சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்- 8
நங்கநல்லூர் J K SIVAN
சுக்ரீவனுக்கு வாலியிடம் மரண பயம். ராமலக்ஷ்மணர்களை முதலில் ரிஷ்யமுக பர்வதம் அருகே பார்த்ததும் கலங்குகிறான். ஒருவேளை வாலியின் கையாட்களோ, தன்னை கொல்ல ஏவப்பட்ட வர்களோ என்று அஞ்சி ஹனுமனை விட்டு விசாரிக்க சொல்கிறான். சுக்ரீவன் ராவணனை தெரியாது என்று சொன்னதும் நிஜமல்ல. உத்தரகாண்டத்தில் வாலி கிஷ்கிந்தையில் ஒரு மாத காலம் ராவணனை விருந்தின னாக உபசரித்தான் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே ராவணனைப் பற்றி சுக்ரீவன் அறிவான். வாலியோடு கிஷ்கிந்தையில் இருந்தபோது எப்படி ராவணனை தெரியாமல் இருக்க முடியும்? என்கிறார் சாஸ்திரிகள்.
துக்கத்தில் ஆழ்ந்த சுக்ரீவனால் சரியாக நினைவோடு பேசமுடியவில்லை என்று ராமர் அவனது பேச்சில் குறை கண்டுபிடிக்கவில்லை. ராமனின் நல்ல நண்பனாகிவிடுகிறான் சுக்ரீவன்.
சுக்ரீவன் சுகமாக வாழ்ந்துகொண்டு தனக்கு கொடுத்த வாக்கை மறந்ததாக, காலம் தாழ்த்துவதாக ராமன் நினைக்க இடம் கொடுத்துவிட்டான் சுக்ரீவன். ஆனால் அவன் முன்பே ஹனுமான் மற்றும் நீலன் ஆகியோரிடம் கட்டளையிட்டு எப்படி எங்கெல்லாம் சீதையைத் தேடவேண்டும் என்று கூறியிருந்தான் எனது பின்பு தெரிகிறது.
ராக்ஷஸர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், அளவுக்கு மீறி நம்பிக்கை கூடாது என்பதால் தான் விபீஷணனை ஏற்கவேண்டாம் என்று ராமனிடம் சொல்கிறான் சுக்ரீவன். நம்மை அண்டி அடைக்கலம் கேட்டவனை ஆதரிக்கவேண்டும் என்று ராமர் கூறியபிறகு விபீஷணனிடம் அன்பாக நட்பாக பழகுகிறான்.
பாலம் கட்டுவதற்கு முன்பே சுக்ரீவன் ராவணனைக் கண்ணால் கண்டால் உடனே கொல்வேன் என்கிறான்.
ராவணனிடம் தனியே மோதுகிறான். ராவணனின் கிரீடத்தை தரையில் உருளச் செய்கிறான்.
என்ன சுக்ரீவா இப்படிச் செய்துவிட்டாய் என்று ராமன் அவனை கோபிக்கும்போது, ''சுவாமி தங்களது ராணி சீதையை தூக்கிச் சென்றவனைப் பார்த்தவுடன் நான் எப்படி சும்மா இருக்க முடியும்? என்ன மரியாதை காட்ட முடியும்? என்கிறான்.
சுக்ரீவனை கும்பகர்ணன் யுத்தகளத்தில் பிடித்து லங்கை மாநகருக்குள் கொண்டு செல்ல முயலும்போது சுக்ரீவன் அவன் மூக்கை கடித்து, காதை கிழித்து, நகங்களால் அவன் முகமெல்லாம் கீறி, அவன் பிடியிலிருந்து தப்புகிறான். கும்பன் , விருபாக்ஷன், மஹோதரன் ஆகியோர் கொல்லப்பட்டதில் சுக்ரீவன் பங்கு பெரியது.
சுக்ரீவன் கொடியவன் இல்லை. வானர வீரர்கள் ஒரு மாத காலத்தில் சீதை இருக்கும் இடம் கண்டுபிடிக்க தவறினால் மரண தண்டனை என்று அறிவித்தவன் அவர்கள் திரும்பி வந்து அவனது மது வனத்தை அழித்த போது எந்த தண்டனையும் தரவில்லை. அவர்கள் தந்த மகிழ்ச்சி செய்திக்கு பரிசு என்று விட்டுவிடுகிறான்.
வாலி மாயாவி எனும் ராக்ஷஸனை தொடர்ந்து ஒரு குகைக்குள் சென்று சண்டையிடுகிறான். வெகுநாள் வாலி குகைக்கு வெளியே வராதததால் வெளியே வழிந்த ரத்தம் வாலி யுடையது என்று சுக்ரீவன் தப்புக் கணக்கு போட்டு குகையின் வாசலை பாறையால் மூடியது தவறான செயல். அதே நேரம் வாலி இறந்து அவன் ரத்தம் தான் வெளியே வழிந்தது என்று முடிவு கட்டி கிஷ்கிந்தாவுக்கு அரசனானது அவசரமான செயல். வாலி மகன் அங்கதன் அனுமனிடம் இதைச் சொல்லி இருக்கிறான்.
விபீஷணனை ஒரு துரோகி என்ற முறையில் வடக்கே சித்திரிக்கப்பட்டு இருக்கிறது. ராமனின் குணங்களை அறிந்து நல்ல பண்புகளை பற்றி தெரிந்து தான் விபீஷணன் அவனோடு சேர விரும்பினான். ராவணனின் தீய குணங்கள், செயல்கள் பற்றி எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியும், அறிவுறுத்தியும் ராவணன் செவி மடுக்கவில்லை என்பதால் அவன் ராமனிடம் சரண் அடைந்தவன். ராவணனின் வம்சத்தில் எவரும் மிஞ்சவில்லை, லங்கைக்கு நீதிமானாக ஒரு நல்ல அரசன் தேவையாக இருந்த நேரத்தில் விபீஷணன் ராவணனின் ஒரே வாரிசாக லங்கைக்கு அரசனாக முடி சூட்டப்பட்டான். அதில் சுயநலம் இல்லை.
சாஸ்திரிகள் பிரசங்கம் தொடரும்
No comments:
Post a Comment