Tuesday, April 13, 2021

tamil new year PLAVA

 



   '' வருக  ப்ளவ,   பிலவ   வருஷமே   வா.    -   நங்கநல்லூர் J K  SIVAN  -


நாளைக்கு மங்களகரமான  ''பிலவ''  தமிழ்ப் புத்தாண்டு 14-04-2021 புதன்கிழமை   சித்திரை 1 


பஞ்சாங்கம் கணிப்பு: திதி : 12:48 PM வரை துவிதியை பின்னர் திருதியை:     நட்சத்திரம் : பரணி 05:23 PM வரை பிறகு கார்த்திகை.  யோகம் : ப்ரீதி 04:15 PM வரை, அதன் பின் ஆயுஷ்மான்.  கரணம் : கௌலவம் 12:48 PM வரை பிறகு சைதுளை 02:07 AM வரை பிறகு கரசை. கரசை - Apr 15 02:07 AM – Apr 15 03:27 PM.  ஆயுஷ்மான் - Apr 14 04:15 PM – Apr 15 05:20 PM.    நாள் - கீழ் நோக்கு நாள்.   பிறை - வளர்பிறை.  திதி சுக்ல பக்ஷ துவிதியை - Apr 13 10:17 AM – Apr 14 12:48 PMசுக்ல பக்ஷ திருதியை - சூரியோதயம் - 6:00 AM சூரியஸ்தமம் - 6:17 PM  சந்த்ரோதயம் - Apr 14 7:21 AM
சந்திராஸ்தமனம் - Apr 14 8:13 PM.  சூரியன் மேஷம் ராசியில் சந்திர ராசி.  பூர்ணிமாந்த முறை - சைத்ரம்
விக்கிரம ஆண்டு - 2078, ஆனந்த சக ஆண்டு - 1943,  மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. 

பரணி சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் பெண்களுக்கு உற்சாகத்தையும் மனநிறைவும் தரும்படியான ஆண்டாக பிலவ ஆண்டு இருக்கும்.  இந்த ஆண்டில் மிக அதிகம் பேருக்கு திருமணங்கள் நடக்கும்.
சூரியன் முதல் சனி வரை   பிலவ வருடம் பிறக்கும் போது கிரக நிலைகள் மிக வலுவாக இருக்கின்றன.

மேஷத்தில் சூரியன் உச்சமாகவும் உடன் சுக்கிரனும் சந்திரனும் பயணிக்கின்றனர். ரிஷபத்தில் ராகுவும், மிதுன ராசியில் செவ்வாயும் பயணிக்கின்றனர்.விருச்சிக ராசியில் கேது பகவானும், மகர ராசியில் ஆட்சி பலத்தோடு சனிபகவானும், கும்ப ராசியில் அதிசார குரு பகவானும், மீனத்தில் புதன் பகவான் நீசமடைந்தும் சஞ்சரிக்கின்றன.  விவசாயம் செழிக்கும்.  பரணி நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்படியான வருமானம் சிறப்பாகவே இருக்கும். ஹோட்டல், உணவுத் தொழில் இந்த ஆண்டும் கொடிகட்டிப் பறக்கும். நிறைய பேர் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். விவசாயம் செழிப்பாக இருக்கும், பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.மந்த நிலையில் இருந்த கட்டுமானத் தொழில் அசுர வேகத்தில் வளர்ச்சி யடையும்.  தொழில் லாபம் வரும்.

வாகனம் தொடர்பான தொழில் சிறப்பாகவே இருக்கும்.சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்கள், உற்பத்தி தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் மன நிறைவைத் தரக் கூடிய வகையில் தொழில் வளர்ச்சி ஏற்படும். லாபமும் கிடைக்கும்.

அரசு, தனியார் வேலை.  தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். தற்போது பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது வரும். அரசுப் பணியாளர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள். பிரச்சினைகள், வழக்குகள் என அதிகம் சந்திக்க வேண்டியது வரும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் மிதமான வளர்ச்சி இருக்கும். அந்தத் துறையில் இருப்பவர்களுக்கு வேலை இழப்பு அல்லது வேலை மாற்றம் உண்டாகும். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் வெளிநாடு தொடர்பு உடைய தொழில்களில் மந்தநிலை ஏற்படும். வெளிநாட்டு வர்த்தகம் குறையும். கலைத்துறை வாய்ப்பு
இசை நாட்டியக் கலைஞர்களுக்கு நல்ல வளர்ச்சியும், அங்கீகாரமும், மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சார்வரி வருடத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது திறைத்துறை கலைஞர்கள்தான். இந்த பிலவ ஆண்டிலும் திரைத் துறைக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் ஓரளவுக்கு மட்டுமே வளர்ச்சியை அடைய முடியும்.

