பேசும் தெய்வம் -- நங்கநல்லூர் J .K SIVAN --
மாயமான தலைவலி
யாருக்காவது ''நான் எப்படியாவது மஹா பெரியவாளை தரிசனம் பண்ணவேண்டும் '' என்ற உண்மையான மனப்பூர்வமான எண்ணம் இருந்தால் அது எப்படியோ நிறைவேறிவிடும். அநேக பக்தர்கள் இதை கற்பூரம் ஏற்றி அடித்து சத்யம் செய்வார்கள்.
சுந்தர்ராஜன் என்ற ஒரு பெரியவா பக்தருக்கு டில்லியில் பெரிய அரசாங்க உத்யோகம். 1969-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது பெரியவாளை எப்படியாவது ஒரு முறை தரிசிக்க வேண்டுமென்று மனதில் தவிப்பு. 1969 ஜனவரி 24- முதல் தினமும் இரவில் தாங்க முடியாத தலைவலி. சுமார் 10 மணி முதல் 11 மணி வரை தினமும் இரவில் இப்படி வலி வந்து சுந்தர்ராஜன் தவிப்பார். மூளையில் புற்றுநோய் மாதிரி ஏதாவது இருக்குமோ என்ற பயம் வலுத்தது. ஆபிசுக்கு ஒரு மாசம் லீவ் போட்டு விட்டு
டில்லியிலிருந்து ஐதராபாத்துக்கு பிப்ரவரி 15-ஆம் தேதி வந்தார்..விஜயவாடாவிலிருந்து இருபது கி.மீ.தூரத்தில் இருந்த தெலாபொரலு என்ற கிராமத்தில் மஹா பெரியவா அப்போது வாசம் செய்த இடத்துக்கு மாலை வந்து சேர்ந்தார். சுமார் நாலு மணிக்கு மஹா பெரியவா விஸ்ராந்தி யாக படுத்துக் கொண்டிருந்த போது சுந்தரராஜன் மஹா பெரியவா முன்பாக நமஸ்கரித்து விட்டு நின்றார்.
'உனக்கு பிரஹசரணம்னா என்னன்னு தெரியுமா?'
சுந்தர்ராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் திடீரென்று பெரியவா இப்படி கேட்கிறார். அவர் வடமாள் பிரிவு. ஆனால் அவர் மனைவி பிரஹ சரணம் பிரிவைச் சேர்ந்தவள். ஒருவேளை அதைச் சுட்டிக்காட்டுகிறாரோ? எப்படி பெரியவாளுக்கு நம்முடைய சொந்த விஷயம் தெரியும்?'
'பிராமணர்களில் அது ஒரு பிரிவு என்று தெரியும் பெரியவா''
'நீ எதுக்கு வந்தே?''
''எனக்கு ஒருமாசமா விடாமல் தினமும் பொறுக்க முடியாத தலைவலி பெரியவா. ஆபிஸுக்கு லீவ் போட்டுட்டு வந்தேன். உங்களை தரிசனம் பண்ணனும்னு ரொம்பநாளா ஆர்வம். உங்கள் கிருபையால் என் தலைவலி தீர அனுக்ரஹம் பண்ணணும்'
''உனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியுமோ?''''
'இல்லை பெரியவா கத்துக்காம போய்ட்டேன்''
'பரவாயில்லே. இன்னிலேருந்து நீ தினமும் நாராயணீயத்திலே ஒரு தசகம் படிச்சுண்டு வா'''
பெரியவா ஆசிர்வாதத்தோடு சுந்தரராஜன் உத்தரவு வாங்கிக்கொண்டு வெளியே வந்து தன்னுடைய காரில் ஏறும்போது யாரோ ஒரு பெண்மணி ஓடிவந்தாள்.
'பெரியவா என்னை உங்க காரிலே விஜயவாடா வரை போகச் சொன்னார்' என்று அந்த பெண் மணி சொன்னாள் . ஆஹா அப்படியே என்று அவளை ஏற்றிக்கொண்டு சுந்தரராஜன் காரில் புறப்பட்டார்.
விஜயவாடா வந்ததும் அந்தப் பெண்மணியை அவள் வீட்டில் இறக்கி விட்டார்.
