Monday, October 2, 2017

மறக்க கூடாத உபதேசங்கள்

உத்தவ கீதை -2 J.K. SIVAN



மறக்க கூடாத உபதேசங்கள்

''மஹா ப்ரபோ, ஸ்ரீ கிருஷ்ணா. யோகேஸ்வரன் என்றால் அது உன் ஒருவனைத்தான். உன் பக்தர்களை யோக வழியில் நடத்திச் செல்பவன். சகல மந்த்ர தந்த்ர சக்திகளுக்கும் காரணன். தியாக வழியில், சந்யாச மார்கத்தில் செல்ல எனக்கு வழி காட்டியவன்.

உலக பந்தங்களில் ஈர்க்கப்பட்டு, மாயையில் சிக்கித் தவிப்பவன் உன்னை அடைய முடியாது.

ஏன் என்னையே எடுத்துக் கொள்ளேன். நான் உடல், அதன் ஈர்ப்புகள், பந்தங்களில், உறவுகளில் ஈடுபட்டு தவிப்பவன் தான். எல்லாம் உன் மாயை என்று அறியாமல் எல்லாம் நானே, நானே இந்த உடல், என் செயலால் தான்எல்லாமே நடக்கும், , என் திட்டமே, என் சக்தியே சிறந்தது என்று அஞ்ஞான இருட்டில் உழல்பவன்.

''என் தெய்வமே, என்னை உய்விக்க வழிகாட்ட வேண்டும். உன் திருவடிகளை பின் பற்றி மேம்பட வழி சொல்ல வேண்டும். நீ பக்த வத்சலன் அல்லவா. பக்தஜன பிரியன் அல்லவா. சத்யஸ்வரூபா நீயே அல்லவோ கதி? நின்னை சரணடைந்தேன்'' என வேண்டினார் உத்தவர்.

''கலங்காதே உத்தவா. உலக செயல்களை, நிர்பந்தங்களை, உணர்ந்து அவற்றை ஆராய்பவன் என்னை உணர்வான். அவை சாஸ்வதமற்றவை என்பதை அறிவான். அவனே புத்திசாலி.

கலியின் பிடியில் இனி உலகம் சிக்கப்போகிறது. பாபமற்றவனே. நீ சகலத்தையும் சொந்த பந்தமின்றி துறந்து என் மீது உன் சிந்தையை வைத்து இங்கிருந்து சென்றுவிடு. நீ காணும் உலகம் வெறும் மாயை என்று உணர்வாய். புலன்கள் அறியும் எதுவுமே நிழல். எனவே புலன்களை அடக்கி, புத்தியை ஒடுக்கி, உன்னுள்ளே காண்பது ஒன்றே உண்மை உலகம்.வேதம் சொல்லும் உண்மை அதுவே. நானே என அறிந்ததும் தெளிவுறுவாய். அப்போது நீ காணும் யாவும் நீயே, அது நானே என்றும் தோன்றும். வித்தியாசம் அறியா சிறு குழந்தை மனம் அடைவாய். பிறப்பு இறப்பு எனும் தொடர் பந்தம் அறுந்து விடும்.

கிருஷ்ணா பகவானே, பரமாத்மா. சர்வ சக்தி காரணா , உன் மீது கொண்ட பக்தி ஒன்றே என்னை உய்விக்கிறது. உன் கட்டளையை நான் நிறைவேற்ற எனக்கு சக்தியையும் புத்தியும் நீயே அருள்வாய். உன்னையே சரணாகதி என்று என்னை அர்பணித்துவிட்டேன்.

உத்தவா, உண்மை உணர்ந்தவன் தானே உயர்கிறான். ஞானம் அடைந்தவன் சாங்கிய யோக பலனை பெற்றவனாக என்னை அறிகிறான்.

உலகில் ஒரு கால், இருகால்கள், மூன்று கால்கள், நான்கு இன்னும் எத்தனையோ கால்களோடும் சிலது காலே இல்லாமலும் பிறக்கும் ஜீவன்கள் உள்ளன. இவ்வள வற்றிலும் மனித ஜீவன்களை நான் பெரிதும் விரும்புபவன். புலன்களால் என்னை அறிய முடியாது என்பதற்காகவே ஜீவன்களுக்கு புத்தி, ஆத்மா ஆகியவையும் தரப்பட்டுள்ளது. அவையே அவனை என்னிடம் கொண்டு சேர்ப்பவை.

