Saturday, October 17, 2020

veerapandiya kattabomman


  வெள்ளையனே  வெளியேறு. J K SIVAN



அக்டோபர்  16, நேற்று  மனசு கொஞ்சம் லேசாக வலித்தது.  ஒரு பழைய  சம்பவம் நினைவில் வந்தது.
இந்திய தேசம் சுதந்திரமாக  செயல்படவேண்டும். அந்நியன் தலையீடு அவன் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்று எண்ணியவர்கள்  காந்தியடிகள் மற்றும் அவரோடு சிலர் என்று நினைத்துவிட வேண்டாம். இந்த நாட்டின்  சுதந்திரத்துக்கு உயிரை விட்டவர்கள்  பலரை நாம்  நினைத்து பார்ப்பதேயில்லை.  அப்படி ஒருவர்  தான் வீர பாண்டிய கட்டபொம்மன்.    வெறுமே சிவாஜி நடிப்புக்காக   ''இஞ்ஜி  அரைத்தாயா,  மஞ்சள் அரைத்தாயா''  டயலாக் க்குக்காக இல்லை.  வீர வசனம் மட்டும் கட்டபொம்மன் சரித்திரம் இல்லை.  ஒரு  ரத்தக்கறை படிந்த ஒரு சரித்திரம் இருக்கிறது. கொஞ்சம் சொல்கிறேன் 

கட்டபொம்மன் மஹா வீரன். அத்தனை பாளய பட்டுகளும் கதி கலங்கும் அவன் பேரைக் கேட்டாலே. மஹா வீரன். பயம் பத்து மைல் தூரம் கிட்டே நெருங்காதவன். அவனது மீசையை இடது கை விரல்கள் முறுக்கிக்கொண்டு இருந்தால் அவன் சிந்தனை எப்படி இந்த வெள்ளை காரனின் ஊடுருவலை தடுத்து நிறுத்துவது என்பதில் இருப்பதாக அர்த்தம். 
திருச்செந்தூர் முருகன் அவனுக்கு இஷ்ட தெய்வம்.அவன் பெயரே ''வீர'' பாண்டிய கட்டபொம்மன். திருச்செந்தூர் ஷண்முகனும் ஜக்கம்மாவும் இரு கண்கள். அவன் இருந்ததோ திருநெல்வேலியில் எங்கோ ஒரு பாளையப் பட்டில், . பாஞ்சாலங் குறிச்சியில். ஆனால் மனம் செந்தூரானின் மீது. நினைத்தபோது குதிரை மேல் ஏறி பறந்துவிடுவான் முருகனை தரிசிக்க.
சாப்பிட கூப்பிட்டால் ''  செந்தூரில் முருகன் பூஜை முடிந்ததா, நிவேதனம் ஆகி விட்டதா அவனுக்கு என்று கேட்டுவிட்டு  அப்புறம் தான் இலையின் முன் அமர்வான். திருச்செந்தூரில் மத்யான  நிவேதனம் ஆனதை பாஞ்சாலங்குறிச்சியில் எப்படி தெரிந்து கொள்வது? மந்திரி சொன்ன யோசனை பிடித்தது:

''அரசே திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை ஆங்காங்கே சில கல் மண்டபங்கள் கட்டி அதில் வெண்கல மணி கட்டி தொங்கவிடுவோம். ஒவ்வொரு மண்டபத்திலும் ரெண்டு ஆட்கள். திருச்செந்தூரில் உச்சி கால பூஜை முடிந்து நிவேதனம் ஆனவுடன் மணி அடித்தால் அருகில் இருக்கும் மண்டபம் அதை கேட்கும். அது மணி அடிப்பதை அதற்கடுத்த மண்டபம் கேட்கும். இப்படி சில நிமிஷங்களில் பாஞ்சாலங் குறிச்சி கோட்டை மண்டபம் மணி அடிக்கும் நீங்கள் போஜனம் செய்ய ஆரம்பிக்கலாம்.திருச்செந்
தூரில் உச்சிகால பூஜை நடந்து முடிந்தவுடனே திருச்செந்தூர் கோயில் ஆலய கோபுர மணி ஒலிக்கத் தொடங்குவது வழக்கம். இத்தகைய மண்டபங்கள் ஆறுமுகநேரி, ஆத்தூர், ஒட்டபிடாரம், பாஞ்சாலங்குறிச்சி உள்பட பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தது. இந்த மண்டபங்களில் சில இன்றும் இருக்கிறது.

கட்டபொம்மன் என்றால் சிவாஜி கணேசன் முகம் தான் நினைவுக்கு வருகிறது. கனல் தெறிக்கும் கண்கள். முறுக்கு மீசை. கடித்த பற்கள். பரந்த நெற்றியில் திருநீற்று பட்டை. ஆமாம் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்போதும் அணிந்தது  திருச்செந்தூர் முருகன் இலைத் திருநீறு. ஒவ்வொரு திங்கட்கிழமையும் குதிரை வீரர்கள் செந்தூர் முருகன் கோவிலிலிருந்து அபிஷேக விபூதி பெற்று அவனுக்கு கொண்டு வந்து தருவார்கள். ஆவலாக காத்திருப்பார்.