''நீங்க உள்ளே வந்து இன்று இரவு எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தான் போகவேண்டும் 'என்றாள் அந்த அம்மாள்.சாப்பிட உட்கார்ந்தால் இன்னும் நேரமாகிவிடும். இரவு சீக்கிரம் ஹைதராபாத் போகவேண்டும். பத்து மணி ஆகிவிட்டால் பாழாய்ப்போன தலைவலி வந்து விடுமே...
'ரொம்ப நேரமாகாது. சீக்கிரமே நீங்க சாப்பிட்டு விட்டுப் போகலாம்' என்று அந்த அம்மாள் அக்ரஹாரத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொ ருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு பலகாரமாக வாங்கிவந்து சுவையாகப் பரிமாறினாள்.
பதினைந்து நிமிடத்தில் சாப்பிட்டு இவர் புறப்பட்டு ஹைதராபாத் சென்ற போது இரவு 10 மணி. ஆனால் ஆச்சர்யமாக வழக்கமாக வரும் தலைவலியைக் காணோம்.
ஆஹா மஹா பெரியவா எனும் மகா வைத்ய நாதனைத் தரிசனம் செய்ததிலேயே இவ்வளவு பலனா!!
அதிசயமாக அதற்கப்புறம் ஒருநாள் கூட இரவு 10 மணிக்கு வழக்கமாக வரும் தலைவலி, தலை யைக் காட்டவில்லை. மஹா பெரியவா உத்தர வின் படி சுந்தரராஜன் அந்த வருஷம் மார்ச் மாதம் 7ஆம் தேதி ஸ்ரீகுருவாயூரப்பன் சன்னதியில் நாராயணியம் பாராயணத்தை ஆரம்பித்தார். நூறு நாட்கள் பாராயணம் செய்வதற்குள் இவரால் நாலு கல்யாணங்கள் மங்களகரமாக நிச்சயித்து நடத்தப்பட்டது.
சுந்தர்ராஜனுக்கு டில்லி யில் பெரிய அரசாங்க உத்யோகம். எமெர்ஜென்சி காலம். ஒரு முக்கி யமான கேள்விக்கு பார்லிமெண்டில் மந்திரி பதிலளிக்க சரியான பதிலை எழுதும் பொறுப்பு அவருக்கு வந்துவிட்டது. அதை எழுதி நிதி அமைச்சக செயலாளரிடம் இவர் சமர்ப்பிக்க, அந்த செகரட்ரி அறையில் அதைப் பற்றி விவாதிக்க இவரை அழைத்தார்.ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான செக்ரட்ரி அந்த பதிலில் சில மாற்றங் களைச் செய்தாக வேண்டுமென வலியுறுத் தினார். கீழ் அதிகாரியான சுந்தரராஜன் அந்த மாற்றங்களில் தனக்கு ஒப்புதல் இல்லை, மாற்றக்கூடாதென்றும் தன் கருத்தைக் கூறினார்.
''இல்லை நீங்கள் இதை மாற்றி எழுதவேண்டும்'' என்கிறார் உயர் அதிகாரி.
'மன்னிக்க வேண்டும், அப்படி பதிலை மாற்றி அமைப்பது உண்மையை மறைப்பதாக ஆகும். அப்படியே மாற்றினால் அதற்கு முழுப் பொறுப் பையும் நீங்கள்தான் ஏற்க வேண்டும்' என்று மிக அழுத்தமாக சுந்தரராஜன் கூறினார்.
உயர் அதிகாரிக்கு கோபம். தனது கீழ் வேலை செய்யும் ஒருவன் உத்தரவை மீறுவதா? உடனே டெலிபோன் பண்ணி ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னரை டில்லிக்கு அடுத்த விமானத்தில் வரவழைத்தார். சூழ்நிலை மிகவும் பாதகமாக இருந்தது.
'சரி. சுந்தரராஜன் நீங்க போகலாம்... ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னர் நாளைக்கு இது சம்பந்த மான ரெகார்டுகளுடன் வரச் சொல்லியிருக்கேன். நீங்க எழுதி வெச்சுருக்கிற இந்த பதிலுக்கும் அவர் கொண்டு வரப்போற விபரங்களுக்கும் தாரு மாறா ஏதாவது இருந்தால் உங்க மீது உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்'.
