மரியாதை ராமன் கதைகள். 1 - நங்கநல்லூர் J K SIVAN --
வாசலில் சாணத்தால் மெழுகிய உலர்ந்த, பெருக்கிய மழ மழ
தரையில் மகிழ மரத்தடியில் உட்காருவோம். ஆவலாக அத்தை வரவை எதிர்ப்பார்த்து காத்திருப்போம். அத்தையை பற்றி ஒரே ஒரு வார்த்தை. தலையிலிருந்து கால் வரை அவளுக்கு கதைகள் தெரியும். பள்ளிக்கூடம் பார்க்காத அந்த அத்தையின் ஞாபக சக்தி அபாரம். நன்றாக ராகங்கள் பாடுவாள். எல்லா புராணங்கள் ஸ்தோத்திரங்கள் நெட்டுரு. அவளுடைய இன்னொரு அதீத சக்தி, தெரிந்த கதைகளோடு தானாகவே கற்பனை யிலும் கதைகள் வடிவமைத்து எங்களுக்கு ஸ்வாரஸ்யமாக நிறைய சொல்லுவாள். அவளிடம் தான் நான் முதல் முதலாக மரியாதை ராமன் கதைகள் கேட்டேன்.
யார் இந்த மரியாதை ராமன். தெனாலி ராமனா ? தெனாலி ராமன் விதூஷகன், காமெடியன். கெட்டிக்காரன். இந்த மரியாதை ராமன், நிஜ ராமன் மாதிரி நேர்மையானவன்,புத்திசாலி, ஒரு ஜட்ஜ் என்று கூட சொல்லலாம். நிறைய அதிசய தீர்ப்புகள் கூறியவன். ஒரு கதை மாடலுக்கு கொடுக்கிறேன்.
+++
நான்கு திருடர்கள் ஒரு வீட்டிலோ பல வீட்டிலோ நிறைய பொன் ஆபரணங்கள் பணம் திருடினார்கள்.
ஒரு பெரிய தவலையில் அத்தனை நகையும் நிரப்பி வைத்தார்கள்.எங்கே அதை பத்திரமாக வைப்பது?நாலு பேரும் நாலு வித ஐடியா கொடுத்தார்கள். ஒருத்தன் மேல் இன்னொரு வனுக்கு நம்பிக்கை இல்லை.
டேய் நமக்கு சாப்பாடு போடும் கிழவி வீட்டில் நால்வரில் ஒருவன், "நாம் வழக்கமாகச் சாப்பிட் டுக் கொண்டிருக்கிறோமே ஒரு கிழவி வீட்டில் அவளிடம் கொடுத்து வைப்போம். நல்ல கிழவி. பத்திரமாக கேக்கும்போது தருவாள். நாலு பேரும் சேர்ந்து போய் கேட்டால் மட்டுமே தவலையை கொடுக்கவேண்டும் என்று சொல்வோம். இது முடிவாகி அவர்கள் நால்வரும் பாட்டியிடம் சென்று
"பாட்டி, நாங்கள் நால்வரும் பல நாட்களாக உழைத்துப் பாடுபட்டுக் கொஞ்சம் பொருள் சேர்த்திருக்கிறோம். அதை இந்தத் தோண்டியில் போட்டு வைத்திருக்கிறோம். இன்னும் சிறிது காலம் இந்த ஊரில் தங்கைவிட்டு வேறே ஊர் போவோம். அதுவரை இந்தக் குடத்தை ஜாக்கிரதையாக வைத்திரு. நாங்கள் நாலு பெரும் சேர்ந்து வந்து கேட்டால் தான் கொடுக்க வேண்டும். இதிலுள்ளது நாலுபேருக்கும் சொந்தமானது'' என்றார்கள். பாட்டி தவலையை வாங்கி வைத்துக் கொண்டாள் .
ஒரு நாள் பாட்டி வீட்டில் நால்வரும் சாப்பிட்டு விட்டுச் சற்று தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.
ஒரு மாதம் ஆகிவிட்டது ஒருநாள் அவர்கள் வழியில் ஒரு மோர் விற்கும் பெண்ணை பார்த்ததும் ஒருவன் , "அண்ணே தாகமாக இருக்கிறது. மோர் சாப்பிடலாமா?" என்றான் .மற்றவர்கள் சரி என்றதும் ஆளுக்கு ஒரு லோட்டா மோர் வாங்கி குடித்தார்கள்.
"அண்ணே, மோர் நன்றாக இருக்கிறது. மோர்க்காரியின் அத்தனை மோரையும் நாமே வாங்கி குடிப்போம். என்றான் ஒருவன்.
"அது சரி, மொத்த மோரையும் வாங்கி இதில் வைப்பது. குடமோ, பானையோ இல்லையே.''
"ஏன் நாம் வழக்கமாகச் சாப்பிடும் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கிக்கொள்வோம் என்றதும் ஒரு திருடனிடம் ''நீ போய்ப் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வா" என்று அனுப்பினார்கள். அந்த திருடன் சாமர்த்தியக்காரன். மனதில் ஒரு சூழ்ச்சி யோடு பாட்டியிடம் போனான்.
"பாட்டி நாங்கள் உன்னிடம் கொடுத்து வைத்தோ மே, அந்தத் தோண்டியை வாங்கி வரச் சொன் னார் கள்" என்றான்.
"உன்னிடம் எப்படித் தர முடியும்? நீங்கள் நாலுபேரும் வந்து கேட்டால் தான் கொடுப்பேன். உன்னிடம் எப்படி கொடுப்பது?
