Saturday, April 17, 2021

PESUM DEIVAM


 


பேசும் தெய்வம் --  நங்கநல்லூர்  J K  SIVAN 

           இது தான்  அது.

நம் எல்லோருக்கும்  தெரிந்த விஷயங்களைக்  கூட  சிலர்  சொல்லும்போது  அதை படிக்க வோ,  கேட்கவோ தனி சுவாரஸ்யம் உண்டா கிறது.  ஏன்?   அந்த கதையின் அல்லது விஷயத்தின் தனிச் சிறப்பாக இருக்கலாம், அல்லது தெரிந்த விஷயமாக இருந்தாலும் மீண்டும் அதைச் சொல்லும் விதம்  ரசிக்கும் படியாக இருக்கலாம். 

மஹா பெரியவா சொல்லும் விஷயங்கள் அப்படிப்பட்டவை.  ஒரு கதை அவர் அழகாக சொன்னது  மீண்டும் உங்களுக்கு சொல்கி றேன். கேளுங்கள். இதை  சக்திவிகடனில்  எப்போதோ  படித்த ஞாபகம்.. 

நமது ஸ்வபாவம்  விசித்திரமானது.  இருப்பது பிடிக்காது. இல்லாததை மனது தேடும்.  இது  எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.  அதாவது  கல்யாண விஷயத்திலிருந்து கடவுள் விஷயம் வரை. 
அந்தக்காலத்தில்  மாட்ரிமோனியல் matrimonial   விளம்பரங்கள் கிடையாது.  பெண்ணுக்கு  ஒரு நல்ல நாள் பார்த்து ஜாதகக்கட்டு தூக்கிக் கொண்டு கிளம்புவது என்று பெயர். பல வீடுகளில்  அலசி எந்த வீட்டில் பொருத்தமான பையன் இருக்கிறான் என்று விசாரித்து, பிறகு அவன் ஜாதகம் வாங்கி  ஜோசியர்  பொருத்தம் பார்த்து சொன்னபிறகு தான்  குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள்.  அப்போதெல்லாம் குடும்பத்திலேயே  அத்தைமகன், மாமன் மகன் என்று எவனாவது கிடைப்பான். 
கல்யாணங்களில், பண்டிகைகளில் பெண்கள் மூலம்  விஷயம் சேகரித்து பையன் பெண்கள் கிடைப்பார்கள்.   சில  பெண்களுக்கு சீக்கிரமே   விவாக பிராப்தி கிடைக்கும், சில பெண்களுக் கு வருஷக்கணக்கில்  பையன் தேடுவார்கள்.  கண்ணெதிரில் எதிர்த்த வீடு, பக்கத்து வீடுகளி லேயே  பொருத்தமான  பையனோ  பெண் ணோ கிடைப்பதும் உண்டு.  ஒரு பெண்ணுக்கு பையன்  எப்படி கிடைத்தான் என்று மகா பெரியவா சொல்லும்   ஹாஸ்ய கதை கேளுங்கள்:

'கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள்.  அவளுடைய  அப்பா அம்மா,  சொந்தத்திலேயே  ஒரு முறைப் பையனைப் பார்த்து,  கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்தனர். ஆனால், அந்தப் பெண்ணோ,
''புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்'' என்று பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், ''உன் இஷ்டப்படியே செய்!'' என்று விட்டுவிட்டார்கள்.

அந்தப் பெண், 'புருஷர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் ராஜாதான். எனவே, அவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அவ்வூர் ராஜா பின்னாலேயே போய்க் கொண்டிருந் தாள்.

ஒருநாள், ராஜா பல்லக்கில் போய்க்கொண்டு இருந்தபோது, ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிப் போனான். இதைப்  பார்த்த பெண்   'அடடா! ராஜாதான் புருஷர்களுக்குள் உயர்ந்தவன் என்று எண்ணி இத்தனை நாளும் ஏமாந்துவிட்டேனே! ராஜாவைக் காட்டிலும் உயர்ந்தவர் சாமியார் தான் போல் இருக்கிறதே! கல்யாணம் பண்ணி னால் இந்தச் சாமியாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மா னித் து, அந்தச் சாமியார் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்துவிட்டாள்.

ஒருநாள், சாமியார் தெருக் கோடியில் ஓர் ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையார் முன் நின்று நெற்றியில் குட்டிக்  கொண்டு, தோப்புக் கரணம் போடுவதைப் பார்த்தாள். 'சரி சரி, சாமியாரைவிடப் பெரியவர், உயர்ந்தவர் இந்தப் பிள்ளையார்தான். அதனால் பிள்ளை யா ரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானம் பண்ணிக் கொண் டாள். சாமியாரோடு போகாமல், அந்தப் பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந் துவிட்டாள்.

