உத்தவ கீதை -3 J.K. SIVAN
உத்தவனுக்கு உத்தமன் உரைத்தது
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகவத் கீதை பற்றி எல்லோருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து அவரது அவதாரம் முடிவு பெறும் நேரம் அவர் உத்தவ மகரிஷிக்கு உபதேசித்தது தான் உத்தவ கீதை என்பது. இதுவே பகவானின் கடைசி உபதேசம். மிக அருமையான ஒரு பொக்கிஷம். அதை சுருக்கி முடிந்தவரை எளிமையான தமிழில் அளித்துவரும் என் முயற்சியில் வெற்றி பெற அந்த ஸ்ரீ கிருஷ்ணன் தான் எனக்கு அருள் தரவேண்டும். இனி தொடர்வோம். இதில் நிறைய உபகதைகள் வருகின்றன. வாழ்வில் நன்மை பயக்கும் அவற்றை அறிவது மகிழ்ச்சி தரும்.
மிக அழகான ஒரு உதாரணம். அது நம் எல்லோருக்கும் இருக்கும் சொத்து பற்றிய விபரம். காசு கொடுக்காமல் நாம் பெற்ற ஒன்பது வாசல் மாளிகை. அதனுள்ளே வசிப்பவன் ஆத்மா. இந்த வீட்டின் பலமான தூண்கள் தான் எலும்புகள். மறைத்து நிற்கும் சுவர்கள் தான் உடல் போர்த்த சருமம், வீட்டில் இருக்கும் மர கண்ணாடி வேலைப்பாடுகள் தான் நிணம், முடி, நகம் நரம்புகள் போன்றவை. இந்த வீட்டின் கழிவுப் பொருள் பற்றி சொல்லவே வேண்டாம். தெரிந்ததே. இந்த மாளிகையைப் பற்றி தான் ''காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா'' என்று ஒரு சித்தர் அழகாக பாடினார்.
தோற்றம் என்றாலே மறைவு என்பது அதைத் தொக்கி சொல்லாமலே நிற்பது. பிறப்பை அடுத்து இறப்பு. அதன் மறு பக்கம். இந்த உலகில் எதுவுமே சாஸ்வதம் இல்லை பரமாத்மாவை தவிர்த்து. அழியும் மறையும் இவற்றை விடுத்து அழியாப்பொருளான ஆத்மாவின் சிந்தனையில் களிப்பவன் தான் ஞானி. இந்த நிலை தான் திருமூலரின் ''ஆசையை விட விட ஆனந்தமாமே'' விஷயம்.
குடியிருப்பவனுக்கு எத்தனையோ வீடு. சொந்தக்காரனுக்கு தான் ஒரே வீடு. குடியிருப்பவர் வீட்டின் ரிப்பேர் பற்றியோ, வர்ணத்தை பற்றியோ, அதற்கு கட்டவேண்டிய வரி பற்றியோ, அதன் அழகை அதிகரிக்கவோ, அதன் ஆயுளை விருத்தி செய்யவரோ துளியும் கவலைப் படுவதில்லை. அவன் சுவற்றில் ஆணி அடிக்கக் கூட வீட்டுக்காரனை தான் கேட்க வேண்டும். இதுவே ஆத்மாவுக்கும் ஜீவனுக்கும் உள்ள வித்யாசம். ஜீவன் உடலைக் கட்டிக் கொண்டு அழுகிறது. பாடு படுகிறது. உடல் நினைவிலும், அதை பராமரிப்பதிலும், அதன் சுகத்திலும் தன்னை முடித்துக் கொள்கிறது. ஆத்மா இதை கவனித்துக் கொண்டு இதில் ஈடுபடாமல் இருக்கும் குடித்தனக் காரன். இந்த வீட்டை காலி செயது கொண்டு அடுத்த தெருவில் வேறு வீடு போய் விடுபவன்.
மழை, வெயில், காற்று, புழுதி, விலங்குகள். திருடன் ஆகியவற்றிலிருந்து சற்று ஒதுங்கி வாழ தான் வீடு (உடல்). இது நிரந்தரமும் இல்லை. சொந்தமும் இல்லை. என்னை அபிவிருத்தி செய்து கொள்ள உதவும் ஒரு சாதனம் என்று தான் இதை ஏற்றுக் கொள்ளவேண்டும். பள்ளிக்கூடம் காலேஜ் எல்லாம் படிப்பதற்காகத்தான் போகிறோம். அதை உடைமையாக்கி கொள்ள அல்ல. அந்த கட்டிடத்தை பற்றி கவலை கொள்ள வேண்டியது நமக்கு அவசியமில்லையே.
உற்றார் சதமல்ல, ஊரார் சதமல்ல, எல்லாமே சந்தையில் கூட்டம் என்கிறார் ஒரு ஞானி. பட்டினத்தாரோ தாயுமானவரோ வள்ளலாரோ. பேர் சொல்லாததற்கு காரணம் நீங்கள் தேடி பிடித்துப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படவேண்டும் என்பதற்காகவே.
