Thursday, April 1, 2021

VSS RAMAYANA




சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்- நங்கநல்லூர் J K SIVAN


தனது நிகரற்ற ஆங்கில புலமையால் ஆங்கிலே யர்களை திகைக்க வைத்த, பொறாமைப்பட வைத்த , ஸ்ரீ V .S ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் 1944ல் ராமாயண சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் மைலாப்பூரில் நடத்தினார். சமஸ்க்ரித கல்லூரி கட்டிடத்தில் திரளாக மக்கள் வெள்ளமென திரண்டனர். ஆங்கில ராமாயண மழை தங்கு தடையின்றி பொழிந்தது. முப்பது நாட்கள் நடந்த அந்த ராமாயண பிரசங்கம் உலகப் பிரசித்தி பெற்றது. இன்றும் பேசப்படுகிறது.


பிரசங்கத்திற்கு தலைமை தாங்கியவர் ஸ்ரீ P S சிவசாமி ஐயர். இவர் பெயரில் தான் PSS உயர்நிலைப்பள்ளி இன்றும் சிறந்த மாணவர் களை தந்து கொண்டு இருக்கிறது.


இவரது பிரசங்கத்தில் ராமன் ஒரு மனிதனாக தர்மவழியில் தன்னை செலுத்தி கடமையில் வென்றதாக காட்டப்படுகிறான். அதனால் ஒவ்வொரு மனிதனும் ராமனைப் பின்பற்ற முடியும் என உணர்த்துகிறார்.


ராவணன் வரம் கேட்கும்போது எந்த தேவன், ராக்ஷஸன் எவனாலும் தனக்கு தோல்வியோ, மரணமோ கிடையாது என்று கேட்டு பெறுகி றான். எந்த மானுடனும் தன்னை நெருங்க முடியாது என்ற அகம்பாவம். ஆகவே மானுட னால் என்ற வார்த்தையை கேட்கவில்லை. ஸ்ரீமன் நாராயணன் மனிதனாக அவதரித்த போது , தசரதன் மகன் ராமனாக மானிட உருக்கொண்டு ராவணனை வெல்கிறார். கொல்கிறார் .


ராமன் ஒரு மனிதனாக பிறந்ததால், மனித ஸ்வபாவத்தை, மானுட உணர்ச்சிகளை, ஆங்காங்கே வெளிப்படுத்துகிறார்..


யுத்தகாண்டத்தில் சீதையிடம் அவர் கடுமையாக நடந்துகொண்டது அவரைப் பற்றிய அன்பே வடிவம், காருண்ய திலகம் என்பதில் இருந்து சற்று மாறுபடுவது போல் காட்டும்போது அது ஒரு நாடகம்.


ராமன் ஒரு உதாரண புருஷனாகவே இதில் காண்கிறார். பொறுமையுள்ளவராக, தயை காருண்யம், நேர்மை, பித்ரு வாக்ய பரிபாலனம், சகோதர பாசம் கொண்டவர் என்பது எல்லாமே அற்புதமாக நெஞ்சை கொள்ளை கொள்ளும் விதத்தில் ஒரு அற்புத பாத்திரமாக தெரிகிறார். ஒரு சில இடங்களில் கோபம், கடுமை வெளிப்படும்போது அது ஒரு தனி சுவையை, விறுவிறுப்பைச் சேர்க்கிறது.


ராமன் பரதன் லக்ஷ்மணன் சத்ருக்னன் நால்வருமே ஒரு சில மணித்துளிகள் இடைவெளி விட்டே பிறந்தவர்கள் என்றாலும் ராமனின் குணாதிசயம், தன்மை மற்றவர்களிடத்திலிருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறது அவன் சாதாரண மனிதன் அல்ல என்று காட்டுகிறது.


ராமாயணம் கடைசி வரை லக்ஷ்மணனை ஒரு சுத்த வீரனாக,சகோதர பாசமுள்ளவனாக காட்டுகிறது. அவன் ராமனின் உடலில் ஒரு பாதியாக செயல்படுகிறான்.

விஸ்வாமித்ரர் தசரதன் அயோத்தியில் அரண்மனைக்கு வந்து ''ராமனை என்னோடு அனுப்பு'' என கேட்கிறார். என்றாலும் ராமனின் நிழலாகிய லக்ஷ்மணன் தானும் காட்டுக்கு விஸ்வாமித்ரனுடன் அவர் அழைக்காமலேயே செல்கிறார். 14 வருஷம் வனவாசம் விதிக்கப் படா மலேயே மரவுரி தரித்து லக்ஷ்மணன் ராமனோடு செல்கிறார். காரணம் லக்ஷ்மணன் ராமன் இருவரையும் பிரிக்கமுடியாது. ராமனின் வலது கை லக்ஷ்மணன். ராமனின் உயிர், தனியே வேறு ஒரு உடலில் தோன்றியவன் லக்ஷ்மணன்.


ராமனை தனது யாகத்திற்கு ராக்ஷஸர்களின் இடையூறு இல்லாமல் காக்க அனுப்பு என்று கேட்கும்போது விஸ்வாமித்ரர் சுபாகு மாரீசன் பெயர்களைக் குறிப்பிடுகிறாரே தவிர தாடகை பெயரை சொல்லவில்லை. ஒரு பெண்ணைக் கொல்ல ராமனை அனுப்பு என்று ராமனின் வீரத்தைக் குறைகூறுவதாகச் சொல்ல வேண்டாம் என நினைத்திருக்கலாம். ஆனால் பின்னர் வனத்தில், ராமனிடம் '' ராமா, தாடகையை ஒரு பெண் என கருணை காட்டாதே. கொடிய ராக்ஷஸி அவள்'' என்று ரிஷி எச்சரித்தும் ராமன் அவளைக் கொல்ல முதலில் தயங்கினார். அவளால் துன்பம் முனிவர்களுக்கு பெருகுகிறது என்று அறிந்தபின் இரக்கம் காட்டாமல் வேறு வழியின்றி கொன்றார்.


