வாழ்க்கை பயணம் -- நங்கநல்லூர் J K SIVAN
ஆன்மிகம் என்றால் ஏதோ பழுத்த கிழம் சம்பந்தப் பட்டது என்ற எண்ணம் வேண்டாம். ஏழு வயதில் கூட ஆன்மீகம் வரவேற்கத் தக்கது. கடவுள் என்று ஒருவர் நமக்கு மேலே, நம்முள்ளே இருக்கிறார். அவரைப் போற்றி பணிவது நமது கடமை.. நன்றியறிவித்தல். அவர் இரவு பகல் சதா நமது நன்மைக்கே எந்த பிரதிபலனும் எதிர்பாரா மல் ஈடுபடுகிறார். அவரை நினைக்க வாவது செய்வோமே என்ற எண்ணம் தான் ஆன்மிகம். அவரை நாம் பார்க்க முடியவில்லை, அவர் பற்றி கேட்போம், படிப்போம், பேசுவோம், அவர் இருப்பதாக நம்பும் கோவிலுக்கு செல்வோம். அவரை ஏற்றி போற்றி ஈடுபடும் பஜனை, நாம சங்கீர்த்தனையில் பங்கு கொள்வோம், இல்லையேல் மற்றவர் பங்குகொள்வதையாவது ரசிப்போம்... இது தான் ஆன்மிகம். இப்படி வாழ்வது தான் ஆன்மீக வாழ்க்கை. பட்ட வர்த்தனமான வேஷமில்லாத வாழ்க்கை.
கடவுளோடு நெருங்கிய வாழ்க்கை தான் சுதந்திர வாழ்க்கை. எந்த நல்ல எண்ணமும், செயலும், வார்த்தையும் நன்மையைத் தான் பயக்கும். வாழ்வில் அமைதி இருந்தால், அது நம்மோடு மட்டுமின்றி சுற்றிலும் மற்றோருக்கும் பரவும். இது நான் அனுபவிக்கும் நிதர்சனமான உண்மை. உதாரணம் நமது ஸ்ரீ க்ரிஷ்ணார்ப் பணம் சேவா டிரஸ்ட் முகநூல் பக்கம், JKSIVAN முகநூல் பக்கம் அடேயப்பா ஆயிரக்கணக்கான அன்பர்கள் ஏன் இதை பார்க்கவேண்டும், படிக்கவேண்டும், மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும், என்னோடு தொடர்பு கொள்ள வேண்டும்??? எனக்காக அல்லவே அல்ல. இதில் காணப்படும் சத் விஷயம், ஆன்மீக விஷயங்கள், மஹான்களை பற்றி, ஆலயங்களை பற்றி, வேத, இதிகாச, புராண விஷயங்கள் நமது ஹிந்து பண்பாடு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கை எல்லாம் பற்றி அறிய. இதில் என்ன காசா பணமா செலவு செய்யவேண்டும்?
வீணாகும் நேரத்தை திருப்திகரமாக செலவழிக்கிறோம். நமக்கு ஒரு பொற்காலம் ஏற்படுத்திக் கொள்ள நாம் செய்யவேண்டியது ஒவ்வொருவரிடத்திலும் உள்ள நல்ல குணம், நல்ல செய்கை, நல்ல வார்த்தையை மட்டுமே மதிக்கவேண்டும். மற்றதை அறவே புறக்கணிக்க வேண்டும். இதால் எல்லோரிடமும் அன்பு வளரும். அன்பு நிறைந்த இடத்தில் அணு சக்தி அழிவு எதற்கு தேவை?. அதற்கென்ற அவசியம் காணாமல் போய்விடும். உன் உள்ளே உனக்காக என்றும் இருக்கும், இறைவன் மீது அன்பை செலுத்து. சக மனிதரை நேசி. ''அவன் குழந்தை மனசு கொண்டவனடா'' என்ற பேர் எடு. இது தான் அன்பு வழி.''
உடல் வளர்ச்சி போல் மன வளர்ச்சி, உள்ள வளர்ச்சியும் ரொம்ப அவசியம். ஒன்றாம் வகுப்பிலிருந்து நேரே அடுத்த ஜூன் மாதம் காலேஜ் போக முடியுமா?. அதே போல் உள்ள அமைதி கொஞ்சம் கொஞ்சமாக தான் விருத்தி அடையும். விடாது முயற்சி செய்ய வேண்டும். முக்யமாக பொறுமை வேண்டும். ஒரே நாள் ராத்திரியில் அடையும் சமாசாரம் அல்ல இது.
