சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்- 6
நங்கநல்லூர் J K SIVAN
ராமன் ஒரு கடவுள் என்று அறிந்து ராமாயணம் படித்தால் நாம் அவனை விட்டு சற்று தூரத்தில் போய்விடுவோம். அவனும் நம்மைப்போல் எலும்பு நரம்பு, சதை, ரத்தத்தோடு பிறந்த ஒரு மனிதன், என்று உணர்ந்து படித்தால் அவன் எப்படி ஒரு சிறந்த மகனாக, கணவனாக, ராஜாவாக, வீரனாக இருந்தான் என்று போற்ற முடியும். என்ன துன்பம் வந்தாலும் நேர்மை, நீதியை விட்டு வழுவாத உறுதி மனம் படைத்த மனிதனாக, தியாக சிந்தனை உள்ள தயாள குணவானாக, குருபக்தி, பெரியோரிடம் மரியாதை உள்ளவனாக இருந்தான் என்று அறிந்து அவனை ஒரு ஆசானாக வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும். நாமும் அவன் போல் வாழவேண்டும் என்ற படிப்பினை வலுப்பெறும்.
மனிதனாக தோன்றிய ராமனுக்கும் சில சந்தர்ப்பங்களில் கோபம் வந்தது. அந்நேரங்களில் அவனை சமாதானப்படுத்தி சம நிலை பெறச் செய்தது லக்ஷ்மணன் வார்த்தைகள் என்பது ராமன் நம்மைப் போன்றவன் என்ற உணர்வை வாலமீகி ஸ்லோகங்களில் காட்டுகிறது.
ஏன் ராமன் வாலியிடம் சமரசமாக நட்பு பாராட்டி அவன் உதவியைப் பெறாமல் சுக்ரீவனின் நட்பை தேடினான் என்று ஒரு கேள்வி வருகிறது. அதற்கு காரணங்கள் உள்ளன. வாலியை விட ''சுக்ரீவனிடம் சென்று நீ உதவியை நாடு'' என்று கபந்தன் என்கிற ராக்ஷசனாக இருந்த கந்தர்வன் கூறிய வார்த்தைகள் முக்கியமானவை. ஹனுமான் வாலியை விட சுக்ரீவனுக்கு மந்திரியாக இருக்கவே விழைந்தான் என்றும் புரிகிறது. வாலியின் செயல்கள் அவன் மனசாட்சி இல்லாதவன் என்று புரிந்தது. ஆகவே ராமன் சுக்ரீவனை தேர்ந்தெடுத்தான். அவனைத் தேடி ரிஷ்யமுக பர்வதம் சென்றான். சுக்ரீவனின் நிலை அறிந்ததும் அவன் மேல் ராமனுக்கு இரக்கம் வந்தது. இருவர் மனைவிகளும் கடத்தப்பட்டவர்கள் என்ற நிலைமையும் அவனை நெருங்கச் செய்தது. கடத்தியவர்கள் இருவரும் நீதிக்கு தலை வணங்காத பெரும் பலசாலிகள் எவராலும் வெல்ல முடியாதவர்கள், மற்றும் வாலி ராவணன் இருவரும் மனமுவந்த நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுபவர்கள் என்பதும் கூட, ராமர்-சுக்ரீவன் ஒன்று சேர்ந்ததற்கு காரணமாக இருக்கலாம். ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் கொடுப்பதற்கும் பெறுவதற்கும் ஏதோ இருந்ததே.
ராமனை அவன் பெருமைகளை இக்காலத்து விஞ்ஞான அணுகுமுறைகளை அளவுகோலாக வைத்துக்கொண்டு நெருங்கக் கூடாது. அவன் கால நீதி நியாய நெறி முறைகளை வைத்து தான் புரிந்து கொள்ள வேண்டும்.
வாலி செய்த தவறுகளுக்கு மரணம் தான் தண்டனையா? ராமனின் இயற்கைக்கு விரோதமாக அவன் செயல் இருந்ததா வாலிவதத்தில்? என்றெல்லாம் கேள்வி எழுகிறது.
