பேசும் தெய்வம் J K SIVAN
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு-கும்பகோணம் பாதையில் 5 கி.மீ. தூரத்தில் அருமையான ஒரு சிறு கிராமத்தின் பெயர் ஈச்சங்குடி. காவேரிக்கு வடகரையில் உள்ளது. மிகப்பழைய வீடுகளை சிதில நிலையில் கொண்ட இந்த ஊரில் ஒரு வீடு பிரசித்தம். ஈச்சங்குடியில் அக்ரஹாரத்தில் உள்ள அந்த வீடடியில் தான் மஹா பெரியவாளின் தாயார் மஹாலக்ஷ்மி அம்மாள் பிறந்தாள். நாகேஸ்வர சாஸ்திரிகளின் புத்ரி. வேதம் அத்வைதம், உபநிஷம் எல்லாம் நன்றாக கற்று தெரிந்த 18 வயசு சுப்ரமணிய அய்யருக்கு 7வயது மஹாலக்ஷ்மி மனைவியானாள். இந்த வீட்டின் இன்னொரு முக்யத்வம், இங்கே தான் மஹா பெரியவாவின் ஒன்றுவிட்ட சகோதரன் மஹாதேவன் என்கிற பூர்வாஸ்ரம பெயர் கொண்ட காஞ்சி காமகோடி 67வது பீடாதிபதி மஹாதேவேந்த்ர சரஸ்வதியும் பிறந்த வீடு. சிகரம் வைத்தாற்போல் இன்னொரு விசேஷம் இந்த வீட்டில் தான் மஹாபெரியவாளின் இளைய சகோதரர் சதாசிவன் என்கிற பூர்வாஸ்ரமம் கொண்ட சிவன் ஸார் பிறந்த வீடும் கூட. அவர் எழுதிய ''ஏணிப்படிகளில் மாந்தர்கள்'' அவசியம் படிக்கவேண்டிய ஒரு நூல்.
சுப்ரமணிய ஐயர் மஹாலக்ஷ்மி அம்மாளின் ரெண்டாவது பிள்ளை தான் சுவாமிமலை முருகனை வேண்டி வைத்த பெயர் ஸ்வாமிநாதன். சரியான பெயர். பன்னிரண்டு வயசில் ஸ்வாமிநாதன் சன்யாசியாகி ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி எனும் 68 வது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகதகுரு ஆனார். தந்தைக்கு உபதேசம் செய்தவன் பெயரை ஜகத்துக்கெல்லாம் உபதேசம் செய்யப் போகிறவருக்கு வைத்தது எவ்வளவு பொருத்தம்.
1932ல் ஜூன் 14 அன்று ஆந்திராவில் நகரி என்னும் ஊரில் மஹா பெரியவா முகாமிட்டிருந்தபோது தான் தாயார் மஹா லட்சுமி அம்மாள் காலமான செய்தி வந்தது. தாய்க்கு ஸ்நானம் செய்து விட்டு பிராமணர் களுக்கு தானம் வழங்கினார். அதோடு அந்த சந்நியாசி தன்னைப் பெற்ற தாய்க்கு ஒரு சந்நியாசியின் கடமையை முடித்தார். அப்போது தான் அவர் மனதில் ஒரு எண்ணம் உதயமாயிற்று. தனது தாய் பிறந்த பழைய வீட்டை ஈச்சங்குடியில் ஒரு வேத பாடசாலையாக்கினால் என்ன? வேத சப்தம் ஒலிக்கட்டுமே . இந்த எண்ணம் பூர்த்தியாக பல வருஷம் ஆகியது. எண்ணம் எப்போது செயலாகியது?
1993ல் ஒருமுறை பெங்களூர் ஹரி என்ற பக்தர் தரிசனத்துக்கு வந்தபோது மகா பெரியவா " நீ ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலை புனருத்தாரணம் பண்ணப் போறியா?
''பெரியவா அனுகிரஹத்தோடு அப்படி ஒரு எண்ணம் இருக்கு ''
''ரொம்ப சந்தோஷம். நிச்சயம் அது பூர்த்தியாகும். அங்கே தான் நான் சின்ன வயசிலே அம்பாளை காருண்யாவல்லியா , கச்சபுரீஸ்வரரோடு நிறைய தரிசனம் பண்ணி இருக்கேன். வேதம் எல்லாம் கத்துண்டேன். ஞாபகம் இருக்கு '' என்று மஹா பெரியவா சிரித்தார்.
