ஒரு அற்புத ஞானி - நங்கநல்லூர் J K SIVAN
வெளியே அதிகம் தெரியாத ஒரு மஹா ஸ்வாமிகளின் பொன் மொழிகள்
திருவண்ணாமலையில் சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் அதிசயம், ஆச்சர்யம் நிறைந்த சம்பவங்களாக இருந்தபோதிலும் அவற்றைப் பற்றி அதிகம் வெளியே தெரியாத காரணம் அவர் விளம்பரப்பிரியர் அல்லர். மற்றும் எவரையும் அருகிலே சேர்க்காதவர் என்பதால் இதை கவனித்து வெளியே சொல்ல அதிக பக்தர் இல்லை. இது தவிர அவரிடமிருந்து அதிசய அனுபவங்கள் பெற்ற பக்தர்களும் அவற்றை வெளிப்படுத்த முற்படவில்லை. ஆங்காங்கே அவர்கள் மூலம் அறிந்த , கசிந்த விஷயங்கள் தான் ஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் போன்றவர்களால் நமக்கு கிடைத்துள்ளது.
இன்று ஒரு சில சம்பவங்கள் சொல்கிறேன்.
சேஷாத்திரி ஸ்வாமிகள் அருகிலே எப்போதும் சிஷ்யனாக சேவை செய்யும் மாணிக்கசாமிக்கு ஒருநாள் சேஷாத்திரி ஸ்வாமிகள் அபூர்வமான ஒரு உபதேசம் செய்தார்:
''இதோ பார் மாணிக்கம், நீ ஈயைப் போல் சுத்தமாக,எறும்பைப் போல பலத்தோடு, நாயைப்போல் அறிவோடு, ரதியைப்போல் அன்போடு இருக்க கத்துக்கோ. அப்போ குரு தெரிவார்'' என்றார்.
மலர்களின் மதுவும், மலமும் ஈக்கு ஒன்றே . ஆகவே இரண்டிலும் அது ஆனந்திக்கிறது. எனவே மனதளவில் அது சுத்தமானது.
பலமுள்ளவன் தான் சோர்வடைய மாட்டான். இரவும் பகலும் உழைக்கும் எறும்பு சுறுசுறுப்புக்கு பேர் போனது. ஆகவே அதை பலமிக்கது என கருதலாம்.
காதையும், வாலையும் எவனோ குறும்பு சாமி வெட்டிவிட்டான் என்றாலும் காது இருந்த இடத்தை உயர்த்தியும், வால் இருந்த இடத்தை ஆட்டியும் நாய் அறிவை உபயோகித்து ஒருவேளை உணவை அளித்தவனை நன்றியோடு நெருங்குகிறது. அதால் நன்றியை தெரிவிக்க முடிந்தது இந்த செயல் தானே.
எந்த மனைவி கணவனின் நலம் கருத்தில் கொண்டு எப்போதும் அவனுக்கு பணிவிடை செய்து, அவன் அடிபணிந்து கிடக்கிறாளோ அவளே அழகிய குணம் படைத்த ரதி என்று கருதப்படுபவள்.
இதைத் தான் ஸ்வாமிகள் மாணிக்க சாமிக்கு உணர்த்தி இருக்கிறார்.
எனவே ஐம்புலன் வசமாகாமல் சுறுசுறுப்பாக தனது நித்ய கடமைகளை செய்பவன் கஷ்டத்தை கஷ்டமாகவே உணரமாட்டான். லோக க்ஷேமத்திற்காக தன் உழைப்பை ஈடுபடுத்திக் கொள்வான்.
நமது கர்மங்கள் பயனை அளிப்பவை. ஆனால் ஈஸ்வரார்ப்பணமாக செய்த கர்மங்கள் வறுத்த விதையை நட்டது போல. எந்த கர்மபயனும் சம்பந்தப்படுத்தாது.'' என்றார்.
ஒருநாள் ஸ்வாமிகள் எச்சம்மா ( லட்சுமி அம்மா!) வீட்டுக்கு போனார். அவள் பூஜை பண்ணும் நேரம் அது.