"என் பேச்சில் நம்பிக்கையில்லையா பாட்டி, அதோ அந்த மரத்தடியில் தான் எங்கள் நண்பர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நீ வேண்டுமானால் கொஞ்சம் வெளியே வா. அவர்களையே சொல்லச் சொல்கிறேன்." என்றான் அந்தத் திருடன்.
பாட்டி குடிசைக்கு வெளியே வந்தாள்.
திருடன் மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் மூன்று திருடர்களைப் பார்த்து,
"பாட்டி தரமாட்டேனென் கிறாள் "நீங்கள் தரச்சொல்லுங்கள் என்று உரக்கக் கத்தினான்.
மரத்தடியில் உட்கார்ந்திருந்த மூவரும் "அவனிடம் கொடுத்தனுப்பு பாட்டி" என்றார்கள்.
"தவலையையா?" என்று கேட்டாள் பாட்டி. .
"ஆமாம் பாட்டி தோண்டிதான். சீக்கிரம் கொடுத்தனுப்பு" என்று மூவரும் பாட்டிக்குக் கேட்கும்ப டியாகக் கத்தினார்கள்.
பாட்டி உள்ளே சென்று பொன்னும் பொருளும் அடங்கிய தோண்டியைக் கொண்டு வந்து அந்த பலே திருடனிடம் கொடுத்தாள். அவன் தவலையோடு ஒரு க்ஷணத்தில் காணாமல் போய்விட்டான்.
நேரமாகிவிட்டதே.எங்கே மோருக்கு காலி தவலை பாட்டியிடம் வாங்கி வரப் போனவனை இன்னும் காணோம்? மூன்று பெரும் பாட்டி வீட்டுக்கு வந்தார்கள்.
"பாட்டி எங்கே உன்னிடம் தோண்டி வாங்கிவர நாங்கள் அனுப்பினவன் ? "அவன் அப்போதே தோண்டியை வாங்கிக் கொண்டு போய் விட்டானே!" என்றாள் பாட்டி.
"எந்தத் தோண்டி?" என்றான் மூவரில் ஒருவன்.
"ஏன்? நீங்கள் என்னிடம்
கொடுத்து வைத்த தோண்டியைத்தான் வாங்கிக் கொண்டு போனான்"
கொடுத்து வைத்த தோண்டியைத்தான் வாங்கிக் கொண்டு போனான்"
''என்ன உளறுகிறாய் பாட்டி, அதெப்படி நீ அவனிடம் நாங்கள் ஜாக்கிரதையாக வைத்துக்கொள் நாங்கள் நால்வரும் வந்து கேட்டபோது கொடு என்று சொல்லியும் அந்த தோண்டியைக் கொடுக்கலாம்? எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாயே! நீ தான் எங்கள் நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும்"
''நீங்கள் தான் மறதியில் உளருகிறீர்கள். நீங்கள் தானே அவனிடம் தோண்டியை கொடுக்கச் சொன்னது?
நீங்கள் மூவரும் அவனை அனுப்பி அவனிடம் கொடுக்கலாம் என்று சொன்னதால் தானே கொடுத்தேன். என் மேல் என்ன தப்பு?
ஒரே கூச்சல். பாட்டியும் ஓலமிட்டாள். விஷயம் ராஜாவிடம் சென்றது. வழக்கைக் கேட்ட ராஜா,
"பாட்டி மேல் தான் தப்பு. ஒப்புக்கொண்டதற்கு மாறாக ஒருவனிடம் மட்டும் தோண்டியைக் கொடுத்ததால், அவள் தான் ஜவாப்தாரி.'' என்று தீர்ப்பு..
வழிநெடுக ஒப்பாரி வைத்து அழுதபடி பாட்டி நடந்தாள் . வழியில் மரியாதை இராமன் அவளைப்பார்த்து விஷயம் அறிகிறான்.
"பாட்டி இது என்ன அநியாயமான தீர்ப்பு, இது சரியில்லை ''என்று அவன் சொன்னதைக் கேட்ட அரசாங்க ஒற்றர்கள் மூலம் ராஜாவுக்கு சேதி சென்றது. மரியாதை ராமனை ராஜாவுக் கெதிரில் நிறுத்தினார்கள்.
''யாரடா நீ என் தீர்ப்பை தப்பு என்றவன்?'' எப்படி சொன்னாய் தப்பு என்று?அவளால் ஏற்பட்ட தவறுக்கு அவள் தான் நஷ்ட ஈடு தரவேண்டும் இதில் என்ன தப்பு?
"மஹாராஜா, ஒப்பந்தப்படி, நாலு பேரும் ஒன்றா க வந்து கேட்டால் தானே பாட்டி அவர்கள் கொடுத்த தோண்டியைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால் இப்பொழுது மூன்று பேர் தானே வந்து தோண்டியைக் கேட்கிறார்கள். இவர்கள் மூவரும் போய் அந்த நாலாவது ஆசாமியையும் தம்முடன் கூட்டிக் கொண்டு வந்து கேட்டால் அந்த தோண்டியை கொடுப்பாள். அவள் மேல் எந்த தப்பும் இல்லையே?'
'என்றான்.
ராஜா அசந்து போனான்? இவ்வளவு கெட்டிக்கா ரனை விடக்கூடாது என்று மரியாதை ராமனை ராஜாங்க நீதிபதியாக்கினது ஒருபக்கம் இருக்கட்டும். அந்த மூன்று திருடர்களும் நாலாவது திருடனை இன்னும் அல்லவோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment