Friday, April 16, 2021

BAGAVAN RAMANA TALKS

 


ஆத்மா  பற்றி   ரமணர். --   நங்கநல்லூர்   J  K  SIVAN 


இந்த உலகத்தில் எல்லோரையும்  ஆட்டிப்படைப்பது   அகந்தை எனும்  அஹம்பாவம் . நான் எனது என்ற நினைப்பு.   அடையார் தியாஸாஃபிகல் சொசைட்டி  தலைவர்  ஜீனராஜ தாஸா வின் மனைவி  ஒருநாள்   இது எதனால் இப்படி ஆட்டிப்படைக்கிறது என்ற காரணத்தை அறிய  முற்பட்டார்.  இதனால்  தான்  உலகத்தில் நாடுகளிடையே, குடும்பங்களிடையில், தனி  நபர்களிடையே  பிளவு,  வேற்றுமையும்  வளர்கிறது,  ஏற்படுகிறது. எதனால் இது உண்டாகிறது?   என்று  அறிந்துகொள்ள  பகவான் ரமண மகரிஷியிடம் சென்றார்.

அவர்களுக்குள் நடந்த சம்பாஷணை இது: 


'ஸ்வாமி, அஹம்பாவத்திற்கும்  ஆத்மாவுக்கும் என்ன  வித்யாசம்?''

 ''எதெல்லாம்  வந்து போகிறதோ,  எது  உண்டாகி,  வளர்ந்து அஸ்தமனமாகிறதோ,  எது  பிறந்து மறைகிறதோ  அது தான்  அகம்பாவம்.  எது மாறாத  ஸ்திதியில் உள்ளதோ இது போன்ற குணங்கள் அற்றதோ அதுவே ஆத்மா''. 

''ஸ்வாமி ,  கடவுள் எரியும்  தீ, நாமெல்லாம் தீப்பொறிகள் என்று சொல்லலாமா? 

தீப்பொறிகள்  தீயிலிருந்து  வெளிப்பட்டு,  வெளியே  விழுந்து மறைவன , நாம்  கடவுளை விட்டு எப்போதும் 
 விலகாதவர்கள்''.

''நம்மைத்  தவிர  கடவுள் என்ற சக்தி உள்ளதா?  இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் ஒருவர் இருக்கவேண்டுமே?

''நாம் என்று சொல்லும்போது  உனது தேகத்தை சொல்கிறாயா, அப்படியென்றால் அதை ஸ்ரிஷ்டித்தவன் உண்டு,  நாம்  என்று நீ சொல்வது ஆத்மாவானால், அதை படைத்தவன் என்று ஒருவன் வேறு யாருமில்லை;
 இந்த பிரபஞ்சத்தை   ஒரு வஸ்துவாக  எண்ணி  பார்த்தாயானால், உன்னைத்தவிர  அதில் மற்ற எவ்வளவோ வஸ்துக்களைக்  காணமுடியும்.  படைத்தவன் ஒருவன் இருக்கிறான்  என்று  தோன்றும்.  தேகம், கடவுள்  இந்த உலகம்  எல்லாமே   தோன்றி  ஆத்மாவில்   மறைவதாக  காண்பாய்.   கடவுளை  ஆத்மாவிலிருந்து வேறு  பட்டவனாக கண்டால்,    அவன்  தனித்துவமாக வெளியில் எங்கும் இயங்குபவனாக இல்லாமல், காணாமல், எங்கும்  இல்லாதவனாக உணர்வாய்.''

''ஸ்வாமி,  அப்படியென்றால் ஒருவன்  இந்த  அகம்பாவ ஆத்மாவின்  செயல்பாடுகளிலிருந்து  அதை  உயர்த்தி   உண்மையான ஆத்மாவில் நிலை  நாட்ட வேண்டும் அல்லவா"

''அகம்பாவ ஆத்மா  என்று  ஒன்று இல்லையே அம்மா ''

'' இல்லாத ஒன்று  ஏன் சுவாமி, அவ்வளவு தொந்தரவு கொடுக்கிறது?  மக்களிடமும்,நாடுகளிடையேயும்  நீ  உயர்ந்தவனா நானா  என்றெல்லாம்   எண்ணவைத்து அழிவை உண்டாக்குகிறதே. ''.