ஒரு அவதூதர் யது மஹாராஜாவோடு சம்பாஷித்ததை உனக்கு ஞாபகப் படுத்துகிறேன் கேள்.

வேட்டையாடச் சென்ற யது மஹாராஜா, காட்டில் சகல சாஸ்திரங்களும் கற்றுணர்ந்த ஒரு இளம் வயது பிராமண அவதூதனை (உடல் ஸ்மரணையே அற்ற நிர்வாண யோகி) சந்திக்கிறான்.

''ஓ பிராமண சந்நியாசியே , தாங்கள் எந்த பூஜை புனஸ்காரத்திலும் ஈடுபடுவதாக தெரியவில்லையே. இருந்தும், எப்படி சர்வ ஞானம் அடைந்தவராக இருக்கிறீர்கள்? துளியும் பயம் இன்றி இந்த கானகத்தில் அலைகிறீர்கள். அது எப்படி?'' இவ்வளவு கற்றவர்கள் அதன் மூலம் உலகில் பெருமை புகழ் செல்வம் அடையத்தான் விழைவார்கள். தாங்கள் வித்யாசமாக இருக்கிறீர்களே. என்று யது கேட்டான்.

''ப்ராம்மண உத்தமரே, உலக சம்பந்தங்களை அறுத்து, பற்றற்று, தனித்து உலவுகிறீர்களே, இந்த ஸ்வானுபவம் பெற வழியென்ன'' எனக்கு உபதேசிக்க வேண்டும் என்றான் யது. குனிந்து தலை வணங்கி கை கட்டி அவதூதரின் பதிலுக்கு காத்திருந்தான்.

அந்த அவதூதர் தான் தத்தாத்ரேயர், யயாதியின் மகன் இளவரசன் யதுவுக்கு அவர் தன்னுடைய 24 குருமார்களிடமிருந்து அவர் பெற்ற ஞானத்தை கற்பித்தவர்.

அந்த விஷயத்தை தான் கிருஷ்ணன் உத்தவருக்கு இங்கு விளக்குகிறார். அந்த 24 குருக்களை பற்றி ஏற்கனவே நான் உங்களுக்கு இந்த குழுவிலும், மின்னஞ்சலிலும், புத்தகத்திலும் தத்தாத்ரேயரின் 24 குருமார்கள் என்று விவரித்து எழுதிஇருப்பதால் அதை மீண்டும் இங்கே புகுத்தவில்லை. .

மனிதனின் கவனத்தை கொள்ளை கொள்ள எண்ணற்ற நல்லவை தீயவை அவனை சுற்றி உள்ளன. இவை யோகிகளையும் தன் பால் வசியபடுத்தும் சக்தி கொண்டவை. யோகி அவற்றை எளிதில் கடந்து விடுகிறான். அவனது திட சித்தம், வைராக்கியம் அவனை ஊக்குவிக்கிறது. உதவுகிறது.

எனவே தான் ஒரு ஞானி இருக்கும் இடம் ஒளி வீசுகிறது. சுற்றுப்புறம் தூய்மை அடைகிறது. அவன் தியான சக்தி இறைவனை எங்கும் கொண்டு நிறுத்துகிறது.

சூரியன் எங்கும் தன் ஒளியை பரவச் செய்தாலும் அவன் எதனுடனும் நெருங்காமல் தன்னை பிளவு படுத்திக் கொள்ளாமல் தனித்து முழுமையாக நிற்கிறான்.

எதனிடமும் எவரிடமும் ஓட்டுதல், உறவாடல் இன்றி தாமரை இலை தண்ணீராக இருப்பவர்கள் உண்டு.