''சீக்கிரமே ஆரம்பிக்க ஏற்பாடு பண்றேன். எல்லாம் பெரியவா ஆசீர்வாதம் அனுக்கிரஹம்''
''நான் உன்னை ஒண்ணு கேட்கட்டுமா. எனக்கு உபகாரம் பண்ணுவியா?''
''மஹா பெரியவா ஆக்ஞா எதுவா இருந்தாலும் அதை நிறைவேற்றுவேன் பெரியவா''
''ஸ்ரீ காருண்யவல்லி சமேத கச்சபுரீஸ்வரர் அனுக்கிரஹம் உனக்கு கிடைக்கட்டும். நான் என் பூர்வாஸ்ரம தாயார் பிறந்து வளர்ந்த ஒரு பழைய வீடு ஈச்சங்குடியிலே இருக்கே உனக்கு தெரியுமா? அதை குழந்தைகளுக்கு வேதம் காத்துக்கொடுக்கிற பாடசாலையா புனருத்தாரணம் பண்ணனும் னு மனசிலே வெகுகாலமா ஒரு எண்ணம். அங்கே வேதம் என்னிக்கும் ஒலிக்கணும். நாலு பேருக்கு ஊரிலே உபயோகமான இடமாக அதை மாத்தணும்''
ஹரி உணர்ச்சி வாசத்தோடு கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய ''மஹா பெரியவா, இது எனக்கு கிடைச்ச பெரிய பாக்கியம்! என் பூர்வ ஜென்ம புண்யம். உடனே அதற்கு செயல்படறேன்''
இத்தனை வருஷம் எவரிடமும் சொல்லாத மனதில் தேக்கி வைத்திருந்த ஒரு எண்ணத்தை மஹா பெரியவா சொன்னதற்கு காரணம் இருந்திருக்கிறது. அந்த பழைய வீட்டை அப்போதைய உரிமையாளரிடம் பேசி வாங்கவேண்டும், இடித்து பாடசாலை கட்ட ஒரு வருஷமாக ஆகும். தனது வாழ்நாளில் அங்கே வேத பாடசாலை நிறுவிய சேதி காதில் விழவேண்டும் என்பதற்காக காத்திருந்தார்.
அந்த பழைய வீடு உரிமையாளரிடமிருந்து விலை பேசி வாங்கப்பட்டு பக்தர்களின் ஒத்துழைப்போடு விரைவில் பாடசாலையாகியது.
1994 ஜனவரி 8 உலகம் மஹா சோகத்தில் ஆழப்போகிறது என்று அந்த காலை வேளை ஒருவருக்கும் தெரியாது. உடல் நலம் ஒத்துழைக்காததால் பக்தர்களுக்கு தரிசனம் தர இயலவில்லை. தியானத்தில் ஈடுபட்டார். அருகே இருந்தவர் உரக்க காதில் சொன்னார்:
''பெரியவா பெங்களூர் ஹரி தரிசனம் பண்ண வந்திருக்கார்''
'' யாரு பெங்களூர் ஹரியா? எங்கிருந்து?
''ஈச்சங்குடியிலிருந்து , பெரியவாளுடைய அப்பா அம்மா படம், பாதுகை கொண்டு வந்திருக்கார்''
''அழைச்சுண்டு வா''
வெள்ளிப் பாதுகைகளை காலில் மெதுவாக அணிந்துகொண்டார். ஹரிக்கு ஆசீர்வாதம் பண்ணினார்.
''பெரியவா உங்க அனுகிரஹத்தோடு ஈச்சங்குடியிலே அந்த இல்லத்தில் பாடசாலையை ஆரம்பிக்க நாள் குறிச்சாச்சு. பத்திரிகை வெளியிடணும் . பெரியவா கையாலே தொட்டு ஆசிர்வாதத்தோடு ஆரம்பிக்கணும்
புன்னகையோடு பெரியவா அந்த பாடசாலை ஆரம்ப விழா பத்திரிகையை வாங்கிப் படித்தவர்,
தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை ஹரியிடம் கொடுத்தார்.
"இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!' என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.
ஹரி தான் கடைசியாக இந்த உலகத்தில் மஹா பெரியவாளுடன் பேசி அவர் ஆசிபெற்ற பக்தர். என்ன பாக்யம். இதெல்லாம் நடந்த ரெண்டு மூணு மணி நேரத்தில் மஹா பெரியவா சித்தி அடைந்துவிட்டார்.
No comments:
Post a Comment