ஒரு மந்திரம் சொல்கிறேன். அது தக்க சமயத்தில் காக்கும். ''யாரையும் தூக்கி எறிந்து நிந்தித்து பேசவேண்டாம். அப்போது தான் நாம் நிந்திக்கப்பட மாட்டோம். ''
வாழ்க்கையில் '' அடிபடாததால் '' ( அனுபவ முதிர்ச்சி இல்லாததால்) கஷ்டங்களை அநேகர் எதிர் கொள்ள வேண்டி அமை கிறது. குழந்தைகள் எப்படி பெரியவர்கள் ஆகிறார்களோ அப்படித்தான் வாழ்வில் அனுபவம் (maturity ) ஏற்படும். நாம் நம்மை ஆள எவ்வளவு தலைவர்களை நம்பி பதவியில் அமர்த்து கிறோம் நாளை முடிவு தெரிந்து விடுமே. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன கதை தான். நமது செய்கையின் பலனை அப்பறம் தானே ''அனுபவித்து '' உணர்கிறோம். இதையே வாழ்க்கையில் ''பாடம் '' என்று கற்றுக் கொள்கிறோம்.
நம்மை விட ஏதோ ஒரு மேலான சக்தி நிச்சயம் உள்ளது. சந்தேகமே வேண்டாம். அது நம்முள் குடி கொண்டு நம்மை ஆட்டுவிக்கிறது மட்டும் அல்ல, எங்கும் எதிலும் பரவி அங்கிங்கெனா தபடி எங்கும் எதிலும் நிறைந்திருக் கிறது என்கிற எண்ணம் விடாமல் இருக்கவேண்டும். கடவுள் என்று அதை எந்த பிடித்த பெயராலும் அழைப்போம். அன்பை எல்லோரி டத்திலும் செலுத்தி முழுமையாக இதை உணரமுடியும். உள்ளத்தின் அமைதியில் அவனைக் காணலாம். ஒரு தனி ஆனந்தம் உள்ளே உருவாவதை அனுபவிக்க முடியும்.
நன்றியை எதிர்பாராமல் தன்னால் இயன்றதை, தன்னிடம் இருப்பதை கொடுப்பவன், அமோகமாக பிரதிபலன் பெறுவான். இதை நான் இரவு பகலாக தொடர்ந்து பல வருஷங்களாக செயது வருகிறேன். என்னால் முடிந்தது நான் கற்று அதை மற்றவர்களோடு பகிர்வது மட்டும் தான். 83ல் அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய இயலாது.
தனக்கு நல்லது என்று தெரிந்ததை, அறிந்ததை, செயல்படுத்தி மற்றோருக்கும் உதவுபவன் ச்ரேஷ்டன்.
பகவானே உன் செயல் என்று எதையும் தன்னாலியன்றவரை சிறப்பாக செய்பவன் நல்ல பலனையே பெறுவான். எல்லோரும் நல்லவரே, எல்லோரும் என்னவரே என்று எவன் அன்போடு பழகுகிறானோ அவன் பலமடங்கு அன்பை பெறுபவன்.
நமக்கு வரும் கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாமுமே நாம் நம்மை செலுத்தும் அந்த பரம சக்தி காட்டும் வழியை புறக்கணிப்பதால் தான்.
மனதில் எப்போது அமைதி தோன்றுகிறதோ, ஆன்மீக வளர்ச்சியில் நீ தொடர்கிறாய் என்று அறியலாம். காரணம் என்னவென்றால் நாம் நம்முள் நம்மை செலுத்தும் அந்த அதீத சக்தியை உணர ஆரம்பித்து விட்டதால் தான்.
பிறரிடம் மாற்றத்தை எதற்கு எதிர் பார்க்க வேண்டும்? முதலில் நாம் மாறினாலே அவர்களிடம் மாற்றம் தானாக தெரியும்.
கடவுள் மீது நம்பிக்கையும், பக்தியும் உள்ளவனுக்கு எதிலும் பயம் தோன்றாது. அவன் தான் எதையும் எவரையும் அன்பினால் சொந்தம் கொள்கிறானே. பயம் எங்கிருந்து வரும்?
நமக்கு கஷ்டங்களும் துன்பங்களும் வருவது கூட ஒரு விதத்தில் அந்த நேரங்களில் நம்மை அவனை நினைக்கச் செய்வதால் நன்மையே என்று கூட தோன்றுகிறது.
அடிக்கடி உடலில் தோன்றும் உபாதைகள் அடே மானிடா, உன் இந்த உடல் ஒருநாள் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் அழிந்து விடும் என்று நினைவூட்டவே. பழைய சட்டை யை தூக்கிப் போட நேரம் நெருங்கி வருகிறது. புதியது நமக்கு எங்கோ தயாராகி வருகிறது என்று உணர்த்தவே.
மற்றவரின் செய்கைகள் தவறு, சரி என்று சொல்ல நமக்கேது உரிமை?. அவர்கள் தாமாகவே தம்மை ஆராய்ந்து கொள்ள நீ உதவினால் இறைவன் உனக்கிட்ட பணியை கொஞ்சமாவது செய்து வருகிறாய் என்று அர்த்தம்.