பிலவ வருடம் புதன்கிழமை வருடப்பிறப்பு இருப்பதால் நன்றாக மழை பெய்யும். செவ்வாயின் வீட்டில் சுக்கிரன், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருப்பதால் கால்நடைகளுக்கு புதிய நோய்கள் தாக்கும். விவசாயிகளுக்கும் பாதிப்பு அதிகமாகும் வாகன போக்குவரத்து மூலம் சாலை விபத்து ஏற்படும். பலவிதமான வியாதிகளால் மக்கள் துன்பப்படுவார்கள். மருத்துவர்களை கடவுளாக மக்கள் பாவிக்கும் நேரம் வரும். புழுதி சூறாவளி காற்றுகள் பலமாகத் தாக்கும். ஆன்லைன் மூலம் வியாபாரம் அதிகரிக்கும்.

அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டி வரும். அரசியல்வாதிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும். பத்திரிகை மற்றும் ஊடகத் தொழில் சில பாதிப்புகளையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். பாதிப்புகள் குறைய தொழில் வளர்ச்சியடைய ராகு காலத்தில் ஸ்ரீதுர்க்கையை வணங்கலாம். சனிபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கலாம்.

சார்வரி வருடத்தில் மாணவர்களுக்கு கல்வி சாலைகளின் வாசனையே இல்லாமல் போய்விட்டது ஆன்லைன் கல்விதான் ஆசானாக இருந்தது. ஏராளமான மாணவர்கள் வாசிக்கம் பழக்கத்தை மறந்து விட்டனர். எனவே இந்த பிலவ ஆண்டில் பல மாணவர்களுக்கு ஞாபக மறதி, கவனமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தேர்ச்சி விகிதம் குறையவும் வாய்ப்பு உண்டு. கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படும், மாணவர்கள் கல்வியில் மிக அதிக அளவில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன.
1. சௌரமான முறை   --  சூ
ரியனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. அவை : 1 சௌர வருஷ முறை 2 சாயன வருஷ முறை.

2.சந்திரமான முறை-  சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஒரு வருடம் என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது.

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிடம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும்.

1.திருக்கணித பஞ்சாங்கம்-   சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது.

2.வாக்கிய பஞ்சாங்கம் -  
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த ரிஷிகள் ஒன்றுகூடி தங்களுக்குள் இருக்கும் கருத்துக்களை பரிமாறி இயற்றிய ஸ்லோகங்களில் உள்ள கணிதமுறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் இன்றளவும் எழுதப்படுவது வாக்கிய பஞ்சாங்கமாகும்.  காலமாற்றத்தினால் எவ்விதமான மாற்றத்திற்கும் உட்படாத, அதாவது திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. நம் முன்னோர்களின் கருத்துக்களையும் அவர்கள் பின்பற்றிய கணிதமுறைகளை இன்றளவில் எள்ளளவும் மாற்றாமல் பழமையை பிரதிபலிக்கும் பஞ்சாங்கம்
வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும். தமிழ் நாட்டில் வாக்கிய பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை கருவி   பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.
வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் வேறுபாடு..!!

நமது  கோவில்களில்  இறைவழிபாடுகள் யாவும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பின்பற்றப் படுகின்றன.

தமிழ்நாட்டில் வெளிவரும் வாக்கிய பஞ்சாங்கங்கள்  என்ன தெரியுமா?   ஆற்காடு ஸ்ரீசீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்,   அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கம்,  மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், 
திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கம்,  ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம் முதலியவையாகும்.

திருக்கணித பஞ்சாங்கம்    ஜாதகம் கணிக்க மற்றும் ஜாதக பலன் உரைக்க ஜோசியர்களால்  பயன்படுத்தப் படுவது.    திருக்கணித பஞ்சாங்கங்கள்   சில:   ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம். வாசன் சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம்,  குமரன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம்,    சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம். 


பிலவ வருடம் பிறக்கும் போது கிரக நிலைகள் மிக வலுவாக இருக்கின்றன. திருக்கணிதப்    பஞ்சாங்கப்படி நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால், மேஷத்தில் சூரியன் உச்சமாகவும் உடன் சுக்கிரனும் சந்திரனும் பயணிக்கின்றனர். ரிஷபத்தில் ராகுவும், மிதுன ராசியில் செவ்வாயும் பயணிக்கின்றனர்.விருச்சிக ராசியில் கேது பகவானும், மகர ராசியில் ஆட்சி பலத்தோடு சனிபகவானும், கும்ப ராசியில் அதிசார குரு பகவானும், மீனத்தில் புதன் பகவான் நீசமடைந்தும் சஞ்சரிக்கின்றன.

 இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். 

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலம்.  பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருஷத்தின்  கால அளவு.  சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கி  மீன இராசியிலிருந்து வெளியேறும்வரை  உள்ள காலம்.  ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருப்பதால்    இங்கிலிஷ்  காலண்டரில்  ஏப்ரல்  14   தமிழ்  புது வருஷம்   அநேகமாக மாறுவதில்லை.

தமிழ் புத்தாண்டு   அன்று   அதிகாலையிலேயே   தூக்கம் விழித்து,  இந்த சித்திரை மாதம் முதல் தினத்தன்று புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும் பல மூலிகைகள் சேர்ந்த மருத்து  நீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம்.மருத்து நீரில் அனைவரும் குளியலை மேற்கொள்ள வேண்டும். 

மருத்து நீர் என்பது நமது முன்னோர்கள்  தமிழ் வருடப் பிறப்பு அன்று குளிக்க  தயாரித்தது.  இப்போது   மருத்து  நீரா??  அப்படியென்றால் ??   என்று கேட்பதால்  மருத்து நீரை தயாரிக்க தேவையான பொருட்கள்  என்ன, எப்படி  தயாரிப்பது என்று சொல்கிறேன். 

ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி,  , வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற் றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே இந்த மருத்து நீரை தயாரிக்க தெரியாதவர்கள், இப்புனித மருத்து நீரை,  சில  கோயில்களில்  தயாரிப்பார்கள்  என்றால்  கேட்டுப்  பெறலாம்.  குளிக்கும் போது தலையில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் பிறந்திருக்கும் தமிழ் வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க பெறும். மற்ற நட்சத்திரக்காரர்களும் இப்படி குளிப்பதால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி, புதிதாக பிறந்திருக்கும் புத்தாண்டில் அதிர்ஷ்டங்கள் பெருகும்.

 மஞ்சள் நிறம் என்பது வளமை, தெய்வீகம் மற்றும் நன்மையை குறிக்கும் ஒரு நிறமாக நமது கலாச்சாரத்தில் போற்றப்படுகிறது. எனவே புத்தாண்டு தினத்தில் மேற்கண்ட முறையில் குளியலை முடித்த பின்பு , மஞ்சள் நிறப் பட்டாடை அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய ஆடைகளை அணிந்து கொள்வதால் பிறக்கின்ற புத்தாண்டு உங்கள் குடும்பத்தில் வளமையை கொடுக்கும் என்பது ஐதீகம்.மஞ்சள் நிற ஆடை இல்லாவிட்டாலும் புதிய ஆடையில் ஒரு சிறு பகுதியிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விட்டு அணிந்து கொள்வது நன்மை தரும்.

பூஜையறையில் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், போன்றவற்றை வைத்து, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வ படங்களையும் தரிசித்து வணங்க வேண்டும். வயதில் மூத்தோரான தாத்தா, பாட்டி, தாய், தந்தை மற்றும் இன்ன பிற பெரியோர்களை வணங்கி, அவர்களின் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும்.

மாங்காய்  பச்சடி புது வருடத்தின் சிறப்பு அங்கம் என்பது நாம் அறிந்ததே. மாங்காயின் புளிப்போடு சேர்ந்த துவர்ப்பும், வெல்லத்தின் இனிப்பும், வேப்பம்பூவின் கசப்பும், மிளகாயின் காரமும் சேர்ந்த பச்சடி வாழ்வின் பல சுவைகளை நினைவுறுத்தும் வண்ணமாக அமைகிறது. இதனை உண்ணுவதன் மூலம் வாழ்வின் பலவிதமான நிகழ்ச்சிகளையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை புது வருட ஆரம்பத்தி லிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து. மேலும் இதோடு உவர்ப்பு சுவையும் சேரும்போது அது அறுசுவையாகி மகிழ்ச்சியளிக்கிறது. 

வருடத்தின் முதல் நாள் போலவே அனைத்து நாட்களும் அறுசுவை நிரம்ப வேண்டும் என்பதற்காகவே அறுசுவை உணவு உண்டு பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல், பெரியோரை வணங்கி ஆசி பெறுதல், பொங்கல் பொங்குதல் ஆகியன இரு மக்களிடையேயும் ஒரே மாதிரியாக கை கொள்ளப்பட்டு வருகின்றன.பௌத்த மக்களும் இந்துத் தெய்வ நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்.

எனது மனங்கனிந்த   தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...