Wednesday, April 7, 2021

MIRACLES.

 

ஆச்சரியம் மட்டும் இல்லை  அதிசயம்... நங்கநல்லூர்  J K  SIVAN 


சிவன் ஸார், அதிசயம்  என்றால் என்ன? 
நீங்கள் கேட்கிறீர்களே அது தான்.   
அதிசயம் என்றால் எல்லோரும் ஏதோ ஒன்று நடக்ககூடாதது, நடக்கமுடியாதது,  நினைத்துப் பார்க்காதது   நிகழ்ந்ததாக நினைகிறார்களே  அது.  இதைத்தவிர மற்றொரு பரிணாமமும் இருக்கிறது.  ஏற்கனவே  நடந்த விஷயங்கள்.  ஆஹா  எவ்வளவு அற்புதமாக இது நடந்தது. இது எப்படி நடந்தது, எப்படி முடிந்தது என்று வியக்க வைப்பது.  

 கல்லே இல்லாத  தஞ்சாவூரில் எப்படி அவ்வளவு பெரிய  கல் கோபுரம் ராஜராஜன் கட்டி அது இன்றும் ஆயிரம் வருஷங்களாகியும் ஆடாமல் அசையாமல் அழகாக நிற்கிறது. 

பல்லவர்களால் எப்படி ஒரே கல்லில் இவ்வளவு தேர்கள் அமைக்க முடிந்தது.  

கரிகாலன் எப்படி  வேண்டப்பட்ட  எந்த கன்டராக்டரிடமும் கொடுக்காமல்,  கமிஷன் கையூட்டு பெறாமல்  அடாஸ்  பேர்வழிகளிடம் வேலையை ஒப்படைக்காமல் காவிரி நதியின் நீர்  கடலில் வீழ்ந்து வீணாகாமல்  கல்லணை கட்டி  அது   ஆயிரக்கணக்கான வருஷம் ஆகியும்  இன்றும் அப்படியே  எல்லோராலும்  மூக்கின் மேல் விரல் வைத்து  கண்விரிந்து ஆனந்தப்பட வைக்கிறது.  மூன்று வருஷத்தில் நம் காலத்து  பிரிட்ஜ்கள் வீரல் , கீறல் விட்டு  உடைந்து விழுகிறதே . 

இது போல் சில அதிசயங்களை மட்டும் சொல்கிறேன். எத்தனை யோ  இருக்கிறது. சொல்வதை ரொம்ப பழைய  விஷயங்களாக சொன்னால் தான் இன்னும்  மவுசு அதிகம்.  அதிசயிக்க வைக்கும்.

நமது சரித்ரங்களில்  இதிகாசங்களில் இருந்தே சில விஷயங்களை நினைவு கூர்வோம்.  ஒவ்வொரு நாட்டின் கலைச்  செல்வமும்  அதன் சரித்திரமும் புராணமும் தான். இயற்கையாகவே சில நிகழ்ந்தது இன்னும் அதற்கு அழகையும்  ஆச்சர்ய மெருகையும்  ஊட்டுகிறது.  

ராமாயண மஹாபாரத  பாகவத புராணங்களில் நாம் காண்பது.  ஆகாய ஊர்திகள்  புஷ்பக விமானங்கள்.  ராவணனிடம் இருந்தது.  மஹா பரதத்திலோ  ஸால்வனிடம்  இருந்தது.  பறக்கும்  பெரிய ரதங்கள்  கடவுள்களிடம் தான்  அதிகமாக காணப்பட்டது.  நமது  நன்கு படித்த  அனுபவம்  வாய்ந்த புதைபொருள்  தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள்  என்ன சொல்கிறார்கள்?.  இப்படி பறக்கும்  விமானங்கள் இருந்தது வாஸ்தவம் என்று தெரிகிறது என்கிறார்கள். ராமாயணத்தில்  ராமன் புஷ்பக விமானத்தில்  இலங்கையில்  ராவணனை அழித்துவிட்டு
 விபீஷணனோடு அயோத்தி  திரும்புகிறான்.  ராவணன் புஷ்பக விமானத்தில் வந்து தான்  சீதையை கடத்தி  பஞ்சவடியிலிருந்து  இலங்கைக்கு  கடல்மேல்  பறந்தான்.  இது நடந்தது  ராமர் கால  த்ரேதா யுகத்தில்   7000 வருஷங்களுக்கு முன்பு.

உலகின் மிக புராதன ஏழு  நகரங்களில் ஒன்று துவாரகை.   கண்ணன் வாழ்ந்த  அவனது  தலைநகரம்.  இன்றும் குஜராத்தில் இருக்கிறது.  அவன் வாழ்ந்த காலத்திலேயே  அவன் அரண்மனை பிரதேசம் [ப்ரபாஸ நகரம்) கடலில் மூழ்கிவிட்டது.  கிருஷ்ணன் தனது மறைவுக்கு முன்பு  உத்தவனிடம்  எல்லோரையும் அங்கி ருந்து  வெளியேறச் சொல்லு. இன்னும்  ஏழு நாளில்  இந்த பிரதேசமே கடலில் மூழ்கும் என்று சொல்லியது அதிசயம். இன்றும் கடலடியில்  கண்ணன் அரண்மனை இருக்கிறது.  அங்குள்ள  மண்டபங்கள், சிலைகள் விக்ரஹங்கள் எல்லாம் அற்புதமாக இருப்பது ஒரு இணையற்ற அதிசயம். 

