பேசும் தெய்வம் J K SIVAN
ஆசார்யாளும் அரியக்குடியும். 5
தேவகோட்டையில் அந்த பழைய சிறிய வீட்டின் பின்புறம் இவ்வளவு கூட்டமா? எவ்வளவு நிசப்தம். பெரியவா அந்த குறுகிய அறையில் உள்ளே இருக்கிறார். ஜன்னல் வழியாக பேசுகிறார். வெளியே அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் கைகட்டி அமர்ந்திருக்கிறார். அந்த இடத்தில் தான் அவ்வளவு கூட்டமும். பெரியவா தைல தாரை போல முத்துஸ்வாமி தீக்ஷிதரின் வாழ்க்கையைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். கையில் எந்த குறிப்பும் இல்லை. எல்லாம் மனசிலே எப்போதும் இருக்கும் ஒரே மஹான்.
''அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்றேன். ஒரு தீபாவளி நாளில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் தேகவியோகம் அடைந்தார். தீபாவளிக்கு ஆறாவது நாள் தான் ஸ்கந்த சஷ்டி இல்லையா?. முருக பக்தர்கள் தீபாவளி அன்னிலேருந்தே, அடுத்த ஆறுநாளும் உபவாசம் இருப்பா. என்ன ஆச்சர்யம் பாருங்கோ! முத்துஸ்வாமி தீக்ஷிதர் வாழ்க்கையில் அவர் மரணமும் கூட சுப்ரமண்யன் சம்பந்தப்பட்டிருக்கு.
தீக்ஷிதரைப் பொறுத்தவரை, ஒவ்வொரு க்ஷேத்ரமா போவார்னு சொன்னேனே. அங்கே எல்லாம் என்ன கோவில் இருக்கோ, விக்னேஸ்வரரோ, விஷ்ணுவோ, தேவியோ, சிவனோ, யாரா இருந்தாலும் சந்நிதிலே அமர்ந்து ஒரு க்ரிதி இயற்றி பாடிட்டு தான் வெளியே வருவார். தானாகவே அந்த க்ரிதி அங்கே உருவாகும். ஒவ்வொரு க்ரிதியிலும் எங்கே அதை இயற்றினார்னு அடையாளம் காட்டுவார். சுவாமி பேர், க்ஷேத்ரம் பேர், அங்கே உள்ள புராண சரித்ர சம்பந்தம், சுவாமி பற்றிய யந்த்ர மந்த்ர ரஹஸ்யம். எல்லாம் அதிலே கோடி காட்டுவார்.
இந்த ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே க்ரிதியிலே, அப்படி உள்ளே எந்த ரஹஸ்யமும் ஏன் தெரியலே? எங்கே இயற்றினார்? ஒருவேளை எல்லா இடத்திலேயும் இருக்கும் சுப்ரமண்யன்களை ஒருமைப் படுத்தி இதை இயற்றியிருப்பாரோ. அதனாலே தான் குறிப்பாக ஒரு க்ஷேத்ரத்தை சொல்லவில்லையோ? அது எப்படி புலப்படறது?
நிறைய நமஸ்தே சொல்லிட்டு ''மனஸிஜ கோடி கோடி லாவண்யாய '' என்று நமஸ்தே மாதிரி ரெண்டு ''கோடி'' சொல்றார். கோடியை கோடியாலே பெருக்கினா என்ன வரும்? கோடானு கோடி. மனஸிஜன் என்றால் மன்மதன். மனசிலேருந்து உண்டாகிறவன், காமன். அதாவது பேரன்பு. இதிலே ஒரு புராண கதையும் ஒட்டிண்டு இருக்கு. மஹாவிஷ்ணுவின் பிள்ளை மன்மதன். விஷ்ணு நினைத்த மாத்திரம் அவர் மனசிலே உருவானவன். மகாலட்சுமிக்கு பிறந்தவன் இல்லை. விஷ்ணுவிடமிருந்து தோன்றிய இன்னொருவன் ப்ரம்மா. பரமாத்மா நாபியில் உதித்தவன். மஹா விஷ்ணு அலகிலா விளையாட்டு டையவன் அல்லவா. இது போன்ற அதிசயங்கள் நிறைய உண்டு. மன்மதன் அழகுக்கு பேர் போனவன். ஆகவே தான் சுப்ரமண்யனை '' மனஸிஜனை விட கோடி கோடி தடவை அதிக லாவண்யம்'' உடையவன் என்கிறார் தீக்ஷிதர்.
சுப்ரமணியன் யார்? சிவனின் நேத்ர அக்னியில் பிறந்தவன். அதே நெற்றிக்கண் அக்னியால் மன்மதனை சுட்டெரித்து சாம்பலாக்கினார் . சுப்ரமணியன் ஞானத்தின் வடிவம். இன்னொருவன் காமத்தின் வடிவம். ஞானாக்நியிலிருந்து பிறந்தவன் ஒருபக்கம். அக்னியால் காமமாக இருந்து அழிந்த ஒருவன் இன்னொரு பக்கம். வடக்கே குமார் என்பார்கள். தெற்கே குமரன். குமாரன், பிள்ளை என்ற அர்த்தம். அதனால் தான் சிவனின் இன்னொரு பிள்ளையின் பெயர் பிள்ளையார்.குமார் என்பதை வடக்கே இளைய பிள்ளை என்ற அர்த்தத்தில் உபயோகிப்பார்கள். இளையவன் சுப்ரமண்யனை குமரன், குமாரசாமி என்று பாணின் தெற்கே அழைக்கிறோம். வாலமீகி ராமாயணத்தில் விஸ்வாமித்ரர் ராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும் சுப்ரமணியன் கதையை சொல்வது தான் குமார சம்பவம். காளிதாசனின் கற்பனையில் பிறந்த அற்புத சமஸ்க்ரிதம் தாண்டவமாடும் படைப்பு.
மன்மதனுக்கு இன்னொரு பெயர் மாரன். சுப்ரமணியன் பெயர் குமாரன். தீக்ஷிதர் குமாரனை மனஸிஜ கோடி கோடி லாவண்யன் என்று க்ரிதியில் சொல்கிறார். தமிழில் முருகு என்றால் அழகு, அழகனாக இருப்பவன் முருகன். மன்மதன் சாம்பலான பிறகு அவனது கரும்பு வில்லை, மலரம்புகளை அம்பாள் எடுத்துக்கொண்டு அவனது பொறுப்பை ஏற்றுக்கொள்வதால் அவளுக்கு காமேஸ்வரி என்றும் ஒரு பெயர்.நெருப்பு பொறியில் இறந்த ஒரு அழகன் அதே நெருப்பு பொறியில் இன்னொரு அதிக அழகுள்ள மகனாக பிறக்கிறான். காமமாக இருந்து அக்னியில் அழிந்து அது ஞானமாக பிறந்தவன் . அம்பாள் அழகானவள் என்பதால் அவளைப் போல் மூன்று லோகங்களிலும் அழகி இல்லை என்ற அர்த்தத்தில் திரிபுர சுந்தரி என்றும் அவளுக்கு ஒரு பெயர்.
அடுத்தது தீக்ஷிதர் இந்த பாட்டில் ''தீன சரண்யாய'' என்கிறாரே அதற்கு என்ன அர்த்தம்? அழகு மட்டும் இருத்தால் போதுமா, அருளும் பேரன்பும் கருணையும் அமோகமாக இருக்கவேண்டாமா?நமக்கு அருள் தானே வேண்டும்.? தீனர்களாகிய, துன்பத்தில் வாடும், ஏழைகள், கதியற்றவர்கள், எளியோர்கள் நாம் அவனைச் சரணடைந்து சுகம் பெற, இன்பமுற, அருள்புரிபவன். நமக்கு அடைக்கலம் தருபவன்.
சுப்ரம ''ண்யாய'' சர' 'ண்யாய'' என்று முடிவில் எதுகை மோனை போல் வருகிறதே. இதை ''அந்தியபிராஸம் '' என்பார்கள். பாடும்போது இந்த இடத்தை சொளக்க காலத்தில், விளம்ப காலத்தில் மெதுவாக, மிருதுவாக எடுக்கிறார். ராகத்தை நிரவல் செய்ய, அலச,, சௌகர்யம். தீக்ஷிதர் கிருதிகள் வித்வான்களுக்கு பாட லட்டு மாதிரி. வார்த்தைகள் கம்பீரமாக பிரயோகமாகும். பாடும்போது கேட்பவர்களுக்கு ஒரு யானை அட்டகாசமாக மெஜஸ்டிக் majestic க்காக ஊர்வலம் நடந்து வருவது போல் இருக்கும்.
அடுத்து மகா பெரியவா அரியக்குடி ராமாநுஜய்யங்காருக்கு சொல்வது போல் நமக்கெல்லாம் அடுத்த வரிகளை விளக்குகிறார்.
''பூசுராதி சமஸ்தாசன பூஜிதாப் ஜ சரணாய
வாசுகி தக்ஷாதி சர்ப்ப ஸ்வரூப தரணாய
வாசுவாதி சகலதேவ வந்திதாய, வரேண்யாய
தாச நாபீஷ்ட ப்ரதக்ஷதராக்ரகண்யாய ,,,
நாம் எல்லோருமே அவசரக் குடுக்கைகள். மனசாலும் தேகத்தாலும் தான் சொல்கிறேன். சில சமயம் இப்படி யாராவது இப்படி ஸ்லோவாக slow வாக, மெதுவாக பாடும்போது நெளிவோம். கொட்டாவி விடுவோம். இதை அறிந்து தான் தீக்ஷிதர் கடகடவென்று மெயில் வேகத்தில் அடுத்து சில அக்ஷரங்களை அமைத்திருக்கிறார். சவுக்க காலத்திலிருந்து மத்யம காலம் காலத்தில் நுழைகிறார். இனிப்பு லட்டுக்கு இடையே கருப்பாக ஆணி போல் லவங்கம் இருக்குமே அது போல. இனிப்புக்கு ருசி கூட்ட. இந்த க்ரிதியில் பல்லவியும் சரணமும் முடிகிறபோது மத்யம காலத்தில் அமைக்கிறார். தீக்ஷிதரின் வேறு சில கிருதிகளில் அனுபல்லவி, சரணம் கடைசியில் தான் மத்யம காலம் அமைந்திருக்கும். ஏன் இதில் மட்டும் இப்படி ?
No comments:
Post a Comment