சாஸ்திரிகள் தனது ராமாயண பிரசங்கத்தில், பஞ்சவடியில் ராவணன் வரும் முன்பு தீக்குளித்து மாய ஸீதையாக அவனால் தூக்கிச் செல்லப்பட்டு பின்னர் யுத்தத்தில் ராவணன் மாண்டபின் ராமனைச் சேரும்போது மீண்டும் தீக்குளித்து மாய சீதா மறைந்து ஒரிஜினல் சீதாவாகிறாள் என்பதை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்.
சீதை பஞ்சவடியில் ராவணன் வரும் முன்பு, தகாத வார்த்தைகள் கூறி அபச்சாரம் செய்து லக்ஷ்மணனை விரட்டினாள் என்று சீதையின் குணத்தில், நடத்தையில் களங்கம் கற்பிப்பதை, குறை கூறுவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
''சீதா, உன் மீதுள்ள களங்கத்தை போக்கவே நீ தீக்குளிக்க செய்தேன் , இது உன் மீது கோபத்தாலோ, வெறுப்பால் அல்ல, குடும்ப, குல பெருமையை நிலைநாட்டவே'' என்கிறார் ராமர்.
பின்னர் அவள் மீது ஒரு அபவாதம் சூட்டப்பட்டபோது ''சீதா உன் மீது குறை சொல்லப்பட்டு உன்கற்பின் மேல் கறை படிந்துவிட்டது. எனக்கு உன்மேல் எந்த பிடிப்பும் இல்லை. விருப்பமும் இல்லை. நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் . நீ லக்ஷ்மணனோடோ , பரதனோடோ , சத்ருக்னனோடோ எவரொடு வேண்டுமானாலும் சென்று தங்கலாம். இங்கு என்னோடு உனக்கு இடமில்லை'' என்று சொன்னதாக வரும் இடத்தில் ரொம்ப கடின வார்த்தைகள் வால்மீகி மூலம் கிடைக்கிறது. அதை நாம் மாற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை. அந்த நேரத்தில் வெளிப்பட்ட கோபம் எரிச்சல், வெறுப்பு அதில் தவனிக்கிறது. ராமன் தானும் ஒரு மனிதன் என்று அந்த இடத்தில் காட்டிக் கொள்கிறான் அவ்வளவே. சீதையும் தான் எதிர்த்து பேசுகிறாள். ''லக்ஷ்மணா, மூட்டுடா தீயை, கொழுந்து விட்டு எரியட்டும் அது. அது ஒன்று தான் இதற்கெல்லாம் தீர்ப்பு, விடை'' என்கிறாள். ராமன் மறுப்பு சொல்லவில்லை.
தீயில் சேர்ந்த சீதையை அக்னி பகவான் ஜாக்கிரதையாக தாங்கி ராமனிடம் சேர்க்கிறான். அப்போது ராமன் சொன்னது ''நான் சீதையை சந்தேகிக்கவே இல்லை, அவள் நடத்தையில் எனக்கு எந்த ஐயமும் இருந்ததில்லை'' . இதை எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்?. ராமனுக்கு முன்பே தெரிந்ததை இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் வெளிப்படுத்துவதாக. அப்படித்தான்.
ராமன் உண்மையில் இரு மன திகைப்பில் இருந்தான். ''சீதை அப்படிப்பட்டவளோ. சே சே அவளாவது அப்படி நடப்பதாவது?'' இந்த ஒரு நிலையில்லாத தன்மையில் தான் சீதையைப் புறக்கணித்தான். ராமனிடம் ஹனுமான் எவ்வளவோ மன்றாடியும் செவி சாய்க்காத ராமன் அக்னி பரிக்ஷை மூலம் அவளை மீண்டும் அவன் மனதோடு இணைத்துக்கொண்டான். வேறு எந்த சாட்சியங்கள் விளக்கங்கள் தேவையில்லை.
இன்னும் மேலே ரசிக்கலாம்.
No comments:
Post a Comment