Tuesday, June 1, 2021

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம் -- நங்கநல்லூர் J K SIVAN


23. மாணிக்க வாசகரும் மஹா பெரியவாளும்.

காலம் செல்லும் வேகத்திற்கு ஈடில்லை. மஹா பெரியவா திக்விஜயத்தில் இதோ இன்னொரு சாது ர் மாஸ்யம் வந்துவிட்டதே. இந்த வருஷம் சாதுர் மாஸ்யம் ஆவுடையார் கோவிலில் என்று தீர்மானித்து விட்டார்.
ஆவுடையார் கோவில் மஹாத்மியம் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே முதலில் அந்த க்ஷேத்திரத்தை பற்றி சில வார்த்தைகள் அறிந்துகொண்டால் எதற்காக மஹா பெரியவா அந்த க்ஷேத்ரத்தை தேர்ந்தெ டுத்து அங்கே சாதுர் மாஸ்யம் விரதம் ரெண்டு மாசம் அங்கே இருக்க தீர்மானித்தார் என்பது புரியும்.

நமது ஹிந்து சனாதன தர்மத்துக்கு நீர் வார்த்து வளர்த்தவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள் தவிர சைவ சமய குரவர்கள் எனப்படும் தூண்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மணிவாசகர். இவர்களில் திருவாசகம் எழுதியவர் மணிவாசகர். திருவாதவூரில் பிறந்ததால் வாதவூரான் என்று இயற் பெயர். பாண்டிய நாட்டில் ஒரு பிராமண குடும்பத்தில் உதித்து, இளமையிலேயே சிவ பக்தி, ஞானம் கொண்ட இவரை அறிந்த பாண்டிய ராஜா அரிமர்த்தன பாண்டியன் தனது ராஜ்யத்தின் தலைமை மந்திரியாக நியமித்துபதவியளித்தான். சித்தத்தை சிவன் பாலே வைத்திருந்த வாதவூரரை பாண்டியமன்னன் ஒரு நாள் அழைத்து

'' வாதவூரரே , நாம் குதிரைகள் வாங்கி நமது படையை பலப்படுத்த வேண்டிய அவசியம் வந்துள்ளது. நீரே இதற்கு தக்கவர். உமக்கு எங்கே நல்ல குதிரைகள் கிடைக்கும், அவற்றின் தரம், மதிப்பு, எவ்வளவு குதிரைகள் நாம் நமது படை வலிமைக்குப் பெற வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்யும் தன்மை உண்டு. எனவே இந்த முக்கியமான பொறுப்பைத் தங்களிடம் விடுகிறேன். இதோ அரசாங்க கஜானா வின் செல்வம் இதை செலவழித்து நல்ல குதிரைகள் கொண்டு வாரும் ''

''அப்படியே செய்கிறேன் மன்னா'' என்கிறார் வாதவூரார்.

''வாதவூரரே நீர் எந்த காரியத்தையும் புத்திசாலித்தனமாக சிந்தித்து ஆராய்ந்து செய்பவர் . எனவே நமக்கு நல்ல குதிரைகள் சீக்கிரமே கிடைக்கும்படி செய்யவேண்டும் '' என்றான் ராஜா.

பொற்காசு மூட்டைகளுடன், ஆள் படையுடன் குதிரைகளைத் தேடி புறப்பட்ட வாதவூரர் சிவனை வேண்டினார்
'சோமசுந்தரா, எல்லாம் உன் சித்தம். நாட்டைக் காக்க குதிரை. என் மனக் குதிரையை அடக்க ஒரு குரு. ரெண்டையும் தேட இது நல்ல சந்தர்ப்பமாக அமையட்டும்''. மதுரை சொக்கனின் விபூதியை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டு கிளம்பினார் .
ஆவுடையார் கோவிலுக்கு இன்னொரு பெயர் திருப்பெருந்துறை. அந்த ஊரை பொழுது சாய வாதவூரர் அடைகிறார்.

'இந்த ஊர் அமைதியாக இருக்கிறது. இங்கேயே தங்குவோம்'' . வாதவூரரை ஏதோ காந்தமாக திருப்பெருந்து றை கவர்ந்தது. திருப்பெருந்துறை ஈசன் ஆத்மநாதனுக்குப் பரம சந்தோஷம்

''இதோ வந்து விட்டான் என் வாதவூரன். என் மனம்கவர்ந்த பக்தன் கிடைத்துவிட்டான்''

''இங்கே சிவன் கோவில் ஏதாவது உள்ளதா? ஞானிகள் யாரேனும் உள்ளனரா?''

என்று வாதவூரர் அந்த ஊர்க்காரர்களைக் கேட்கிறார்.

