சில நல்ல அறிவுரைகள். நங்கநல்லூர் J K SIVAN ---
ஒண்ணா ரெண்டா, ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ விதமான மன அழுத்தங்கள். சிலர் தனக்குள் தானே அதை திரும்ப திரும்ப நினைத்து தனியாக அழுது புழுங்குகிறார்கள். சிலர் கத்துகிறார்கள், கையில் கிடைத்ததை விட்டு எறிகிறார்கள். கோபத்தை ஆத்திரத்தை ஒன்றுமறியாத சம்பந்தமே இல்லாத குழந்தைகள் மேல் காட்டுகிறார்கள். சிலர் ஆண்டவனிடம் கண்ணீர் விட்டு கதறுகிறார்கள். சிலர் தூக்கம் இழந்து, சரியாக உண்ணாமல் உள்ளத்தில் இருப்பதன் வெளிப்பாடாக உடலிலும் வியாதியை வரவழைத்துக் கொள்கிறார்கள். ஒரு சின்ன விஷயம் செய்து பார்ப்போம். மலைபோல் வந்ததெல்லாம் கூட பனி போல் நீங்கும் என்பார்களே.
தன்னம்பிக்கை அவசியம் வேண்டும். மனோதிடம், தைர்யம் அவசியம். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாட்டு மனதில் அடிக்கடி ஓடவேண்டும். எல்லாம் நல்லதுக்கே என்ற பாசிட்டிவ் குணம் வளரவேண்டும். தோல்வி மனப்பான்மை விலகவேண்டும். எங்கிருந்து ஆரம்பிக்கலாம்?
முதலில் நம்மை சுற்றி பார்ப்போம். சாத்தி இருக்கும் ஜன்னல்களை , திரைச்சீலைகளை திறப்போம். காற்றும் சூரிய வெளிச்சமும் உள்ளே புகட்டும். இது ரெண்டுமே நெகடிவ் மனப்பான்மைக்கு எதிரி.
சுற்றியுள்ள வேண்டாத குப்பைகளை அகற்று. வீட்டைபெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்வோம். குப்பையும் கூளமும் , அழுக்கும் நெகடிவ் சக்திகள். தீபாவளி பொங்கல் போகி யின் போது நமது முன்னோர்கள் அதனால் தான் பழையன கழிதலுக்கு முக்யத்துவம் கொடுத்தார்கள். வருஷம் ஒருநாள் போகி சொக்கப்பனைக்கு நாம் காத்திருக்க வேண்டாம். வாரத்திற்கொருமுறை க்ளீன் செயது அப்புறப்படுத்துவோம்.
வீட்டிற்குள் செருப்பு போட்டு நடக்கும் பழக்கம் நமக்கு வேண்டாம். தரை உள்ளங் காலில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தரை நெகடிவ் சக்தியை தின்றுவிடும். வீட்டைச் சுற்றி புல் தரை இருந்தால் பிரம்மானந்தம். பக்கத்தில் பார்க் இருந்தால் கூட பொடிநடையாக சென்று வெறுங்காலோடு நடக்கலாம்.
செருப்பு காலணி , வீட்டுக்கு வெளியே ஒரு ஓரமாக இருக்கவேண்டும். வெளியே சென்றால் காலைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் வரலாம். அடிக்கடி கைகள், முகத்தை கழுவிக்கொள்வது இன்னும் விசேஷம். வீட்டு வாசலில் ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் வைப்போமே.
வெட்ட வெளியில் விடிகாலை, மாலை நேரங்களில் கொஞ்சம் வாக்கிங் போவது நல்லது. கொரோனா சமயத்தில் பெரிய விசாலமான மொட்டை மாடிகள் இதற்கு மிகவும் உதவும். இயற்கையோடு ஒன்றிய வாழ்வு உடல் உள்ளம் இரண்டுக்கும் ஆரோக்யத்தை தரும் .
துணிகளைத் தோய்த்து வெயிலில் கொடிகட்டி உணர்த்துவது அவசியம். சூரியன் மிகவும் சக்தி வாய்ந்த கிருமிநாசினி. sanitizer. உலர்ந்த சுத்தமான ஆடைகளை அணிந்தால் உற்சாகம் உள்ளம் உடல் ரெண்டுக்கும் கிடைக்கும்.
தொட்டிகளில் பச்சை பசேலென சிறு பூச்செடிகள் , தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, வெண்டை போன்ற காய்கறி செடிகளை வளர்க்கலாம். அவற்றிற்கு தண்ணீர் விடும்போது கிடைக்கும் சுகம் சொல்லில் கிடைக்காது. அவற்றால் பாசிட்டிவ் எனர்ஜி ரொம்ப கிடைக்கிறது.
குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடல் உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது. நல்ல தெய்வீக பாடல்கள், ஸ்தோத்திரங்கள், பஜனை பாடல்கள். ஓம் சப்தம் மெல்லிதாக கேட்டுக்கொண்டே இருந்தால் சுகமோ சுகம்.
எவரையும் குறைவாக எண்ணாமல், அன்போடு பழகுவோம். எல்லோரிடமும் கூப்பிட்டு பேசுவோம். நலன் விசாரிப்போம். இதனால் நம்மை வாழ்த்துவோர்கள் நம்மிடம் அன்பு செலுத்துவோர் நட்பு நிறைய கிடைக்கும். இது ஒரு விதத்தில் உம்மணாமூஞ்சியாக இருக்காமல், ஏதோ சோகத்தோடு, குரங்கை சாகக் கொடுத்த ஆண்டி என்று என் தாயார் அடிக்கடி சொல்வாள் அது போல் இருக்கவேண்டாம்.
பாட முயற்சி செய்து முடிந்தவரை மனதை இதமாக தடவிக்கொடுக்கும் பாடல்களை கேட்கும்போது நாமும் கூடவே பாடிப்பார்க்கலாம். பாசிட்டிவ் வைப்ரேஷன் VIBRATION கிடைக்கும்.
கடோசியாக ஒரு வார்த்தை. நீ தண்டம் இல்லை. கெட்டிக்காரன்.உன்னால் முடியும் தம்பி என்ற எண்ணம் ஒரு சிறு குரல் உள்ளே ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்புறம் ......
டாக்டர் வீடு மறந்து போய்விடும்.
No comments:
Post a Comment