கவனிக்காமல் விட்ட சில நல்ல விஷயங்கள் - நங்கநல்லூர் J K SIVAN --
மனிதர்களாகிய நாம் மிகவும் பெருமைப்பட வேண்டியவர்கள். இந்த பிறவி மிக மிகச் சீர்நத பரிசு. நாம் கேட்காமலேயே நமக்கு கிடைத்த போனஸ். பகவானே உனக்கு எப்படி நன்றி சொல்வேன் என்று நன்றிக் கண்ணீர் உகுக்க வேண்டிய விஷயம். ஆனால் நாம் அதன் அருமை பெருமை தெரியாதவர்களாக நமக்கு கிடைத்த நல்லதோர் வீணையை நலம் கெட புழுதியில் எறிபவர்களாக இருக்கிறோம். ஒரு சிலர் விஷயம் அறிந்தவர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நமது ஜீவனுக்கு சக்தி ஆத்மாவிடமிருந்து தான் கிடைக்கிறது. இதை பலமுறை சொல்லி இருக்கிறேன்.
அடிக்கடி மயக்கம் அடைகிறோமே அது என்ன? டாக்டர் பணம் வாங்கிக்கொண்டு என்ன காரணம் சொன்னாலும் ஏற்கிறோம். ஆனால் அது நமது இந்த தேகத்திற்கு உள்ளே உள்ள சூக்ஷ்ம சரீரத்துக்கு உள்ள தொடர்பு பாதிக்கப் படும்போது உண்டாகிறது. பவர் POWER CUT ஆனால் மின் விசிறி, லைட் எரியாமல் அணைந்து போவது போல.
வயதான முதியோர் ஏன் குழந்தைகளிடம் அதிகம் அன்பும் பாசமும் வைத்திருக்கிறார்கள்? குழந்தைகளின் உடலில் உள்ள இளமை சக்தி ஓட்டம் பெரியவர்களுக்கும் கிடைக்கிறது. புத்துணர்ச்சி பெறுகிறார்கள். சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கிறது. நான் என் ரெண்டு வயது பேத்தியுடன் தாவி தாவி 82ல் குதிக்கி றேனே.
நோயாளிகளிடம், படுக்கையில் படுத்திருக்கும் வியாதியஸ்தர்களிடமும் ஏன் நாம் அதிகம் பேசுவதில்லை. சைகையில் சுருக்கமாக விசாரிக் கிறோம். அங்கே அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
மனிதன் ஒரு வினோத மரம். தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் தலையில் தான் உள்ளது. மற்ற தாவரங்களுக்கு கீழே வேரிலி ருந்து அனைத்து சக்தியும் மேலே செல்கிறது.
நாம் மட்டுமா பேசுபவர்கள். நமது தேகம் ரொம்ப நன்றாக பேசுகிறதே. இதயம், வயிறு, எலும்புகள், கண், காது, மூக்கு, கால் கைகள் முதுகு எல்லாமே தனக்கு என்ன வேண்டும், எது வேண்டாம், என்று அழகாக தெரிவிக்கிறதே. எங்கேனும் பிசகு இருந்தால் வலிக்கிறதா, போதுமென்றால் ஏப்பம் விடுகிறதே. கை போதும் வேண்டாம் என மறுக்கிறதே . வேண்டும் என்றால் நீள்கிறதே. தா என்கிறதே. மார்பு படபடவென்று துடித்து ஒய்வு தேடுகிறதே. கால் வலித்து ஒய்வு வேண்டும் என்கிறதே. கண் சுற்றி கொட்டாவி விடாமல் வந்து எனக்கு தூக்கம் தா. என்கிறது. முதுகு நிறைய வேலை செய்து விட்டேன். சாய்ந்து கொள்ள வேண்டும் என்கிறது. வயிறு எங்கேடா ஆகாரம் என்று பசியைக் கிளப்புகிறது. எதை சாப்பிடலாம் என்று கண் தேடுகிறது. உடல் களைப்பு தண்ணீர் கொண்டுவா முகம் கழுவி குடிக்கவேண்டும் என்று கேட்கிறது. இயற்கை பேசாமல் உணர்த்துவதை நான் அறிவிலிகளாக புறக்கணிக்கிறோம். அவஸ்தைப் படுகிறோம். வலி என்பது உடலின் மொழி. மாத்திரையால் அதை அமுக்கி மேலும் துன்பத்தில் மாட்டிக் கொள்ளவேண்டாம்.
