பாரத தேசம் என்று தோள் தட்டுவோம் -- நங்கநல்லூர் J K SIVAN
அதிருக்கட்டும். ஒரு ஏழை நாட்டுக்கும் பணக்கார நாட்டுக்கும் என்ன வித்யாஸம்? அது பழையநாடு அதனால் ஏழையோ? புதிது என்பதால் பணக்கார தேசமோ? அதன் வயதை வைத்தா சொல்வது ?
பாரதநாடு பழம்பெரும் நாடு என்பதால் ஏழையா?. அமெரிக்கா இப்போது தான் சில நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்ததால் பணக்கார தேசமா? ஒருவேளை பழைய தேசம் என்பதால் பரம்பரை பணக்கார தேசமா? அப்படியென்றால் எகிப்து, கிரீஸ் இத்தாலி எல்லாம் ரொம்ப பழசாச்சே. கோடீஸ்வர தேசமோ? இல்லையே. புதுசு என்பதால் பணக்கார நாடோ? அப்படியென்றால் நியூசீலாந்து, ஆஸ்திரேலியா, கனடா எல்லாம் கோடீஸ்வர தேசங்களோ? ஆகவே வயசு முக்கியமில்லை.
இயற்கை வளங்களை வைத்து ஒரு நாடு பணக்கார தேசம் எனலாமா?
ஜப்பான் பாவம் சின்ன சின்ன தீவுகள் தானே. இருப்பதில் மலைகள் வேறு ஜாஸ்தி. எரிமலைகள் வேறு. விவசாயத்துக்கு பொருத்தமில்லை என்றாலும் உலகில் மிக பெரிய பணக்கார நாடு. எங்கிருந்தெல்லாமோ பொருள்களை இறக்குமதி செய்து அதை முடிவில் விற்பனைப் பொருளாக்கி ஏற்றுமதி பணம் சம்பாதிக்கிறதே.
இதோ ஸ்விட்சர்லாந்து . கோகோ விளையாத நாடு. ஆனால் உலகிலேயே சிறந்த சாக்லேட்கள் அங்கிருந்து தான் கிடைக்கிறது. பணக்கார நாடு. எல்லோருடைய பணத்தையும் சேமித்து வைத்திருக்கும் நாடு. கால் நடைகளை பராமரித்து கொஞ்சம் விவசாயம் செய்து உலகில் சிறந்த பால் சம்பந்தப்பட்ட பொருள்களை விற்கிறது. எல்லோர் நம்பிக்கையையும் கொண்ட தேசம். இல்லாவிட்டால் பணத்தை கொண்டு போடுவார் களா அங்கே?
பணக்கார ஏழை நாடுகளில் உள்ள புத்திசாலிகள் ஒரே மாதிரி தானே இருக்கிறார்கள், கருப்பு வெள்ளை நிறம் மூளையில் வித்யாசமாக காட்டவில்லையே.
ஒரு நாட்டில் உதவாக்கரைகள் என்று பட்டம் சூட்டப்பட்டவர்கள் வேறு எங்கோ சென்று பொருள் ஈட்டி நல்ல பெயர் பெறுகிறார்கள். கோபு இங்கே ஏதோ ஒரு கம்பெனியில் சிங்கி அடிச்சவன் அமெரிக்காவிலே போய் பட்டையை கிளப்பி கொழிக்கிறான் என்கிறோம்... எங்கே வித்யாசம் இருக்கிறது? அப்படி வா வழிக்கு.
ஒரு நாடு ஏழையா பணக்கார தேசமா என்பதற்கு மேலே சொன்னது காரணங்கள் இல்லை.
அந்த தேசத்து மக்கள் , அவர்களின்
1.கல்வித்தரம். 2 பண்பாடு 3. நம்பிக்கையான உழைப்பு. 4. பொறுப்பு. 4. சட்டத்தை மதித்து ஒழுக்கமான நடவடிக்கை. 5. உழைக்க விருப்பம். 6. சிக்கனம். சேமிப்பு 7. எதையாவது பிரயோஜனமாக செய்யவேண்டும் என்ற உந்துதல் 9. நேரத்தை வீணாக்காமல் குறித்த வேளையில் செயல்படுவது. சுறுசுறுப்பு
இந்தியா ஏழை நாடு என்றால் என்ன அர்த்தம்? அநேக இந்தியர்கள் இன்னும் உழைப்பின் ரஹஸ்யத்தை, மேன்மையை உணரவில்லை என்று பொருள்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. உயரவேண்டும், வளரவேண்டும், என்பது தனிமனித வாழ்க்கை அல்ல, நமது தேசம் என்ற குறிக்கோள் மனதில் இன்னும் இடம் பெறவில் லை...மற்றவர் உழைப்பில் வாழும் சுகம் மனதை விட்டு போகவேண்டும். தவறுகள் தெரிந்து செய்யப்படுகிறது. சகல வளமும் பெற்ற உலகில் அதிக மனித சக்தி கொண்ட ஒரு தேசமாக இருந்தும் முதல் நிலை வகிக்க தவறுகிறோம்.
இந்தியனே, விழித்துக்கொள், எழுந்திரு, செயல்படு. உனது நாட்டை உன்னதமான இந்த தேசத்தை அதற்கே உரிமையான உயர்ந்த இடத்தில் கொண்டு சேர். அது உன் கடமை. ரத்தத்தில் உள்ள உணர்வு. புரிந்து செயல்படு . நீ வணங்கும் தெய்வம் உனக்கு துணை நிற்கும்.
No comments:
Post a Comment