இதிகாசங்கள், புராணங்கள் பொய்யல்ல. சற்று மிகைப் படுத்தி சொல்லியிருக்கலாம்..  கண்ணன் வாழ்ந்த  துவாரகை துவாபர யுகத்தில் மூழ்கியது  5000 வருஷங்களுக்குப் பின்  இன்றும்   தெரிகிறது.  இருக்கிறது. 

இன்னொரு  த்ரேதாயுக அதிசயம் தான்  ராம சேது. கிஷ்கிந்தா வீரர்கள்  ஹனுமான், சுக்ரீவன், ஜாம்பவான் தலைமையில் நளன் , நீலன் ஆகியோர் பொறுப்பில்  தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு  நீரில் மிதக்கும்  கற்களால் பாலம் அமைத்த அதிசயம். இன்றும் அது இருக்கிறது.  ராம சேது பாலம் உலக அதிசயம் என்று சொன்னால் மிகையாகாது. இதுவும்  த்ரேதா யுக  7000 வருஷ சமாச்சாரம்.


வடக்கே, ஹிமாச்சல பிரதேசத்தில் கங்க்ரா எனும் ஸ்தலத்தில்  ஒரு அம்பாள் கோவில். சக்தி பீடம் இருக்கிறது.  ஜ்வாலா தேவி ஆலயம் என்று பெயர். இன்னும் அங்கே  தீ  ஜ்வாலை  எரிந்துகொண்டே  இருக்கிறது.  பார்வதி தேவி  தாக்ஷயணியாக  தக்ஷன் யாகத்தில்  தீயில்  இறங்கி மறைந்த போது  அவள் உடலை எடுத்துக்கொண்டு சிவன்  கோபமாக  ருத்ர தாண்டவமாடுகிறார். அவள் உடல் 51  துண்டுகளாக பூமியில் விழுந்த இடங்கள் தான் 51 சக்தி பீடங்கள்.  கங்க்ராவில்  தாக்ஷாயினியின் நாக்கு விழுந்து   ஜ்வாலையாக எரிகிறது.  

ஹனுமான் கர்ஹி  என்று வருடம். அயோத்யாவில் இருக்கிறது.  ஆஞ்சநேயர் கோவில்.ராமருக்காக  ஹனுமான் காத்துக்கொண்டிருக்கும் இடம்  என்கிறார்கள்.   அங்குள்ள சக்தி அதீதமாக இருக்கிறதாம்.  நம்பினவருக்கு தான் இதெல்லாம்  ஆச்சர்யமும் அதிசயமுமாக  இருக்கும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.






பிருந்தாவனத்தில்  நிதிவனம் என்று ஒரு இடம். அங்கே  ஒவ்வொரு இரவும் கிருஷ்ணன் இன்றும்  கோபியருடன் ராஸலீலை விளையாடுகிறார் என்று நிறைய ஆச்சர்யமான விஷயங்களை சொல்கிறார்கள். அங்கு  இன்றும் ஒரு பயம் கலந்த நம்பிக்கை என்ன தெரியுமா?  யாராவது  இருட்டியபிறகு  அந்த பகுதிக்கு  அஸ்தமனத் துக்கு பிறகு சென்று  எதையாவது  பார்க்க  முயன்றால் கண் உடனே குருடாகிவிடுகிறதாம்.  செவி  டமாரமாகி  ஒன்றுமே கேட்காமல் போய்விடுமாம். வாய்  பேசமுடியாமல் ஊமையாகுமாம்.  சிலர் மரணம் அடையவும் சாத்தியமாம்.

நேபாளத்தில்    ஜானகி ஆலயம் இருக்கிறது.  இந்த பகுதி ஜனக மஹாராஜா ஆளுமையில் இருந்தது.  இந்த ஆலயத்தில் தான்  ஸ்வயம்வரத்திற்கு பிறகு ராமனை  சீதை மணந்தாள் . ராமனும் சீதையும் கணவன் மனைவியாக வாழ்ந்த இடம் இப்போது ஜானகி கோவில். இந்த கோவிலில் சீதையின் தங்க விக்ரஹங்கள் கிடைத்தது என்கிறார்கள்.  இன்னும் தரிசனம் செய்யப்படுவது  தான்  அதிசயம். நமது ஊராக இருந்தால் சிலை காணாமல்  போய்விடுவது அதிசயம் இல்லை. 

ஜம்மு காஷ்மீர் பகுதியில்   பனி மலையில் ஒரு குகை.  அங்கு தான் சிவபெருமான்  பார்வதிக்கு  வாழ்க்கை ரஹஸ்யம், சாஸ்வதம், அம்ருத்வம்  இறவாமை   பற்றி உபதேசம் செய்த இடம்.  அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பது அதிசயமி ல்லை. ஆனால்  யாரும்  செதுக்காமலேயே வருஷாவருஷம் பிரம்மாண்டமான  பனி லிங்கம் தானே  தோன்றி  அமர்நாத்தில்  நம்மை மகிழ்விப்பது தான் அதிசயம்.

இன்னும் சொல்லாமல் விட்ட  அதிசயங்கள் எத்தனையோ இருக்கிறது.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...