சாஸ்திரிகள் ராமாயண பிரசங்கத்தில், மிதிலையில் நடந்த சீதா ஸ்வயம்வரத்தை வர்ணிக்கும்போது எவராலும் நெருங்கி அசைக்க முடியாத சிவ தனுசுவை ராமன் எளிதாக உயர்த்தி ஒடித்தார் என்பதால் சீதை ஸ்வயம்வரத்தில் ராமனின் உடைமையானாள் என்றாலும் ராமர் அவளை உடனே ஏற்க வில்லை. தனது தந்தை தசரதரின் அனுமதி முதலில் பெற வேண்டும் என்று நிர்பந்தித்தார் என்கிறார். இது ஒரு அழகான திருப்பம். ராமர் சீதையை புறக்கணிக்கவில்லை. தந்தையின் மேல் உள்ள உயர்ந்த மரியாதை, பக்தியை உணர்த்த இந்த காட்சி அளிக்கப்படுகிறது.
பின்னர் வனவாசத்தில் அனசூயாவை சந்தித்த சீதை அவளிடம் தனது திருமணத்துக்கு தசரதர் மனமுவந்து சம்மதம் தெரிவித்தார் என்று குறிப்பிடுகிறாள். அதில் அவளுக்கு பெருமகிழ்ச்சி. தான் விரும்பிய ராமனை தனக்களித்த தசரதர் மேல் அளவு கடந்த மரியாதை சீதைக்கு.


அதே போல் ராமருக்கு சீதை மனைவி என்பது ஸ்வயம்வரத்தால் நிச்சயிக்கப்பட்டபோது, மற்ற மூன்று சகோதரர்களுக்கும் சீதையின் சகோதரி கள் மனைவியானார்கள் அல்லவா. அது அவரவர் பெற்றோரால் நடந்த ஏற்பாடு இல்லை. மஹா முனிவர்களான வசிஷ்டரும் விஸ்வாமித்ரரும் இந்த எண்ணத்தை ஏற்பாட்டை வெளிப்படுத்த பெற்றோர்கள் இசைந்து மனமுவந்து அவர்கள் திருமணமும் நடைபெற்றது.


இன்னொரு விஷயம் சாஸ்திரிகள் சொல்கிறார். ராம ராவண யுத்தத்தில் லக்ஷ்மணனை இந்திர ஜித் நாகாஸ்திரத்தால் மூர்ச்சை அடைய செய்தபோதும், ராவணனி ன் சக்தி ஆயுதம் லக்ஷ்மணனை சாய்த்த போதும் ராமர் மன வேதனை அடைந்து துடித்தார். இந்த சம்பவங்களை அறிந்த சீதை அனுமனிடம் அதைப் பற்றி குறிப்பிடுகிறாள்.


''என்னை விட லக்ஷ்மணன் மேல் தான் அதிக பாசம் கொண்டவர் ராமர். அவர் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்'' என்று சொல்வதாக அமைந்துள்ளது இந்த அற்புதமான ஒரு காட்சி.


ராமன் காட்டுக்கு போகவேண்டும், யுவராஜ்ய பதவி பரதனுக்கு என்று தாய் கைகேயி உத்தர விட்டபோது ராமன் அதை பூரணமாக ஏற்றுக் கொண்டார். அதை நிறைவேற்ற கிளம்புகிறார். சீதை தானும் மரவுரி தரித்து அவருடன் வனவாசம் செல்ல ஆயத்தமாகும்போது வனவாசத்தில் எதற்கு ஆயுதங்கள் என்று கேட்கிறதாக ஒரு சம்பவம். லக்ஷ்மணன் அப்போது நடந்து கொண்ட விதம் அற்புதம்.
இனி தனக்கு தான் பொறுப்பு அதிகம். நானே ராமருக்கும் சீதைக்கும் காவலாளி . கொடிய ராக்ஷஸர்கள் உலவும் வனத்தில் எவரையும் கண்காணித்து, அவர்கள் அருகே அணுகாமல் பாதுகாப்பவன். பதினாலு வருஷமும் கண்ணிமை மூடாமல் சந்தேகாஸ்பதமான எவரையும் அவர்களை நெருங்கவிடாமல் காவல் காக்கும் பொறுப்பை தானாகவே ஏற்றுக் கொண்டவன். ராமன், தர்மத்தை பாதுகாக் கட்டும். எனக்கு அது சம்பந்தமில்லை. ராமனின் சீதையின் நலம், அவர்களது பாதுகாப்பு இது ஒன்றே என் இலக்கு. லக்ஷ்யம் என்பதை தேரோட்டி வந்த சுமந்திரரி டம் வெளிப்படுத்துகிறான் லக்ஷ்மணன்.


வனவாசம் செல்லும்போது லட்சுமணன் தாய் சுமித்திரையை வணங்கி விடை பெறும்போது அவள் ''மகனே இனி ராமன் தான் உன் தந்தை, சீதை தான் உன் தாய் '' என்று அறிவுரை தந்ததை அப்படியே நெஞ்சில் நிறுத்தி தான் மேலே சொன்ன பொறுப்பை லக்ஷ்மணன் மேற்கொண் டான் என்று பின்னர் இந்த சம்பவத்தை நினைவு கொண்டு சீதை அனுமனிடம் கூறுகிறாள் என்று சாஸ்திரிகள் அற்புதமாக ராமாயண பிரசங்கம் செய்திருக்கிறார்.


இன்னும் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...