பழைய நினைவுகள். நங்கநல்லூர் J K SIVAN
இப்போதெல்லாம் கல்யாணங்களில் யாருமே நாதஸ்வரம் கேட்பவர்களில்லை. எல்லோ ரையும் நாலா பக்கமும் பரிதாபமாக பார்த்துக்கொண்டே நாயனக்காரர் , பிலஹரி காபி, தன்யாசி என்று .வெளுத்து வாங்குவார். நல்ல ஆலாபனை சுகமாக ஆரம்பிப்பார், அல்லது லயித்து வாசித்துக் கொண்டிருக்கும்போது வாத்யார் கைதூக்கி நிறுத்து என்பார். அப்புறம் மறுபடியும் நாதஸ்வரம் மீண்டும் ஒலிக்கும் நிறுத்தப் படும். அக்காலத்தில் நாதஸ்வர வித்வானுக்கே எப்போது நிறுத்தவேண்டும் கெட்டி மேளம் வாசிக்கவேண்டும் என்று தெரியும். சங்கீத ரசிகர்களும் அவர்களைச் சூழ்ந்துகொண்டு இதைப்பாடு , அதைப்பாடு என்று நேயர் விருப்பம் கேட்பார்கள்.
இப்போது ஒலிபெருக்கி வந்த காலத்தில் மேடையில் வாத்தியார்கள் நடுநடுவே உபன்யாசம் வேறு .செயகிறார்கள். மாங்கல்ய தாரணம் போது கெட்டி மேளம் கண்டிப்பாக வாசிப்பார்கள். அதற்கு முக்கிய காரணம், அசுப மான வார்த்தைகள் யாரிடமிருந்தாவது, ஐயோ,அச்சச்சோ , போன்றவையோ தும்மல்களோ வேறு அமங்கல வார்த்தைகள் கேட்கக்கூடாது என்பதற்காக மங்கள வாத்யத்தை .ஒலிக்கச் செய்வது.
அப்பா குடம் குடமாக அழுவார். மாங்கல்ய தாரணம் போது மலர் மழை,மங்கள அக்ஷதை மணமக்கள் வாத்தியார்கள், அருகில் உள்ளவர்கள் தலையில் பொழியும். உறவினர்கள் நண்பர்கள் ஊர்க்காரர்கள் பெண்வீட்டாரை, பிள்ளை வீட்டாரை ஆலிங்கனம் செய்து ''மாப்பிள்ளை வந்தாச்சா, மாட்டுப்பொண்ணு வந்தாச்சா'' என்றெல் லாம் சந்தோஷமாக விசாரிப் பார்கள். பெரிசுகளிடம் பேரன் ஆம்படையா வந்தாச்சா, பேத்தி ஆம்படை யான் வந்தாச்சான்னு பல் இல்லாத ஜோடிகள் விஜாரிப்பதும், மற்றவர்கள் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிப்பதும் வழக்கமான முறை. .பாட்டி தாத்தாக்கள் மதிக்கப்பட்டு அவர்களது ஆனந்தம் கண்களில் பொங்கித் ததும்பும். அப்புறம் ஆசீர்வாதங்கள் வாத்யார் எல்லாருமே ஓதியிட்டு கொடுப்பார்கள். சுபே சோபனே முஹுர்த்தே.... மாமா மாமி ஆசீர்வாதம் பதினாயிரம் கட்டி வராகன் என்று சொல்லி ஒரு வெள்ளி ரூபா காசு கொடுத்த காலம் அது. முதலில் வீட்டு பெரியவர்கள் நெருங்கிய உறவுகள் அப்புறம் மற்றவர்கள் என்று ஆசீர்வாதம் தொடரும். கோவில்களிலிருந்து ஸ்வாமிக்கு சாத்திய மாலை பிரசாதங்கள், குலதெய்வம் கோவில் பிரசாதங்கள் வரும்.
நிறைய விஷயங்கள் நமது ஹிந்து சம்பிர தாயத்தில் புரிந்து கொள்ளாமலேயே கல்யாணங்கள் நடைபெறுகிறது. நடத்தி வைப்பவருக்கோ, சம்பந்தப்பட்டவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ எடுத்துச் சொல்ல வாத்தியார்கள் தயாரில்லை, அவர்கள் தயாராக இருந்தாலும் கேட்பதற்கு ஆளில்லை. மந்திரங்கள் சொல்வதில்லை, மேடையி லிருதபடியே மற்றவர்களோடு பேசுவது, ஜாடை காட்டுவது, தலையாடுவது போன்ற ஸ்ரத்தையற்ற செயல்கள் அருவறுப்பானவை. எப்போது சம்பிரதாயப்படி ஒரு காரியம் செய்ய முற்படுகிறோம், அதில் நடிப்பு எதற்கு?
அப்போதிருந்த ஆடம்பரம் இல்லாத அமோகமாக நிஜமான சுற்றமும்/நட்பும் சூழ நடந்த அந்த நாள் கல்யாணங்களை நினைத்துப் பார்த்தால் ஒரு பக்கம் மகிழ்ச்சி யாகவும், மறு பக்கம் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை அறிந்து மனம் வேதனைப்படுகிறது. உதாரணமாக ரொம்ப முக்கியமான சப்தபதி, அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது போன்ற சடங்குகள் அர்த்தமற்றவையாக போய்விட்டது.