ரெண்டு மூன்று பெண்டாட்டிக் காரனை அவர்கள் பிய்த்து இழுத்து பிடுங்குவதைப் போல் இந்த ஐம்புலன்கள் நம்மை ஆட்டி படைக்கிறது. அவர்களை இத்தனைக்கும் அவன் உணவு உடை இருக்க இடம், அணிய நகை வேறு கொடுத்து ஆதரித்தும் அவனுக்கு இந்த நிலை. ஐம்புலன்களை நாம் எவ்வாறெல்லாம் போஷிக்கிறோம். நம்மை நாலா பக்கமும் இழுத்து அவதிப்பட வைக்கின்றனவே .
சகல ஜீவராசிகளையும் படைத்தும் கூட பிரம்மாவுக்கு ''ஏதோ கொஞ்சம் குறையாக இருக்கிறதே. எதை விட்டு விட்டோம்? '' என்று யோசித்து கடைசியில் மனிதனைப் படைத்துவிட்டார். அவனுக்குள்ளே புத்தியையும் சிந்திக்க மனமும் வைத்துதான் அனுப்பினார்.அவன் ஸ்புடம் போட்ட தங்கமாக ஜொலிக்க பல பிறவிகளை வேறு கொடுத்தார். திருந்துகிறானா?
கொடுத்த உடலை உபாயோகித்துக் கொண்டு குறைந்த காலத்தில் பிறவிகளை குறைத்துக் கொண்டு பரமனின் திருவடி யாகிய மோக்ஷத்தை அடைய வழிகளையும் நிறைய சொல்லியிருக்கிறார் பகவான். அதை பரப்ப, நினைவூட்ட, தெளிவிக்க, நிறைய குருமார்கள், ரிஷிகள். ஆச்சார்யர்கள். இது வெளியே. நமக்கு உள்ளே ஆத்மா. அதைப் பற்றிய சிந்தனை ஒன்றே நம்மை உய்விக்கும். உயர்த்தும். .
இப்படிக்கொடுக்கப்பட்ட மனிதப்பிறவியே உயர்ந்த பரிசு. புல்லாகி பூடாகி, ........ எத்தனையோ பிறப்படைந்து இளைத்து, களைத்துப் போனவர்கள் நாம். இந்த ஒரு மனிதப் பிறவியில் மட்டுமே இறைவனை சிந்தித்து வழிபட்டு நன்றி சொல்ல முடியும். ''அரிது அரிது மானிதராகப் பிறத்தல் அரிது'' என்றாள் ஓளவைக் கிழவி.
தத்தாத்ரேயர் தனது இருபத்து நான்கு குருமார்களை பற்றி அவர்களிடமிருந்து அறிந்தது பற்றி யது மகாராஜாவுக்கு உபதேசம் செயது அவனது உபசாரங்களை பெற்று விடை பெற்றார் என்று ஸ்ரீ கிருஷ்ணன் உத்தவருக்கு எடுத்துச் சொன்னார். (தத்தாத்ரேயரின் 24 குருமார்கள்'' என்று இந்த FB குரூப்பில் யில் கூட எழுதியிருக்கிறேன். படியுங்கள்)
''உத்தவா, என்னைச் சரணடைந்து, மனதை பக்தியில் என் நினைவில் நிறுத்தி, சுய விருப்பு வெறுப்பற்று உன் கடமையை செய். இதை உலகெங்கும் எடுத்துச் சொல். புலனடக்கம் எவ்வளவு அவசியம் என்று உணர்த்து. கனவில் ஆயிரமாயிரம் காட்சிகள் திருப்தியை தந்தாலும் தோன்றினாலும் எதுவும் நிஜமல்ல. பயனளிக்காது.
என் மீது நிலை நிறுத்திய மனம் ஒன்றே இருட்டில் தெரியும் ஒளி. வாழ்க்கையின் லக்ஷியம். எல்லாமே வேதத்தில் சாஸ்திரங்களில் வரிவரியாக சொல்லப் பட்டவை தான். அவற்றை பின்பற்றி பாபத்திலிருந்து விலக வேண்டாமா?''
நதிகள் மழைக்காலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓட 'ஓ' வென்று இரைச்சலோடு கடலை நோக்கி ஓடும். கோடையில் வறண்டு நீரேற்று காய்ந்து கிடைக்கும். சமுத்திரம் அப்படியல்ல. கார்காலத்திலோ, கோடையிலோ என்றும் அது பொங்கி வழிவதுமில்லை வறண்டு போவதுமில்லை. சிறந்த ஞானிகள் அவ்வாறே. ஒரே சீராக எப்போதும் இருப்பார்கள்.
எதன்மீதாவது பற்று இல்லாத மனிதனே கிடையாது.அதுவே அவனுக்கு துன்பத்தை தரும் சாதனம். இதை உணர்ந்ததால் தான் பற்றே வேண்டாம் என்று ஞானி தூர ஓடுகிறான். ''ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்'' என்று இதை தான் திருமூலர் சொல்கிறார்.
குடும்ப புதை மண்ணில் அவன் எதிர்பார்ப்புகளில் தோற்று இன்னும் கீழேயே தான் புதைவான். மனிதைப் இரவி அடுத்தவனுக்கு மோக்ஷத்தை வாசல் திறந்து தான் வைக்கப்பட்டிருக்கிறது. அவன் தான் வாழ்க்கை சிக்கலில் தானே போய் மாட்டிக்கொண்டு நிற்கிறானே . எப்படி கரையேறுவது.
ஸ்ரீ கிருஷ்ணன் உத்தவனுக்கு நிறையவே சொல்கிறார். கேட்போம்.
No comments:
Post a Comment