''ஐயா, சற்று தூரத்தில் ஒரு குருந்த மரத்தடியில் ஒரு முதிய சிவனடியார் எப்போதும் அமர்ந்து இருக்கிறார். யாருடனும் பேசுவதில்லை. அவரைப் போய் பாருங்கள் ''

ஒரு வயோதிக பிராமணர் கையில் சிவ ஞான போதம் என்ற ஓலைச் சுவடியை வைத்துக் கொண்டு ஒரு குருந்த மரத்தடியில் உற்கார்ந் திருந்தார். அருகே ஒரு பழைய கால சிதில மடைந்த சிறிய சிவன் கோவில். அந்த சாதுவைச் சுற்றிலும் பல சிஷ்யர்கள்.

அந்த பழைய சிதிலமான சிவன் கோவில் உள்ளே நுழைந்தார் வாதவூரர். சிலையானார். ஆத்மநாதர் வாதவூரர் ஆத்மாவில் கலந்தார். கண்களில் பிரவாஹம் பொங்கியது. அந்த கோவிலைக் கால்கள் பல ப்ரதக்ஷணங்கள் சுற்றின. ஹர ஹர மஹாதேவா ஓம் நமசிவாய'' என்ற சப்தம் காதில் ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது. மனம் பாகாய் உருகியது. சற்று தள்ளி இருந்த ஒரு குருந்த மரத்தடியில் சிவந்த மெலிந்த வெண் தாடி சடை முடியோடு ஒளி வீசும் கண்கள் அழைத்தன.

கன்றுக்குட்டி தாயிடம் சென்றது. நீண்ட நாள் தேடிய தாய் சேய்க்கு கிடைத்து விட்டாள். தடாலென்று அந்த பிராமண சாது காலடியில் வீழ்ந்தார் வாதவூரர். இவரே என் குரு என அறிந்து மகிழ்ந்தார். வார்த்தைகள் வெளி வரவில்லை. ''சிக்கென' 'ப் பிடிக்கத் தான் அவருக்குதெரியுமே.
குருவின் கால்களை பிடித்துக்கொண்டு ''ப்ரபோ, என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு அருள்வீ ராக'' என்று கெஞ்சினார்.

''நான் இதற்காகத் தானே வந்து காத்திருக் கிறேன்''

என்று ஆத்மநாதர் முதியவர் வடிவில் மனதில் மகிழ்ந்தார் .

வாதவூரர் பாதாதி கேசம் வரை ஏதோ ஒரு புரிபடாத சக்தி தன்னுள் புகுந்ததை உணர்ந்தார். சிவஞானம் அவரை ஆட்கொண்டது. வானில் மேகக்கூட்டத்தில் பார்க்கும் இடத்தில் எல்லாம் கரிய சிவலிங்க கூட்டங்கள். அத்தனைக்கும் மழை அபிஷேகங்கள். இடி எனும் பேரிகை, உடுக்கு, மத்தள முழக்கம். சிவகணங்கள் கண்ணுக் கெட்டிய வரை பேரானந்தத்தில் ஆழ்த்துகிறார்கள். முனிவர்கள், ரிஷிகள், மானுட பக்தர்கள் வெண்ணிற பூச்சோடு.......செருகியி ருந்த கண்கள் திறந்தன. மீண்டும் லேசாக அரை பாகம் மூடின ....நினைவு அழிந்தது. மீண்டும் நினைவு பெற்றபோது தான் குருநாதர் திருவடிகளில் மயங்கி க் கிடப்பதை வாதவூரர் உணர்கிறார்.

''குருநாதா, பரம்பொருளே, என்னை ஆட்கொண்ட தெய்வமே, என் நெஞ்சத்தை உருக்கி என்னை சிவமாக்கிய செல்வமே, எல்லாம் உன் உடைமை யே, எல்லாம் உன் அடிமையே, எல்லாம் உன்னு டைய செயலே என்று தனது ஆபரணங்கள் செல்வங்கள் அனைத்தையும் அந்த குருவின் பாதத்தில் சமர்ப்பித்தார். சகலமும் துறந்தவர் துறவியானார். த்யானத்தில் மனம் லேசானது. கண்களில் பரவசம். மணிப்ரவாளமாக சிவ ஸ்துதி நாவில் பெருக்கெடுத்துப் பாடல்களாக உருவெ டுக்க அருமை தீந்தமிழில் சிவனை துதித்து வாசகங்கள் மணி மணியாக வெளிவந்து அவற்றை மாலையாக சிவனுக்குச் சூட்டினார்.

''அப்பனே, வாதவூரா, நீ ''மணி வாசகனடா''. இங்கேயே இரு ''

ஆத்மநாதர் அன்போடு அழைத்தார். நமக்கு மணிவாசகர் கிடைத்தார். கண் மூடி குருவை கீழே விழுந்து வணங்கிய மணிவாசகர் கண் திறந்து எழுந்தபோது ப்ராமண முதியவரைக் காணவில்லை. கதறினார். பக்தி பரவசமாக தன்னை மறந்த நிலையில் தேடல் தொடர்ந்தது.

