Monday, October 2, 2017

முன் குடுமீஸ்வரர்

யாத்ரா விபரம் - J.K. SIVAN

முன் குடுமீஸ்வரர்

செங்கல்பட்டு காஞ்சிபுரம் கோவில்களை ஒரு முறை சென்று பார்த்தபோது ஒரு சின்ன கிராமத்தில் ஒரு அற்புத கோவிலை தரிசித்தேன். அந்த ஊரின் பெயரே ஆச்சர்யமானது. பொன் விளைந்த களத்தூர். களத்து மேட்டில் அறுத்து போட்ட நெல் அத்தனையும் தங்கம். பொன் . பொன் விளைய விளைய களம் பொங்கி வழிகிற ஊர்.













சென்னையிலிருந்து 60 கி.மீ. செங்கல்பட்டி லிருந்து 8 கி.மீ. செங்கல்பட்டியிருந்து கொஞ்சம் இடது புறம் சென்று, ஒரு ரயில் கேட்டை கடந்து அடைய வேண்டிய ஊர். தியாகராயநகர் டீநகர் ஆனது போல் எல்லோரும் பொன் விளைந்த களத்தூரை - பிவி களத்தூர் என்கிறார்கள்.
அங்கே ஒரு பழைய சிவன் கோவில் . ராஜேந்திர சோழன் காட்டியது. ஆயிரம் வருஷங்கள் வயது கொண்ட ஆலயம். சிவனுக்கு அங்கே முன் குடுமீஸ்வரர் என்று பெயர். அம்பாள் மீனாட்சி அம்மன். நளவெண்பா எழுதிய புகழேந்தி புலவர் பிறந்த ஊர். அறுபத்து மூவரில் ஒரு நாயனார், கூற்றுவ நாயனார் வாழ்ந்த ஊர். .
இந்த ஊரை ஆண்ட ஒரு ராஜா தினமும் இந்த கோவில் பூஜை செய்து அர்ச்சகர் கொண்டு வந்து தரும் பிரசாதம் சாப்பிடாமல் எந்த ராஜாங்க வேலையும் செய்ய மாட்டான்.

ஒருநாள் அர்ச்சகர் ப்ரசாதத்தோடு வந்தபோது ராஜா ஸ்நானம் செய்து கொண்டிருந்ததால், ராணி பிரசாத தட்டை வாங்கிக்கொண்டு அதில் இருந்த பூவை தலையில் அணிந்து கொண்டாள்.

''அம்மா அம்மா இது ராஜா முதலில் தொட்டு வணங்கி எடுத்துக் கொள்ளவேண்டியது'' என்று பூவை அவள் தலையிலிருந்து எடுக்க சொல்லி தட்டில் வைத்தார் அர்ச்சகர்.

குளித்து விட்டு வந்த ராஜா அர்ச்சகர் நீட்டிய பிரசாத தட்டை பார்த்தவன் வழக்கம்போல் பூவை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள போனவன் ஆச்சர்ய பட்டான்.

''அர்ச்சகரே சிவனுக்கு சாற்றிய மலர் தானே வழக்கம்போல.

''ஆமாம் ராஜா''

''எப்படி இன்றைக்கு ஒரு நீண்ட முடி இதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது''
...............

அர்ச்சகர் பதில் இல்லாமல் நடுங்கினார்.

''சிவனுக்கு ஒருவேளை நீண்ட கேசமோ?''

அர்ச்சகர் ராணியைப் பற்றி குறை கூறினால் ராஜா கழுத்தை சீவிடுவானே. தவிர நீ எப்படி நான் தொடுவதற்கு முன் அவளை தொட விட்டாய் என்று பிடித்துக்கொண்டாலும் ஆபத்து தானே. அடிக்கு பயந்து உளறுவது போல் பயத்தில் பொய் ஒன்று உருவானது.

''ஆமாம் ராஜா, சிவனுக்கு நீண்ட முடி உண்டு. அதில் ஒரு கேசம் மாலையை லிங்கத்திலிருந்து எடுத்து உங்களுக்கு பிரசாதமாக கொண்டுவரும்போது சேர்ந்திருக்க வேண்டும்.''

''அடடே, இதுவரை நீ சொல்லவில்லை, நானும் பார்க்கவில்லையே. சரி. நான் காலை ஸ்நானம் முடிந்து நேரே கோவிலுக்கு வருகிறேன் சிவனின் நீண்ட முடியை பார்க்கவேண்டும்''

அர்ச்சகர் வெளிறிப்போய் வாய் பிளந்தார்.

''என்ன திகைக்கிறாய். ஒருவேளை நீ பொய் சொல்லியிருந்தால் உனக்கு நாளை தலை கிடையாது. போ''

அர்ச்சகர் சிவனிடம்சென்று தனது நிலையை சொல்லி அழுதார். வீட்டில் எல்லோரிடமும் ''போகிறேன்'' என்று சொல்லிக்கொண்டு கோவிலுக்கு மறுநாள் புறப்பட்டார்''. ராஜா சொன்னபடி வந்துவிட்டான். சேனாபதி கையில் கூரான வாள்.

கற்பகிரஹம் சந்நிதி கதவு திறந்தது. ராஜா ஆவலோடு எட்டிப்பார்த்தான். முன் தலையிலிருந்து சிவனுக்கு நீண்ட குடுமி.

அர்ச்சகர் கண்களில் ஆனந்த கண்ணீர். உயிர் காத்த குடுமி அல்லவா.

அருமையான பூஜை அர்ச்சனை முடிந்து ராஜா மகிழ்ந்து அர்ச்சகருக்கு பரிசுகள் வழங்கி திரும்பினான். சிவனும் அன்றுமுதல் முன்குடுமீஸ்வரர் என்ற பேர் பெற்றார். இன்றும் குடுமி வைத்திருக்கிறது. பார்க்கலாம்.

வயல்களுக்கு இடையே அமைதியான ஆலயம். எதிரே நந்தி. தெற்கு பார்த்த மீனாட்சி அம்மன் சந்நிதி.
கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, ப்ரம்ம, துர்கை. வடமேற்கு மூலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர். சூரிய சந்திரர்கள் சுவாமி சந்நிதியை பார்த்தபடி. இந்த கோவில் தூண்களில், சுவர்களில் சிற்ப வேலைப்பாடுகள் அபாரம். ஒரு தூணில் பஞ்சமுக லிங்கம்.
வாசலில் நான்கு தூண்கள் நடுவே நந்தி. ஒருகாலத்தில் தூண்கள் மேல் மண்டபம் இருந்திருக்கலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...