''நீ என்ன பூஜை பண்றே?''
''உங்க படத்தையும், ரமணர் படத்தையும் வைத்து தான் பூஜை பண்றேன் இதோ பாருங்கோ '' என்றாள் .
''எவ்வளோ நாள் இந்தமாதிரி எல்லாம் பூஜை பண்றது. தியானத்தில் இருக்க வேண்டாமா?'' என்கிறார் சுவாமி.
''எப்படின்னு சொல்லிக் கொடுங்கோ? பண்றேன் ''
''இப்படித்தான்'' என்று சுவாமி தரையில் பத்மாஸனம் போட்டு அமர்ந்தார்.அவ்வளவு தான். அவர் சிலையாகி விட்டார். காலை பத்துமணிக்கு இது நடந்து மாலை நாலு மணி கிட்டத்தட்ட அவர் அசையவே இல்லை. சமாதி நிலை. மாலை நாலரை மணி அளவில் இதுவரை எதிரே அமர்ந்து எத்தனையோபேர் தன்னையே பார்த்து க்கொண்டிருந்தது எதுவுமே தெரியாது அவருக்கு. மெதுவாக கண் திறந்தார்.
''எச்சம்மா, பார்த்தியா. இப்படி தான் தியானம் பண்ணணும் நீ''
ஒருவர் அப்போது ''ஈஸ்வரனை எப்படி தியானம் பண்ணுவது?'' என்று கேட்க, ''பலாப்பழத்திலுள்ள பலாச்சுளை போல, பலாக்கொட்டையை போல பண்ணணும்'' என்கிறார்.
பக்தருக்கு புரியாமல் வாயைப் பிளந்தார். ஸ்வாமியே விளக்கினார்.
''பலாக்கொட்டையை ஈஸ்வரன் என்று வைத்துக்கொள். எப்படி தன்னுடைய பீஜ சக்தியால் அநேக மரங்கள், கோடிக்கணக்கான பழங்களை உற்பத்தி பண்ணுகிறது. அதுமாதிரி தான் ஈஸ்வரன் தன்னுடைய மாயா சக்தியால் அளவற்ற ஜீவன்களை உண்டு பண்ணுகிறான்.
சின்னதும் பெரிசுமாக, தித்திப்பு வேறே வேறே மாதிரி வெவ்வேறு நிறமாக, வெள்ளை, மஞ்சள், வெளிறிய கலர் என்று பலாப்பழ சுளை மாதிரி, எவ்வளவோ உயிர்களை படைக்கிறான். பலாக்கொட்டை மேலே உறை இருக்கிற மாதிரி ஈஸ்வரன் ஜீவனை அன்னமயம் முதலான பஞ்ச கோசங்களை வைத்து மூடி இருக்கிறான். பலாக்கூட்டை மேலே இருக்கிற உறையை எடுத்துட்டு சுட்டு சாப்பிடறோமே. அது போல பஞ்சகோசங்களை நீக்கணும். அப்போதான் பகவான் தெரிவான்.
இன்னொண்ணும் சொல்றேன் கேளு. நாம எல்லோருமே ஒருத்தர் தான். ஒரு ஸ்வரூபம் தான். ஆனால் கண்ணாடியில் பார்க்கும்போது, நாமும் தெரியறோம். நம்ம ஸ்வரூபமும் கண்ணாடியில் ஒண்ணு தெரியறது. ரெண்டாயிடுத்து. அதுமாதிரி ஆத்மா ஒண்ணு தான். அதை நிர்மலமான புத்தியில் பிரதிபலிக்க பண்ணினால் தான் தியானத்தில் அனுபவிக்கிறோம். தியானம் பண்றவன், தியானம், யாரை தியானம் பண்றோமே மூணும் ஒண்ணாயிடணும் . அதை தான் த்ரிபுடி என்கிறோம். '' ஒன்றறக்'' கலந்து என்று தமிழ் பாட்டிலே வருமே அதுதான் இது.
No comments:
Post a Comment