'' யாருக்கு  அம்மா நீ சொல்லும் துன்பம் எல்லாம்?   எல்லாம் வெறும் கற்பனை தான். இன்பம் துன்பம் எல்லாமே  அகம்பாவத்தால் விளையும் இல்லாத  சுய கற்பனையே.. அகந்தை எதனால்,  ஏன்,  எப்படி,  என்று  மனதிற்குள் ஆராய்ந்தால்  அகந்தை எனும் அகம்பாவம் காணாமல் போகும்.  இன்பம் துன்பம் எனும்  மாயை விலகும். எல்லாவற்றுற்கும் ஆதாரமான  ஆத்மா  புரியும்.   சத்தியத்தை  அறிந்துகொண்டால் அங்கே  அகந்தையோ அஞ்ஞானமோ  தலை காட்டாது.  

''ஸ்வாமி , எப்படி  இந்த  அகந்தை உருவாகிறது?'  என்று கேட்கிறார்   ஜீன ராஜதாஸாவின் மனைவி.

''அகந்தை என்பதே  இல்லாத ஒரு விஷயம்.  இது இருந்தால்  இரு மனிதர்களாக நாம் செயல்படுவோம். அகந்தை கொண்டவன் ஒருவன்.  ஆத்மன்  ஒருவன் என்று.    நாம்  ஒரே ஒரு ,   கண்ணுக்கு புலப்படாத  முழுசாக இருக்கிறோம்.  உனக்குள்ளே  ஆத்ம விசாரம் பண்ணிக்கொண்டே  இருந்தால்  நாம் இருப்பதாக நினைக்கும்  அகந்தையோ அஞ்ஞானமோ உண்மையில் இல்லை என்று புலப்படும். 

''மனதை ஏன்  நாம் ஒருமைப்படுத்த வேண்டும்?''

இதோ பார் அம்மா .  மனதை கஷ்டப்பட்டு  ஒருமைப்படுத்தி  கடினமாக மனதை  செலுத்துவதோ, தியானமோ,  ஆன்மீக  செயல்பாடுகளோ ஆத்மாவை அறிந்துகொள்ள  செய்யவேண்டும் என்கிற கட்டாயமோ அவசியமோ  இல்லை.  ஏனென்றால் இப்படி கஷ்டப்பட்டு எதை தேடுகிறோமோ  அந்த ஆத்மா  எப்போதும் நிலையாக நம்முள் இருக்கிறது.  அறியாமை, அஞ்ஞானம், அதை மறைக்கிறது.  நாம்  இந்த தேகத்தோடு இருக்கிறோம் என்று அறிய கண்ணாடி அவசியமில்லை.  நாம்  இருக்கிறோம்  என்பதே  புரிதல்.  ஏதோ ஒன்று இயக்குகிறது என்று அறிவதே  அறியாமையை  போக்குகிறது.  

''பின்  எதற்காக மனிதன் துன்பத்தை அனுபவிக்கிறான்?''

'' அவன் தன்னை  யார் என்று புரிந்து கொள்ளாததால்,  தன்னை அறியாமையால் அகந்தைக்குட்படுத்திக் கொள்வதால் துன்பங்கள் அவனைத் தேடி வருகிறது. உண்மையில் அதுவல்ல அவன். 

 ''நான்   கோபாலசாமி,  குப்பனின் மகன்''  என்று  சொல்லும் வரை அவனை துன்பங்கள் விடாது.  உண்மையில் அவன்  ஆத்மா.   நாம ரூப பேதங்கள், குணங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று புரிந்துகொள்ள  தவறியவன்.

கனவு காணாமல் அவன்  அசந்து தூங்கும்போது  இந்த குணங்கள் எங்கே போயிற்று?  அவன் உருவம், பெயர், காணும் காட்சிகள்  எங்கே போயிற்று?  உடம்பு தெரிந்ததா அப்போது?   அவன் இருக்கிறான்,    ஆனால்  அது அவன் நினைக்கும்  ''அவன் '' இல்லை  என்று அறிகிறானா?  உடலற்ற ஏதோ ஒன்று என்று அறிகிறானா?

''நீ   அதுவாக இருக்கிறாய் ''   '' தத்  த்வம் அஸி ''   என்று  அறிந்தவன்,  ஞானி  கூறுகிறான்.   இது தான் முழு உண்மை.  அசையாமல்  ஆத்மாவை எண்ணிக்கொண்டு  இரு.  நானே  அந்த  கடவுள்,  எனும் ஆத்மா, என்ற நினைவில்   திளைப்பது தான் தியானம்.  அதுவாகவே ஆகிவிடுவது அப்போது புரியும்.  
.
” அசையாமல்  '' என்றால்  என்ன?


''எண்ண  ஓட்டங்கள் இல்லாமல்.  அது ஒன்றே  உருவங்கள்,  வண்ணங்கள், குணங்கள், காலம், நேரம்,  இடம்  எல்லாவற்றையும்  உருவாக்கி காட்டும் வித்தையை செய்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...