இப்படி மிரட்டலும், பயமுறுத்தலுமாக அதிகாரி இவரை அறையிலிருந்து போகச் சொன்ன போது இவருக்குப் பயத்தில் வியர்த்துக் கொட்டியது. தன்மேல் கோபத்தில் எப்படியாவது நடவடிக் கை எடுக்கத் தீர்மானித்து விட்டார் என்று தோன்றியது.
தான் எழுதி வைத்த பதில் நேர்மையாகவும், சத்தியமாகவும் இருந்தாலும் அதிகாரி தன் கோபத் தைக் காட்ட எந்த வகையிலும் முயற்சிக் கலாமென்பதும் இவருக்கு அச்சத்தை ஏற்படுத்தி யது. அன்றிரவு கவலையும், நடுக்கமும், தூக்க மின்றி மஹா பெரியவாளை மனதில் வேண்டிக் கொண்டார்.
அதிகாலையில் ஓர் அதிசயம்.
டில்லியில் இர்வின் ரோடில் 'கணேஷ் மந்திர்' என்று ஒரு பிள்ளையார் கோவில். அதன் அர்ச்சகர் இவர் வீட்டுக் கதவைத் தட்ட இவர் திறந்தார். அந்த அர்ச்சகர் கையில் பிரசாதம்.
''சுந்தரராஜன் ஸார் நீங்கள் தானே. நான் மஹா பெரியவாளை தரிசனம் செய்யப் போயிருந் தேன். அவா இந்தப் பிரசாதத்தை உங்க கிட்டே இன்னிக்கு விடியற்காலையிலேயே கட்டாயம் சேர்த்துடனும்னு கொடுத்து அனுப்பினா' நேத்திக்கு ராத்திரியே டில்லி வந்துட்டேன்''. என்றார்!
பகவானே, பேசும் தெய்வமே, என்ன கருணை உனக்கு இந்த அநாதை பக்தன் மேல். நேற்று ராத்திரியெல்லாம் நரக வேதனைப் பட்டு உங்களை வேண்டியது எப்படி உங்களுக்கு தெரிந்தது. பக்தன் வேதனை பகவானே உங்களுக்கு எப்படியோ தெரிந்து விடுகிறதே. என் மேல் மஹா பெரியவா நீங்க எவ்வளவு கருணை வைத்து ''பயப்படாதே இந்தா என் பிரசாதம் என்று அனுப்பியிருக்கிறீர்கள்.''
கண்ணீர் மல்க அர்ச்சகர் கொடுத்த பிரசாதங் களை சுந்தரராஜன் பெற்றுக் கொண்டார். இனி எது வரினும் கவலை இல்லை என்ற தெம்பு வந்துவிட்டது. அன்று மதியம் பதினொரு மணி யளவில் ஆபிசில் நிலைமை தலைகீழானது.
அப்போது நடந்த அதிகாரிகளின் கூட்டத்தில், அந்த ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னர் சுந்தர்ராஜன் எழுதியிருந்த பதில் முற்றிலும் பொருத்தமான தென்றும் அவை யாவும் சரியான தகவலை உடையதென்றும் அதில் சிறிதும் மாற்றம் செய்யக் கூடாதென் றும் மீட்டிங்கில் கூறி விட்டார். கூடியிருந்த மற்ற மூத்த அதிகாரிகளும் இதையே வழி மொழிந்தனர். சுந்தர் ராஜனின் உயர் அதிகாரி நிதி அமைச்சரக செக்ரட்ரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
தர்மசங்கடமான நிலையில் சுந்தர்ராஜனிடம் நேற்று கடுமையாக தான் நடந்து கொண்டதற்கு வருந்துவதாகவும், அதற்கு பிராயச்சித்தமாக தன் அறையிலேயே இவரையும் மதிய உணவு அருந்துமாறு கேட்டுக் கொண்டு அழைத்தார்.
ஒரு அரசாங்கத் துறையில் இப்படி ஒரு கீழ் அதிகாரியை மேல் அதிகாரி உபசரித்து கூப்பிடுவது எப்போதும் நடப்பதல்ல
இன்னொரு சம்பவம் இதே சுந்தரராஜன் சம்பந்தமாக சொல்கிறேன்
. மஹா பெரியவா அதிசயத்துக்கு முடிவே இல்லை.
No comments:
Post a Comment