ராஜாவின் ஆட்கள் மெதுவாக அவர் குதிரை தேடி வந்ததை நினைவூட்ட

''நீங்கள் திரும்பி செல்லுங்கள், குதிரைகள் சீக்கிரம் ஒரு மாத காலத்தில் வந்து சேரும்'' . ஏதோ ஒரு இயந்திரம் போல் பதிலளித்தார் மணிவாசகர். அந்த சிறு பழைய சிறிய கோவிலில் ஆத்ம நாதரை வணங்கிய மணி வாசகர் தான் குதிரை வாங்கக் கொண்டுவந்த பொற்காசு களை செல்வங்களை செலவழித்து ஒரு பெரிய கோவிலாக அதை நிர்மாணித்தார். திருப்பெருந்து றையில் சிவன் கோவில் உருவா னது.

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. 1100 வருஷம் பழைய கோவில். நமக்குத் திருவாசகம் தந்த க்ஷேத்ரம்.

''கடல் கிழக்கு, தெற்கு கரை பெரு வெள்ளாறு, குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோனாட்டிற் கெல்லை யெனச் சொல்'' ''வெள்ளாறது வடக்காம், மேற்குப் பெரு வெளியாய், தெள்ளார் புனற்கன்னி தெற்கா கும் - உள்ளார ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்பாண்டிநாட் டெல்லைப் பதி'' - கம்பர்..
திருப்பெருந்துறை சிவனான ஆத்ம நாதர் கோவிலில் கொடி மரம், பலி பீடம், நந்தி இல்லை கர்ப்ப கிரஹத்தில் லிங்கம் இல்லை. லிங்கமற்ற ஆவுடையார் மட்டும் தான். ஏதோ பூதங்கள் வந்து பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள், சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியதாக ஒரு தகவல். சிறந்த சிற்ப க்கலைகள் நிறைந்த பொக்கிஷம். வாழ்வில் ஒரு தரமாவது தரிசிக்க வேண்டிய புனித ஆலயம்.இந்த ஆலய மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கல் சங்கிலி அற்புதமாக செதுக்கப் பட்டு உயரத்தில் தூங்குவதால் நமது விஷமக் கைகள் படாமல் காப்பாற்றப் பட்டிருக்கிறது.
வாதவூரர் செய்கையை அறிந்து பாண்டியன் சினம் கொண்டான். ஒருமாத காலம் பொறுத்த பின்னும் குதிரைகள் வந்து சேர வில்லை. அரிமர்த்தன பாண்டியன் மணிவாசகரை சிறையில் அடைத்தான். கொடுமைப் படுத்தினான். மணி வாசகர் மனம் ஆத்மநாதர் மேலேயே இருந்ததால், சிவன் நரிகளை பரிகளாக்கி அனுப்பினான், வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்க வை த்தான். பாண்டியன் சிவனின் திருவிளை யாடல்களை புரிந்து கொண்டான். வாதவூரர் கால்களில் விழுந்து அடிமையானான் .
இந்த அற்புத ஊருக்கு மஹா பெரியவா வந்து தங்கினார். ஆலயத்தின் அற்புத சிலைகளின் நேர்த்தியை, சிற்பக்கலை அழகைக்கண்டு ரசித்து வியந்தார். இந்த ஆலய நிர்வாக பராமரிப்பு திருவாடுதுறை ஆதீன தம்பிரான் மேற்பார்வையில் உள்ளது. தினமும் ஆத்ம நாதர், யோகாம்பிகை, மாணிக்க வாசகர், குருந்த மர தரிசனம் செய்து மகிழ்ந்தார் மஹா பெரியவா.

மஹா பெரியவா தங்கியிருந்த காலத்தில் மிகவும் உழைத்து ஸ்வாமிகளுக்கும் மடத்திற் கும் சேவை செய்தவர் நெய்க்குப்பை ஏகாம்பர சேர்வைக்காரர். அவர் இன்னொரு மணி வாசகர் என்று சொல்லலாம். அவ்வளவு சிவ பக்தி, பெரியவாளிடம் பாசம், பக்தி, மரியாதை.
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவிலி ல் சாதுர்மாஸ்யம் முடிந்து மஹா பெரியவாளின் விஜய யாத்திரை துவங்கியது. திருவாடுதுறை ஆதீனம், மடாதிபதி, அதிகாரிகள் மற்றும் ஆன்மீகத்தொண்டர்கள் குவிந்தனர். மஹா பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பாதபூஜைகள் செய்தனர். மஹா பெரியவா ராமேஸ் வரம் நோக்கி பிரயாணம் துவங்கினார்.

தொடரும்


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...