இப்படி தான் வழக்கம்... நங்கநல்லூர் J K SIVAN ---
இது ஒரு வித்யாசமான கட்டுரை. கொஞ்சம் படிக்கும்போது நெளியவேண்டி இருக்கும். என்னசெய்வது?
நேற்று வரை ஒன்றாக இருந்தவர்கள், எத்தனையோ வருஷங்கள் ஒன்றாக கூடவே சாப்பிட்டவர்கள், படுத்தவர்கள், சண்டை போட்டவர்களில், உதவி செய்தவர்களில் ஓருவர் இன்று இல்லை, இனி இல்லை, என்றபோது அந்த பிரிவு மற்றவரை எவ்வளவு வாட்டும்?, அவரது வேதனை எப்படி இருக்கும்? என்று எழுதவோ சொல்லவோ இயலாது. அனுபவித்தவருக்கு தான் அதன் உண்மை நிலை புரியும். நெஞ்சம் அவ்வளவு சுலபமாக எதையும் மறப்பதில்லை. காலம் தான் கொஞ்சம் கொஞ்சமாக சகிப்புத் தன்மையை வளர்க்கும். எவ்வளவு வார்த்தைகள் வேண்டுமானாலும் ஆறுதல் சொல்லலாம். முதுகில் தட்டிக் கொடுக் கலாம். அது பிரிவின் துயரைப் போகாது.
என் நண்பர் ஒருவர் சில வாரங்களுக்கு முன் தனது மனைவியை இழந்து டெலிபோனில் என்னிடம் கதறினார். நானும் செத்துவிட வேண்டும் என்று விருப்பத்தைத் தெரிவித்தார். அவருக்கு முடிந்தவரை அவருடைய முடிவு அவர் கையில் இல்லை. மற்றவர்களுக்கு இன்னும் சேவை செய்ய பகவான் உடலை, உயிரை விட்டு வைத்திருக்கிறான் என்று புரியவைப்பதற்கு படாத பாடு பட்டேன்.
இறந்தவர் விஷயத்துக்கு வருவோம். இறந்தபின் இந்த உடல் ஒரு உணர்ச்சியற்ற மரக்கட்டை. உயிர் இருக்கும் வரை கால் சுண்டுவிரலில் எங்காவது இடித்துக் கொண்டால் கூட உச்சி மண்டை வரை வலிக்கும். ஆஹா ஊஹூ என குதிக்கிறோம். அடிபடாதவரை அந்த சுண்டுவிரல் நமது எண்ணத்திலோ கவனத்திலோ இல்லை. அப்படி வலி பொறுக்காத இந்த உடலை இப்போது நெருப்பிலிடப்போகிறார்கள். அதனாலென்ன?
எரிப்பது முன்போல் ஆற்றங்கரையில், ஒதுக்குப்புரத்தில் இல்லை. விறகுகள் சேர்த்து விரட்டி மேல் வைத்து நெருப்பு மூட்டுவது இப்போது இல்லை. இடமும் இல்லை, ஆளும் கிடையாது. புகையும் நாற்றமும் மறுக்கப்படும். எங்கும் மின்சார மேடை எரிப்பு ஊருக்கு ஊர் வந்துவிட்டது. , ஒரு டப்பாவில் சாம்பல் தான். மின்சார எரிப்பு வசதி எங்கும் இன்னும் நாடு முழுதும் பரவவில்லை என்பதால் ஆங்காங்கே சிற்சில கிராமங்களில் விறகு வைத்து சிதை மூட்டி எரிப்பது தொடர்கிறது. காசியில் ஒரே நேரத்தில் பல எரியும் சிதைகள். இத்தனை நாள் நம்முடன் காரில், வண்டியில், அருகே பேசிக்கொண்டு அமர்ந்திருந்தவர் இப்போது நமது பையில் ஒரு டப்பாவில் பிடி சாம்பல். அரைமணியில் இந்த மாறுதல். அந்த சாம்பலை பாலில் கரைத்து, கலந்து, சென்னை போன்ற நகரங்களில் கடலில் கொட்ட வசதி இருக்கிறது. புண்ய நதிகளுக்கு சென்று அங்கே கரைக்கும் வழக்கமும் இருக்கிறது. இது தான் மந்திரங்களோடு செய்யும் சஞ்சயனம். குளித்துவிட்டு மொட்டைத்தலையோடு வீடு திரும்பும் பிள்ளைகள் பலர் மற்ற பன்னிரண்டு நாள் காரியங்களை பணத்தை கருதாமல் செய்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். இறந்ததிலிருந்து பன்னிரண்டு நாட்கள் காரியங்கள் எல்லா இடங்களிலும் எல்லா நாட்களிலும் செய்யும் வழக்கம் நின்று விட்டது. இப்போதெல்லாம் ஈம, அந்திம காரியங்கள் செய்ய தனி இடம் கர்மஸ்தலங்கள் இருக்கிறது. அங்கே இதற்கென வாடிக்கையான ப்ரோஹிதர்கள், வைதீகர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக பேசி ஒரு தொகை வாங்கி ஏற்பாடுகள் செய்யும் குடும்ப வாத்யார்களும் இருக்கிறார்கள் .
