Tuesday, April 27, 2021

PATTINATHAR

  பட்டினத்தார் -- நங்கநல்லூர் J .K. SIVAN


''வீடு நமக்குத் திரு ஆலங்காடு, விமலர் தந்த
ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம்''

வீடு வாசல் மனைவி குடும்பம் உலகம் எல்லாம் துறந்தவனுக்கு வீடு என்று ஒன்று எதற்கு ? வீடு அவசியம் தான் என்றால் அந்த வீடு இனி எனக்கு திருவாலங்காடு. பசி வந்தபோது உண்ண பாத்திரம் அவன் கொடுத்த இரு கைகள்.. அதுவும் போதாதா? இருக்கவே இருக்கிறது அவனே உபயோகித்த திருவோடு.. அதைப்போல எங்காவது ஒரு அக்ஷய பாத்திரம் பார்க்க முடியுமா, கிடைக்குமா?

முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே''

இதோ, என் அன்னை. என்னைப் பெற்று, பாலூட்டி, சீராட்டி, வளர்த்தவள் . இனி அவள் யாரோ, நான் யாரோ. என் எதிரில் கிடக்கிறாள் கட்டையாக, கட்டைகள் மேலே. அவளுக்கு நான் செய்யவேண்டியது இனி என்ன பாக்கி? இதோ தீயை மூட்டி அவளை எரிக்கிறேன் . அவள் மட்டுமா எரிகிறாள்? எங்கும் தீ, எதிலும் தீ? முன்பு ஒரு காலத்தில் அந்த பரமசிவன் முப்புரங்களையும் தமது நெற்றிக்கண் தீயினால் எரித்தான் . அதை நினைவு கூர்ந்த ஹனுமான் பின்னால் திரேதாயுகத்தில் இலங்கையில் சீதையைக் கண்ட பிறகு ராவணனின் ஊரை அவன் தனது வாலில் இட்ட தீயாலே , எரித்தான் . அம்மா, நீ என்ன செய்துவிட்டாய் தெரியுமா? மேலே சொன்ன ரெண்டு தீயை விட இன்னும் எரிச்சல் கூடிய உன்னைப் பிரிந்து ஏங்கும் என் அடிவயிற்றில் அத்தனை அக்னியையும் கொட்டிவிட்டாயே. அதற்கு பதிலாக நான் மூட்டும் இந்த தீயும் உன்னை எரிக்கட்டும் என்று பாடுகிறார் பட்டினத்தார். தாய்ப்பாசம் எவரையும் விடாது.

''ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு
உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு; பசித்தோர் முகம் பார்
நல் அறமும் நட்பும் நன்று என்று இரு; நடு நீங்காமலே நமக்கு இட்ட படி
என்றிரு; மனமே உனக்கு உபதேசம் இதே!''


ஏ மனமே, எப்போதும் ஏதோ ஒரு கவலையில், தேடலில், அலைகிறாயே, உனக்கு உபதேசம் செய்கிறேன் கேள். அலையாதே. ஒன்றே ஒன்று தான் இந்த பிரபஞ்சத்தில் சாஸ்வதம். அது அந்த பரமன் ஒன்றே. அதுவே தான் நமக்கு தெய்வம். என்னதான் இரவு பகல் தேடித் தேடி சேமித்தாலும் நாம் சேர்த்த செல்வம் என்றும் நம்மோடு இருக்கப்போவதில்லை. ஒருநாள் நம்மை விட்டு நீங்கிவிடும். சுற்றிலும் பார், எத்தனை பசித்த முகங்கள். உன்னால் ஆனதைக் கொடு. பசி தீர். நேர்மையான தர்மம் அன்பு உண்மையான நட்பு தான் என்றும் உதவும். நியாயமாக, நேர்மையாக, மனச் சாக்ஷிக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள் . இது தான் நமக்கு அந்த பரமேஸ்வரன் இட்ட கட்டளை என்று புரிந்து கொண்டு வாழ். மனமே இது ஒன்று தான் நான் உனக்குத் திருப்பி திருப்பிச் சொல்லமுடியும்.

''வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்; தொண்டு செய்து
நாள் ஆறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன்; நான் இனிச் சென்று
ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே.''


ஆஹா, எப்பேர்ப்பட்ட பக்தர்கள் உன் அடியார்கள் பரமேஸ்வரா, ''பிள்ளைக்கறி கொண்டுவா என்று நீ சொல்ல அந்த சிறுத்தொண்டன் சிறிதாவது யோசித்தானா? பெற்ற தன ஒரே பிள்ளையை சந்தோஷமாக வெட்டி கறி சமைத்து உனக்கு அளித்தது போல் எவராவது சிந்திக்க முடியுமா? திருநீலகண்டர் ''என்னைத் தொடாதே என்று சொன்ன மனைவியை கடைசிவரை தொடாமல் இளமை மறந்த வைராக்யம் எவருக்காவது வருமா? உன்கண்ணில் உதிரம் வடிவது கண்டு துடித்து தனது கண்ணை அப்ப முன்வந்த, மனம் வந்த, கண்ணப்பனைப் போல் நான் ஆவேனா? காளத்தீஸ்வரா நான் எப்படி ஆளாவேன், எப்படி உன்னை அடைவேன், நீயே சொல்? என்கிறார் இந்த பாடலில் எளிதாக பட்டினத்தார் புரிகிறார்.

''ஆரூரர் இங்கு இருக்க அவ்வூர் திருநாள் என்று ஊர்கள் தோறும்
உழலுவீர்;–நேரே உளக் குறிப்பை நாடாத ஊமர்காள்! நீவீர்
விளக்கு இருக்க தீ தேடுவீர்''


திருவாரூரில் தியாகேசனைக் கண்டு புளகாங்கிதம் அடைகிறார் பட்டினத்தார். மக்களே, எந்தெந்த ஊர்களுக்கோ சென்று விழாக்கள் திருநாள் எல்லாம் கொண்டாடுகிறீர்களே. இதோ இங்கே இருக்கிறானே திருவாரூரான். உள்ளத்தில் இருப்பதை அறியாத பேசவொண்ணா ஊமைகளே. உங்களைப்பற்றி நான் என்ன சொல்வேன்.. ம்ம்ம் விளக்கு தீபம், ஜோதி, இங்கே இருக்கிறது, ஆனால் எங்கோ போய் நெருப்பை, ஒளியை தேடுகிறீர்கள்...!! அவ்வளவு தான் சொல்லமுடிகிறது.

பட்டினத்தார் தொடர்வார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...