ஞானி, பூத உடலில் இருந்தபோதும் தான் உண்மையில் அவனுள்ளே இருக்கும் ஆத்மா என்றே உணர்ந்தவன். காற்றைப் போல் எதிலும் எங்கும் வியாபிப்பவன். காணும் எதிலும் எவற்றிலும், எங்கும் பரமாத்வை உணரும் ஜீவாத்மா அவன். பிரபஞ்சத்தில் பரவி நிற்கும் ஆகாசம் எல்லாவற்றையும் தன்னில் கொண்ட தாக தோன்றினாலும் அது தன்னில் அடங்கியவையாக தோன்றும் எதிலும் சேர்ந்ததாக இல்லை.

ஆகாசத்தில் இடியும் மின்னலும் புயல் வாயுவும் உருவானதாக தோன்றியபோதிலும் ஆகாசம் இது எதிலும் தன்னை சம்பந்தப் படுத்திக் கொள்ளவில்லையே. அசைவற்று நிர்மலமாக அல்லவோ எப்போதும் உள்ளது.
ஒரு ஆலயம் உள்ள இடம் புனிதத் தன்மை பெறுவது போல், ஞானி தன்னை நெருங்கிய எவரையும் தூய்மை படுத்த காரணம் அவன் சதா சர்வ காலமும் இறை உணர்வு ஒன்றிலேயே இருப்பதால் தான். மாறும் உலகத்தில் மாறாத தன்மையுடன் இருப்பவன். சாம்பல் பூத்த அக்னியைப் போல் வெளியே காட்டிக்கொள்ளாதவன். அக்னி எதையும் ஒன்றாகவே பாவித்து எரிப்பது போல் எவரையும் தூய்மைப் படுத்துபவன் ஞானி. காலத்தின் கோலங்களால் பாதிக்கப்படாதவன்.

உலக வாழ்க்கையின் சுக துக்க அனுபவங்கள், ஜனன மரணம் எல்லாம் இந்த உடலுக்கு தானே தவிர ஆத்மாவிற்கு இல்லை என பட்டவர்த்தனமாக அறிந்தவன் ஞானி. சூரியனின் பிரதிபலிப்பு காணும் பொருள்களில் வெவ்வேறாக தோன்றி மாறுபட்டாலும் வேறுபட்டாலும் சூரியனுக்கு எந்த மாற்றமும் இல்லை.

ஞானியின் லக்ஷணத்தைப் பற்றி, கிருஷ்ணன் இதுபோல் இன்னும் எத்தனையோ உதாரணங்களை சொல்கிறார் உத்தவனுக்கு.

இந்த இடத்தில் அவதூதர் ஒரு புறாவின் கதை சொல்கிறார்.

ஒரு புறா தனது மனைவியோடு ஒரு காட்டில் ஒரு பெரிய மரத்தில் அன்னியோன்யமாக பாசத்தோடு வாழ்ந்தது. ஈருடல் ஓருயிர். தன்னுடைய கூட்டில் சில முட்டைகள் பொறித்து குஞ்சுகள் உருவாயின. இறை தேட தாய் தந்தை புறாக்கள் வெளியே சென்று வெகு நேரமானபோது ஒரு நாள் மரத்தின் கீழே வேடன் விரித்த வலையில் புறா குஞ்சுகள் பிடிபட்டு. திரும்பி வந்த பறவைகள் குஞ்சுகளின் கதியை கண்டு வாடின. அப்பா புறா ''ஆஹா நான் பகவானை நம்பாமல் என் திறமையில் மமதை கொண்டு என் குழந்தைகளை நான் காக்க முடியும் என்று நம்பி அவற்றை இழந்தேனே '' என்று அழுதது. அதற்குள் தாய்ப்பறவை பாசத்தால் குஞ்சுகளை நெருங்கி தானும் வலையில் அகப்பட்டுக் கொண்டது. என் இனிய மனைவி என் குழந்தைகள் எல்லோரும் சந்தோஷமாக வாழ்ந்தோம். இனி அவர்கள் இல்லாமல் எனக்கேது வாழ்வு? நானும் அவர்களோடு முடிகிறேன் என்று தானும் வலையில் சிக்கி வேடன் சந்தோஷமாக எல்லா பறவைகளையும் பிடித்து சென்றான்.

''உத்தவா, பந்த பாசங்களால், உறவு, ஆசை, மோக பிடிப்புகளால் நேரும் துன்பங்கள், துக்கங்கள் புரிகிறதா'' என்றார் கிருஷ்ணன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...