நமது ஹிந்து சனாதன கல்யாணங்களில் சப்தபதி என்ற ஏழு அடி சத்ய பிரமாணம் மிக முக்கியமானது. கடைசி வரை வாழ்க்கையில் இதை கடைபிடித்தவர்களும் உண்டு. என் முன்னோர்களில் பலர் அவ்வாறே வாழ்ந்தவர் கள். தெய்வங்கள்.
தஞ்சாவூர் தமிழில் ''ஏழு தப்படி'' என்றால் ஏழு காலடி என்று அர்த்தம். தப்பான அடி அல்ல. மாப்பிள்ளை, பெண் இருவரும் வலது கையை பிடித்துக்கொண்டு ஹோம குண்டத்தையும் கல்யாணம் செய்து வைக்கும் வாத்தியாரையும் சுற்றி வருகிறார்கள். அவர் ஏதோ மந்திரம் சொல்கிறார். ஒவ்வொரு அடி வைக்கும்போதும் தம்பதியர் பகவானை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். அதாவது வாத்தியார் சொல்லும் மந்திரத்தை 'தப்பில்லாமல்' திருப்பிச் சொல்வதின் மூலம். இந்த ஏழு அடி எடுத்து வைப்பதன் அர்த்தம் என்ன?
முதல் அடி வைக்கும்போது : ''அப்பனே, எங்களுக்கு சமர்த்தியாக சுத்தமான, புஷ்டியான, ஆகாரத்தை அளிப்பாயாக. உன்னை வழிகாட்டியாக வைத்துக் கொண்டோம். நாங்கள் வாழ்க்கைப் பாதையில் முதல் அடி எடுத்து வைக்கிறோம். எங்களுக்கு நல்ல மரியாதை, கௌரவம் கிடைக்கும்படியாக நாங்கள் இருவரும் சேர்ந்து நடந்து எங்கள் உணவைப் பெற அருள் புரிவாய்.
ரெண்டாவது அடி எடுத்து வைக்கும்போது : 'சுவாமி எங்களுக்கு மன, உள்ள, உடல், ஆன்ம உறுதி அருளி நல வாழ்வு தொடங்க அருள்வாய். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் சந்தோஷமாக நடக்க அருள்வாய். இந்த பலத்தை அடைய நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கைப் பாதையில் அடுத்த அடி எடுத்து வைக்கிறோம். காப்பாற்று.
மூன்றாவது அடியெடுத்து வைக்கும்போது: ' எங்களது செல்வம் பெருகட்டும். வாழ்க்கை வளம் பெறட்டும்.எங்கள் வாழ்க்கைப் பாதையில் இந்த அடி எடுத்துவைக்கும்போது உன்னை வேண்டுவது எதிர் வரும் இன்ப துன்பங்களை சேர்ந்து அனுபவித்து வாழ்க்கையின் சுபிக்ஷத்தை நோக்கி நடப்போம்''.
நான்காவது அடி வைக்கும்போது: ''எங்கள் வாழ்க்கையில் இந்த அடி எடுத்து வைக்கும்போது பகவானே, உன்னருளால், எங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்தோஷத்துடன் ஒருவரை ஒருவர் நேசத்தோடும் அன்போடும், பாசத்தோடும். நம்பிக்கையோடும், வாழ வேண்டும் .எங்கள் பெற்றோர், முன்னோர், மூத்தவர் ஆசி பெறவேண்டும்"
ஐந்தாவது அடி எடுத்து வைக்கிறார்கள் தம்பதியர் - அப்போது அவர்கள் வேண்டும் வரத்தின் பொருள்: ' லோகா சமஸ்தா சுகினோ பவந்து' . உலகம் யாவையும், எல்லோரும் நல்லவர்களாக, சந்தோஷத்தோடு வாழ வேண்டும். நல்ல வாரிசுகளைப் பெறவேண்டும. தான தர்மம் நாங்கள் இருவரும் சேர்ந்தே புரிய வேண்டும். எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும்'
ஆறாவது அடி : பகவானே, எங்களுக்கு நீண்ட சந்தோஷமான நோயற்ற வாழ்வு வாழ அருள்செய். எங்கள் இணை பிரியா வாழ்க்கை அமைதியாக நடக்கட்டும். அதற்கு இந்த அடியை நடக்கிறோம்.'
ஏழாம் அடி, சப்த பதியில் கடைசி அடி வேண்டுகோள்: தெய்வமே, எங்கள் இருவர் மனமும் கோணாமல் ஒன்றாகவே சேர்ந்து ஒருவருக்கொருவர் துணையாக, புரிதலோடு, அன்போடு, எந்த தியாகமும் புரியவேண்டும். எங்கள் இருவர் நட்பு நகமும் சதையுமாக, உயிரும் உடலுமாக பிரிக்க முடியாததாக அமைய வேண்டும்.
இந்த ஏழு வேண்டுகோள் இறைவனிடம் வைத்து கை கோர்த்து அக்னி சாட்சியாக வலம் வந்து வாழ்க்கையில் இவற்றை கடைப்பிடிக்க வாக்களிக்கிறார்கள். சத்தியத்துக்கு சான்றாக அக்னியை சாட்சியாக வைத்துக் கொண்ட சனாதன தர்மம் நமது. அப்போது புது கல்யாண மாப்பிள்ளை மனைவியிடம், ''இதோ பாரடி, இந்த ஏழடி நடந்த நாம் இனி உத்தமமான நண்பர்கள். உன் அன்பும் நட்பும் பிரியேன். நீயும் என் நிழலாக என்னோடு இணை பிரியாமல் இருப்பவள்'' என்கிறான்.'
No comments:
Post a Comment