ஒரு விஷயம் கவனப்படுத்துகிறேன். மனம் எப்போது இறைவனின் தொடர்பில் ஈடுபட்டு விட்டதோ, அந்தக் கணம் முதல் நீ தனியாக இல்லை. அவனது அழகிய ''நெட் வொர்க்'' திட்டங்கள், நேர்த்தியான செயல்கள் உனக்கு பலனளிக்கத் தொடங்கிவிட்டது என புரியும். எப்போது மனதில் அமைதி குடி புகுந்ததோ, அப்போது உனக்கு வெளியே இருந்து ஒரு புத்துணர்ச்சி வந்து சேரும். களைப்பு அலுப்பு என்பதே காணாமல் போகும். 20 மணி படித்து எழுதும் எனக்கு களைப்பு தோன்றவில்லை. திருப்தியாக இருக்கிறதே.
எப்போது நீ அவனை நினைக்க ஆரம்பித்து விட்டாயோ, நீ வெளிச்சம் தேடி வேறு விளக்கொளி நாட தேவையே இல்லை. நீ தான் சூரியனையே நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாயே, விளக்கொளி வெளிச்சம் அவசியமில்லை.
உண்ணும் உணவு உடலை நன்றாக செயல் பட தேவையானதாக மட்டும் இருக்கட்டுமே. அது தான் ஆரோக்கியம். வாழ்வதற்கு தான் உணவே தவிர உண்பது தான் வாழ்க்கை அல்ல. இன்னும் வேண்டும் என்ற எண்ணம் வரும் போது உண்பதை நிறுத்திக் கொள். அப்புறம் டாக்டர் வீடு அட்ரஸ் மறந்து, தெரியாமல் போகும். வாழ்க்கை இதால் முழுமை பெரும்.
நமது நல்ல எண்ணங்களும் நற்செய்கைகளும் தான் நமக்கு மட்டுமல்ல பிறர்க்கும் உதவுகிறது என்பதை விட உள்ளும் புறமும் தூய்மையடைய உதவுகிறது. இது இருந்தால் அவன் தானே நம்முள் வந்து அமர்வானே. குப்பையிலா ஒருவன் வசிப்பான்? ஒரு இனிய சங்கீதம் மனதை வருடவில்லையா?. அது போல் இதயம் இதால் குளிரும்.
உள்ளே நின்று ஒருவன் அக்கறையோடு வழி காட்டினால், தப்பான பாதையில் எப்படி போகமுடியும்?. கல் முள் எதுவும் இல்லாத சீரான பாதை அல்லவா அது.? பயணம் - ஒரு சுற்று பயணம் ஆகிறது - சுற்றி சுற்றி அவனை யே அல்லவா சேர்கிறோம்.
கடவுள் என்பவர் ஏதோ ரொம்ப படித்த, யாகம் செய்த, தானம் செய்த, தனவந்தனுக்கு, ஆயிரம் கோவில் குளங்கள் சென்றவனுக்கு மட்டும் சொந்தமானவர் என்பது ராங் நம்பர். கடவுள் எல்லோருக்கும் எப்போதும் எங்கும் கிடைப்பவர். ஒரே ஒரு கணம் மட்டுமே போதும். சுத்தமாக, கலப்படமில்லாத, மனத்தால் நினைத்தால் அவனை உணரமுடியும். அவனை அடைந்து விட்டோம் என்று எப்படி தெரியும்? அன்பு உன்னிடமிருந்து எதனிடமும் எவரிடமும் பெருகி விட்டதல்லவா? அதே அதே.
கடவுள் நமக்காக காத்திருக்கிறான். நாம் தான் எதிர் திசையில், வேறு பக்கம் நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். அவன் உள்ளே இருக்கும் போது, நம் இதயத்தை பூரணமாக ஆக்ரமித்த போது, ' நான், எனது '' எப்படி ஞாயமாகும் ? . வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு ''எனது என்று சொல்லலாமா, ''நான்'' அங்கு வசிக்க முடியுமா'' ?
ஒரு காற்றின் சுகத்தில், நீரின் தெளிவில், பூவின் மணத்தில், பறவையின் குரலில், நிலவின் ஒளியில், உலகத்தின் இயக்கத்தில், விடியல் அமைதியில், நிசப்தத்தில், எதில் வேணுமானா லும் அவனை உணர முடியுமே. கும்பலாக சப்தம் போட்டுக் கத்த வேண்டாம். ஸ்பெஷல் வரிசைக்கு டிக்கெட் தேவையில்லை. கண்ணை முடி உள்ளே நோக்கினால் ''நான் இங்கே தானேடா உனக்காக எப்போதும் இருக்கிறேன்'' என்று குரல் கொடுக்கிறானே. ஆரவாரத்தில் அமைதியை தேடலாமா? இது நான் புதிதாக கண்டுபிடித்து சொல்லவில்லை. காலம் காலமாக பல மஹான்கள், ரிஷிகள், முனிவர்கள், சிறந்த பக்தர்கள் அனுபவித்து சொன்ன உண்மை ஏட்டிலும் எழுத்திலும் பாட்டிலும் இருக்கிறது. யார் அதை லக்ஷியம் செய்கிறார்கள்? இருந்தா லும் நான் விடுவதில்லை. அதெல்லாம் பற்றி எழுதிக்கொண்டே தான் இருப்பேன்.
No comments:
Post a Comment