எவனையும் கத்தி,துப்பாக்கி, வாள் கொண்டு கொல்ல வேண்டாம் . ஒரு மனிதனினை புண்பட, துடிக்கச் செய்வது சுடும் கடுமையான வார்த்தை கள் தான். இது நூதனமான கொலை. அரசிய லில் இதை ஆயுதமாக கொண்டு எல்லோரும் தாக்குவதால் அதன் வீரியம் காணாமல் போகிறது. எதிர்ப்பு தடுப்பு சக்தி கூடிவிடுகிறது!!
மனிதனைத் தவிர மற்ற இனங்கள் சூக்ஷ்ம உணர்வு instinct மூலமே எதையும் அணுகுகிறது. ஆபத்தை உணர்ந்து தப்பிக்கிறது.
நமது துன்பம் துயரம் ஏமாற்றம், நிம்மதியின்மை எல்லாவற்றுக்கும் காரணம் நாம் விஞ்ஞான அறிவை யே பயன்படுத்தி மெய்ஞான அறிவை கோட்டை விட்டுவிட்டதால் தான்.
நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக் கொண்டிருக்கவேண்டும். ஓம் சப்தம் எங்கும் ஒலிக்க வேண்டும்.
பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பதால் பசி தீராது. எங்கே உணவை அடைய முடியும் என்ற நிகழ் கால உணர்வுடன் இருக்க வேண்டும்.
ஒரு ரகசியம் சொல்கிறேன். நமது உடல் உறுப்புகள் நமது மனத்துடன் ஒன்றி, ஒற்றுமையாக இருக்க பழகினால் அதுவே ஆரோக்யம்.
விவசாய நிலத்தில், தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது. அன்னபூரணி, அன்னலட்சுமி வாசம் செய்யும் இடம் விளைநிலம்.
நாம் ஏன் ஓடும் புனித நதி, அருவிகளைத் தேடி அலைகிறோம்?. தேங்கி நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும் அசையும் தண் ணீரில் அதிகமாகவும் உள்ளது. தலை முங்கி, முழுக்கு போடுவதன் காரணம் உடல் முழுதும் புத்துணர்ச்சி தரும் சலசலவென்று ஓடும் புதிய தண்ணீர் படுவதால் அங்கெல்லாம் பிராண சக்தி உடலில் இறங்குகிறது. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது. விடிகாலை, மாலை வேளைகளில் வெளியே காற்றாட நடக்க வேண்டும்.
சமுத்திர ஸ்னானம் , கடல்நீரில் குளிக்கும்போது நம்முடைய பாவ தீய கர்ம வினைகள் நீங்கி விடுகிறது. அவற்றை உள்வாங்க கூடிய ஆற்றல் கடல் நீருக்கு உள்ளது.
உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும். கடல் நீரில் அமாவாசை, மற்றும் கிரஹண, புண்ய காலங்களில் ப்ரோக் ஷணம் செய்து கொள்வது அதனால் தான்.
மலர்ந்த முகத்துடன் எப்போதும் மற்றவர்களை அணுகும் போது பேசும் போது நமது ஸூக்ஷ்ம சரீரத்தின் கவசம் நமக்கு அதிக மாகிறது. அன்பும் நட்பும் தான் அதன் அடையாளம்.
ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடந்தால் உடல் உள்ளம் ரெண்டுமே ஆரோக்கியம் பெறும். .
இன்னும் சில நல்ல விஷயங்களை தேடி கவனிப்போமா?
No comments:
Post a Comment