அந்த பிள்ளையாருக்கு பாவம்  கோவில் கூட கிடையாது.  அரசமரத்தடியில் சிவனேன்னு  உட்கார்ந்திருப் பவர்.   அந்த பெண்  பிள்ளை யார் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண் டாள் .  தெருவோடு போகிற நாய் ஒன்று அந்தப் பிள்ளையார்  சிலை மேலே காலைத் தூக்கிக் கொண்டதைப் பார்த்ததும்   
 'அடடா, இந்தப் பிள்ளையாரையும் விட  உயர்ந்தது இந்த நாய் தான் போலிருக்கிறதே!’ என்று, அந்த நாயைத் துரத்தினாள் .  அந்த நாய் மீது ஒரு பையன் கல்லை விட்டெறிந்தான். அது 'வள்... வள்’ என்று குரைத்துக் கொண்டு முன்னிலும் வேகமாக ஓடியது.
 ''ஏண்டா அந்த நாயை அடித்தாய்?'' என்று அந்தப் பையனை ஒருவன் பிடித்து அதட்டி னான். முதுகில் ஒன்று வைத்தான். 'நாயைக் காட்டிலும் நாயை அடித்தவன் பெரியவன் என்று எண்ணிய  அந்த பெண்  பையனை அடித்தவன்  தான்  எல்லோரிலும் உயர்ந்தவன் என்று முடிவு கட்டினாள் . 
இப்படிக் கடைசியில் அவள் கண்டுபிடித்த அந்த ஆசாமி வேறு யாருமல்ல; அவளுடைய அப்பா- அம்மா பார்த்து, முதலில் அவளுக்குத் தீர்மானம் பண்ணியிருந்த பிள்ளைதான்!

'வெகு தூரத்தில் யாரோ இருக்கிறான், இருக் கிறான்’ என்று எண்ணிக்கொண்டே சுற்றிய வள்  கடைசியில்,அவளுக்கு அருகிலேயே இருந்தவனை தான்  பிடித்தாள் என்று கதை முடிகிறது.

''எங்கோ தூரத்தில் இருக்கிறார்  ஸ்வாமி என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே! தெரியாத வரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனைப் பார்க்க முடியாது. அவன் உன்கிட்டேயே இருப்பவன் தான். 'தத்தூரே தத்வந்திகே’ - தூரத்திற் கெல் லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம் என்று ஸ்ருதி சொல்கிறது.
horizon  என்பார்களே, தொடுவானம்; இங்கிருந் து பார்த்தால் ஆகாசமும் பூமியும் அந்த இடத்தில் சேருவதுபோல இருக்கும். அங்கே ஒரு பனை மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். 'அந்தப் பனை மரத்தடிக்குப் போனால் பூமியும் வானமும் சேருகிற இடத்தைப் பிடித்துவிடலாம்’ என்று இங்கே இருந்து பார்க்கிறபோது நமக்குத் தோன்றும். ஆனால், அங்கே போனால், தொடுவானமும் அங்கிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் போய் விட்டது போலத் தெரியும். நாம் போகப்போக அதுவும் போய்க்கொண்டே இருக்கும். 'இந்தப் பனை மரத்தின் கீழ் வந்து நின்றால் தொடு வானம் வெகுதூரத்திற்குப் போய்விட்டதே, அதைப் பிடிக்க இன்னும் நாமும் போக வேண்டும்’ என்று போய்க்கொண்டிருந்தால், அதைப் பிடிக்க முடியுமா? இந்தப் பனை மரத்துக்கு வெகு தூரத்தில் இருந்து பார்க்கும் போது இந்த இடத்தில்தான் தொடுவானம் இருப்பதுபோல இருந்தது. இந்த இடத்திற்கு வந்தவுடன், அது நம்மைவிட்டு இன்னும் வெகு தூரம் போய்விட்டது. ஆகவே, அது எங்கே இருக்கிறது? நீ இருக்கிற இடத்தில்தான் இருக்கிறது. நீ இருக்கிற இடம்தான் அது. அப்படி 'அது’, 'அது’ என்று சொல்லப்படுகிற, வெகு தூரத்தில் இருக்கிற ஸ்வாமி, உன் கிட்டேயே- உன் உள்ளேயே இருக்கிறார்; நீயே அதுதான் என வேதம் உணர்த்துகிறது.

'நீயே அது’ என்பதை 'தத்-த்வமஸி’ என்ற மஹாவாக்கியமாக வேதம் சொல்கிறது. 'தத்வம்’ என்றால் இங்கே தத்தின் தன்மை என்று அர்த்தமில்லை. 'த்வம்’ என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. 'தன்மை’ என்பது ஒன்று. 'நீ’ என்பது இன்னொரு அர்த்தம். தத்-த்வம் அஸி என்னும்போது 'தத்-அது, த்வம்-நீ(யாக), அஸி-இருக்கிறாய்’ என்று அர்த்தம்.

நான்... நான் என்று எதை நினைத்துக் கொண்டி ருக்கிறாயோ, அதுதான்- அந்த அறிவுதான் ஸ்வாமி. அந்தப் பிரகாசம் உன்னிடத்தில் இல்லையென்றால், உன்னால் ஸ்வாமி என்றே ஒன்றை நினைக்க முடியாது. 'நான் என்று அறிகிறேன், நான் என்று நினைக்கிறேன், அப்படி நினைக்கிற அறிவுக்கு மூல வஸ்து வெகுதூரத்தில் இருந்து கொண்டிருக்கிற 'தத்’ என்று நினைக்கிறாயே, அந்த 'தத்’தும் நீயும் ஒன்றுதானப்பா!’ இதுதான் வேதத்தின் முடிவில் சொல்வது.'

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...