள் அனைவருமே அங்கே தான். எல்லா உலகத்தவரும் கைலாசம் சென்றுவிட்டால் என்ன ஆகும் ? வடப்பக்கம் தாழ்ந்து தெற்குப் பக்கம் உயர்ந்து விட்டது.
சிவன் அப்போது தான் உலகை சமன் செய்ய அகஸ்தியரை தெற்கே அனுப்புகிறார். பூமி சமநிலை பெற்றது. அதெப்படி ஒரு குள்ள முனிவர் அகஸ்தியர் தெற்கே போனவுடன் பூமி சமமாகும் ? வடக்கே குழுமியிருந்த அனைவருமே அகஸ்தியர் ஒருவருக்கு சமமானவர்கள் என்று தானே அர்த்தம். எப்படி அந்த உயரிய அந்தஸ்து அவருக்கு கிடைத்தது? ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் பெற்றவர் அகஸ்தியர். அது தான் காரணம்.
அம்பிகையை ஸ்தோத்ரம் செயகிறோமே அதில் முதல் இடம் பெற்றது லலிதா சஹஸ்ரநாமம்.
இதை உபதேசித்தவர்-ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். ரெண்டுபேருமே ஞானத்தில் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர்கள் இல்லை.
ப்ரம்மா விடமிருந்து ஹிரண்யாக்ஷன் வேதங்களை கவர்ந்து கொண்டு பாதாளம் வரை சென்று ஒளிந்துகொண்டபோது அவனை தேடிச்சென்று கொன்று மஹாவிஷ்ணு குதிரை முகம் கொண்ட ஹயவதனராக, ஹயக்ரீவராக, (குதிரை முகம் கொண்டவராக) வேதங்களை ஜாக்கிரதையாக மீட்டு, பிரம்மனிடம் ஒப்படைத்தார். அவர் உபதேசம் செய்தது லலிதா சஹஸ்ரநாமம்.
பதினெட்டு புராணங்களில் ஒன்று பிரம்மாண்ட புராணம். அதில் '' லலிதோபாக்யானம் '' என்ற பகுதி லலிதா தேவியின் திரு அவதாரம் பற்றியும் அவள் சரித்திரமும் சொல்கிறது.
அதில் வருவது பரமேஸ்வரி, பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் ஸ்தோத்திரம் உள்ளது. 183 சுலோகங்களில் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு இதை உபதேசிக்கிறார்.
அகஸ்திய மகரிஷி அவரது மனைவி லோபாமுத்திரை யோடு இணைந்து பூஜித்து வணங்கியது பரமேஸ்
வரியை. அகஸ்தியர் சிறந்த சக்தி உபாசகர். அகஸ்தியருக்கு அதனால் தான் அவ்வளவு சக்தி. லலிதாவுக்கு ஒரு பெயர் என்ன தெரியுமா? லோபாமுத்ரார்ச்சிதா – லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப் பட்டவள். லலிதாவின் சக்தியால் வாசினி முதலான வாக்தேவதைகளே பிரத்யட்சமாகி இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தைச் செய்ததாக புராணம் சொல்கிறது.
லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பிரதானமாக உரை எழுதியது பாஸ்கர ராயர் (“சௌபாக்ய பாஸ்கரம்”) பாஸ்கர ராயர் (1690 – 1785) சிறந்த தேவி உபாசகர், தத்துவ ஞானி. இவர் மகாராஷ்டிரத்தில் பிறந்தாலும் சின்னவயசிலேயே தஞ்சாவூர் வந்து வாழ்ந்த ஊர் தான் அவர் பெயர் கொண்ட பாஸ்கரராஜபுரம். .
லலிதா சஹஸ்ரநாமம் சிறந்த கவிநயம், சொல்லழகு ஓசை கொண்டது. சமஸ்க்ரிதம் தெரியாவிட்டாலும் கேட்க செவிக்கின்பம் . எப்படி விஷ்ணு சஹஸ்ரநாமம் MSS பாடுவதை கேட்கும்போது சிலையாக கண்ணை மூடிக்கொண்டு அர்த்தம் தெரியாதவர்களும் ரசிக்கிறார்களோ அப்படி. சாக்தம் எனும் சக்தி தத்வம் போதிப்பது. ப்ரம்ம வித்யா, ஸ்ரீ வித்யா என்று கூறப்படும் மகோன்னதமான ஸ்தோத்ர மந்த்ரம். அம்பாளின் 1008 நாமங்கள் எப்படி அமைந்திருக்கிறது என்றால், அவளின் அவதாரம், தலை முதல் கால் வரை வர்ணனை (கேசாதி பாதம்) அம்பாள் பண்டாசுரனை சம்ஹாரம் செய்தது, அவளது சூக்ஷ்ம ரூபம், குண்டலினீ ரூபம், பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்வது, நிர்க்குண உபாசனை. பஞ்ச ப்ரம்மங்கள் ஸ்வரூபம் பற்றி, கீதையில் வருமே அது போல் க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம், சக்தி பீடங்கள் பற்றி, சக்தி அங்கம் கொண்ட தேவதைகள், யோகினி த்யானம், விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும், சிவசக்தி ஐக்கியம் என்று. புரிகிறதா?
லலிதா யார்? தேவர்கள் ப்ரார்த்திக்க அக்னி
குண்டத்தில் தோன்றியவள். எப்படி இருப்பாள்? நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள்.
லலிதா சஹஸ்ரநாமம் இனி வாசிக்கும்போது எல்லா விவரங்களும் வரப்போகிறது. நாம் அனைவருமே சேர்ந்து அறிவோம்.
No comments:
Post a Comment