காளமேகம் -- நங்கநல்லூர் J K SIVAN
முருகன் மேல் ஒரு விசித்திர பாடல்.
ஒருவன் ஏதாவது ஒரு துறையில் சிறந்தவனாக இருந்தால் அந்த துறையில் உள்ள மற்றவர்களுக்கு அவன் மேல் பொறாமை, ஆத்திரம், கோபம், எல்லாம் தாராளமாக வருவது மானுட இயல்பு.
எனக்கு சௌகர்யம் என்னவென்றால் எந்த துறையிலும் நான் துரை இல்லை . என் மேல் பொறாமைப்பட எவரும் இல்லை, என்னை நினைக்கவே நேரம் இல்லாதபோது எனக்கு எங்கிருந்து எதிர்ப்பு வரும்?. ரொம்ப சந்தோஷமாக இருக்கும் சுகவாசி நான்.
பாவம், காளமேகப் புலவருக்கு அப்படி இல்லை. ஒவ்வொரு ராஜா சபையிலும் அவரை எதிர்க்க புலவர்கள் கிளம்பிக் கொண்டே இருந்தார்கள். பி[போட்டிக்கு அழைத்தார்கள். அவரும் எதற்கும் சளைக்காதவர். அவர்களையெல்லாம் வென்று அவர் பெருமை நாளுக்கு நாள் இதனால் பெருகிக்கொண்டே போயிற்று.
எப்படியாவது காளமேகத்தை தடுமாறச் செய்யவேண்டும், அவமானப்படுத்தவேண்டும் என்று பல நாள் தூங்காத புலவர்கள் யோசிக்கும் வேளையில் ஒரு ஊருக்கு காளமேகம் வந்தார். அந்த ஊர் ராஜா அவரை வரவேற்றான். வழக்கம்போல் காளமேகத்தை அரசவைப் புலவர்கள் கேள்விகள் கேட்க அவர் அனைத்துக்கும் தக்க பதில் அளித்து ராஜாவின் நல்மதிப்பை பெற்றார்.
ஒரு புலவன் காளமேகத்தை எப்படி மடக்குவது என்று ஏற்கனவே யோசித்து வைத்திருந்தான் அவன் சபையில் எழுந்து
'' காளமேகப் புலவரே, நீர் சிறந்த புலவர்,உடனே கவிபாடும் சக்தி உள்ளவர் என்கிறார்களே. எங்கே நான் கேட்கும் ஒரு கேள்விக்கு பதில், கவிதையாக, உங்களால் சொல்லமுடியுமா? தயாரா? இன்று கந்த சஷ்டி ஆகவே முருகன் மேல் பாடவேண்டும். .
''கேளுங்கள் முயன்று பார்க்கிறேன். ''வேலில் ஆரம்பித்து மயிலில் முடிக்கட்டுமா?'' என்கிறார் காளமேகம்.
''அதெல்லாம் வேண்டாம். முதல் அடி ''செருப்பில்'' ஆரம்பித்து, கடைசி அடி ''விளக்குமாறு'' என்று முடித்தால் அதுவே போதும். எங்கே ஆரம்பியுங்கள்? சபையில் எல்லோரும் உஷ் சே என்ன இது, என்று அமைதியற்று முனகினார்கள். எல்லோரையும் அமைதியாக இருக்க ராஜா சைகை காட்டினான்.
''முருகா, இது என்ன சோதனை, நான் உன் பக்தன். உன்னை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, உன்னைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? இது தகுமா? முறையா? இப்படி சோதிக்கிறானே இந்த பாழும் புலவன். உன் அருளால் உன் அனுகிரஹத்தால் பாடுகிறேன்.
முருகனை மனதார கும்பிட்டு கணீர் என்று ஆரம்பித்தார் காளமேகப்புலவர்..
"செருப் புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்ததிரு தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமாறே"
இதற்கு அர்த்தம் சொன்னால் தான் சட்டென்று புரியும்.
செரு - யுத்தகளம் . செருப்புக்கு என்றால் போர்க்களம் புகுந்து. அப்படி போர்க்களத்தில் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறு (சொல்லு என்று) அடியேன் உன்னைக் கேட்கிறேன்.
அப்புறம் என்ன கந்த சஷ்டி அன்று முருகன் அருளால் ராஜா காளமேகப்புலவருக்கு நிறைய சன்மானங்கள் தந்தான். மரியாதை எல்லாம் கொடுத்தான். மகிழ்ந்தான். குசும்பு பிடித்த புலவன் ராஜாவின் ஆட்கள் அவனைப் பிடிக்கும் முன்பு எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ அவ்வளவு வேகமாக அந்த ''யுத்தகளத்தை '' விட்டு ஓடினவன் இன்று வரை அங்கே திரும்பவில்லை என்று கேள்வி. அவனுக்காக செருப்பு விளக்குமாறு காத்துக்கொண்டிருக்கிறதாம்.
இன்னொரு காளமேக கவிதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
No comments:
Post a Comment