பதிமூன்றாம் நாள் சுபஸ்வீகரணம் எனும் தீட்டை நீக்கி பரிசுத்தமாக்கும் நாள். அன்று எல்லா உறவினர்களும் பங்குகொண்டு பாயசம் வடையோடு சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம் .
முன்பெல்லாம் வாத்தியார்கள் முதல் நாள் அன்று இறந்தவரின் ஜீவனை ஒரு கல்லில் ஆவாஹனம் செயது மற்ற நாள் காரியங்களுக்கு உபயோகிப்பது வழக்கம். இந்த கல்லூன்றி பாஷாண ஸ்தாபனம் செய்வதை காலப்போக்கில், மற்ற வசதிகளை கருத்தில் கொண்டு மூன்றாம் நாள் ஆரம்பிக்கிறார்கள். பல மதத்தினர் வசிக்கும் FLAT பிளாட்களில், இதற்கெல்லாம் வசதியோ அனுமதியோ சில இடங்களில் கிடைப்பதில்லை என்பதால் இதற்கென உள்ள பொது இடங்களில் செய்யவேண்டி இருக்கிறது.
ஏன் இந்த கல் ஊன்றுதல் என்றால் இறந்தவுடன் ஜீவன் உடலை விட்டு சென்றாலும் உலகை விட்டு வெளியே செல்வதில்லை. வேறு உடலுக்கு காத்திருக்கும். அது பத்துநாள் என்று உத்தேசம் என்பதால் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் என கருடபுராணம் சொல்கிறது. சென்ற ஜீவனுக்கு இனி வடை பாயசம் ஐஸ்க்ரீம் கிடையாது. அதற்கு தேவை எள்ளும் ஜலமும். கல் ஊன்றிய இடத்தில் மற்ற பன்னிரண்டு நாள் காரியம் நடப்பதற்கு காரணம் அந்த ஜீவன் அங்கே தான் சுற்றிக்கொண்டிருக்கும் என்பதால். அதைக் கரை ஏற்ற தான் இந்த காரியங்கள்.
வாரிசுகள் வெளிநாட்டில் இருப்பதால் சடங்குகளில் கொஞ்சம் மாறுபாடுகள் இருந்தால் அதை தவிர்க்க முடியாது. வேறு யார் செய்ய முடியும்? முறைப்படி நடக்கவேண்டுமானால் இறந்த பத்துமணி நேரத்துக்குள் அவரது உடல் தகனம் செய்யப்படவேண்டும்.
ஒரு கருடபுராண விஷயம் சொல்லி முடிக்கிறேன். இறந்தபின் உடனே தஹனம் கூடாது. மூன்றரை நாலு மணிநேரத்திற்கு பிறகு தான் ALLOWED . ஏன் என்றால் இறந்தவுடன் யமதூதர்கள் அட்ரஸ் கண்டு பிடித்துக்கொண்டு வருவார்கள். ஜீவனை உடனே அவர்கள் யமலோகம் தூக்கிக்கொண்டு செல்ல அனுமதி இல்லை. சித்ரபுத்ரன் கணக்கு பார்க்கவேண்டும் அல்லவா? இறந்தவன் காலத்தை அவன் வாழ்வை கண்காணித்து இனி அவனை தூக்கிக்கொண்டு வா என்று சித்ரபுத்ரன் சொல்ல கண் சிமிட்டும் நேரம் ஆகுமாம். அவன் கண் சிமிட்டும் நேரம் நமக்கு மூன்றரை நாலு மணிநேரம் என்று எங்கோ படித்தேன்.
மீதி அப்புறம்.
No comments:
Post a Comment