விபூதி கையில் கிடைத்தபிறகே அன்றாட பணிகளை கட்டபொம்மன் துவங்குவார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரத்தின் ஏழாவது நிலையில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கிறதே அதை அங்கே நிறுவியது கட்டபொம்மன். இது தான் முதல் வெண்கல மணி. இதன் ஓசையிலிருந்து தான் அடுத்து அடுத்து பல மண்டபங்கள் மணியோசையை பாஞ்சாலங் குறிச்சிக்கு அனுப்பின. வெகுகாலமாக ஒலிக்காம லிருந்த இந்த மணியை, ஒரு கோயில் கும்பாபி ஷேகம் நடந்தபோது மீண்டும் ஒலிக்கச் செய்து இப்போது உச்சிகால பூஜையில் ''டாண் டாண் '.
மஹாநுபாவன் கட்டபொம்மன் முருகன் மேல் கொண்ட சிறந்த பக்தியால்,தனது நெற்களஞ்சி யங்களிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயி லுக்கு அன்னதானம் அளிக்க பல ஆயிரம் கோட்டை நெல்லை விடாமல் அனுப்பியவன்.

'' எல்லோரும் உங்க வயக்காட்டிலிருந்து நெல்லைக் காவடியாகச் சுமந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் போக உதவி வேண்டு மானால் என் வீரர்கள் உதவுவார்கள்.'' என்று கட்டளை போட்டிருந்தான்.

கட்டபொம்மன் ஒரு சமயம் தனது மனைவிக்கு பெரிய தங்க அட்டிகை பரிசளிக்க விரும்பி, சிறந்த பொற் கொல்லன் ஒருவனை அழைத்து ஆர்டர் கொடுத்தான். ராஜா விருப்பப்படியே பொற்கொல்லர் தங்க அட்டிகை தயாரிக்க ஒப்புக்கொண்டு சென்றார். அன்றிரவு திருச்செந் தூர் ஷண்முகன் கனவில் தோன்றினான்

''கட்டபொம்மா, என்னப்பா உன் மனைவிக்கு தங்க அட்டிகையா செய்ய சொன்னாய்?''
''ஆமாம் முருகா''
''ஓஹோ என் நினைவு வரவில்லையா உனக்கு?'     

தூக்கி வாரிப் போட்டது கட்டபொம்மனுக்கு
. காலை முதல் வேலையாக ஒரு குதிரை வீரனை அனுப்பி அந்த பொற்கொல்லனை திருப்பி அழைத்து வர செய்தான்.பயந்து போன பொற்கொல்லன் கை கைட்டி கட்டபொம்மன் முன் நின்றான்.

''உன்னிடம் நான் செய்ய சொன்ன தங்க அட்டிகை இன்னும் நன்றாக சீக்கிரமாக செய். தயாரானவுடன் அதை திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆறு முகனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். சீக்கிரம்''

கட்டபொம்மன் வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. பராபரியாக கேட்ட ஒரு சம்பவம் இது.   அவன் சரித்திரிரத்தை யார் எழுதி வைத்தார்கள்?

 கோலாகலமாக திருச்செந்தூரில் மாசிமகம் திருவிழா. தேர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலத் துக்கு தயார். முதலில் கட்டபொம்மன் வந்து வடம் பிடித்துக் கொடுத்த பின் நகரும். அது தான் வழக்கம். நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ராஜாவை காணோம். என்ன செய்வது. ஏதோ காரியமாக ராஜா வரவில்லை. தேரை நாமே இழுத்து விடலாம்''. பக்தர்கள் தேரை இழுத்தனர் ஆனால் ஏனோ தேர் நகரவில்லை. எவ்வளவு முயன்றும் ஹுஹும். தேர் நகரவில்லை. கட்ட பொம்மன் எங்கோ இருந்தவர் திருச்செந்தூர் வந்து கொண்டிருந்தார். அவர் வந்து ''ஷண்முகா..''' என்ற பெருங்கூச்சலுடன் தேர்வடத் தை பற்றி பிடித்து இழுத்தார். அட என்ன ஆச்சர்யம். பூனைக்குட்டி போல் பணிந்து தேர் நகர்ந்தது.

வெள்ளைக்காரன்  வியாபாரம் செய்கிறேன் பேர்வழி என்று  கையில் காலில் விழுந்து  இந்தியாவை ஆண்ட  முஸ்லீம் ராஜாக்கள் அரண்மனையில் இடம் பெற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக  படை சேர்த்து, அண்டை அசல்  ஊர்களில் உள்ள குறு நில மன்னர்கள்,  நவாப்பிகளை  விழுங்கி விட்டு, பீரங்கியை கொண்டு வந்து  மண்  கோட்டைகளை  இடித்து  இந்தியா முழுதும்  கொஞ்சம் கொஞ்சமாக  புற்று நோய் மாதிரி பரவி  நாட்டையே  ஆண்ட  மிருகங்கள்.  நமது கலாச்சாரத்தை முற்றிலும் மொட்டை அடித்தவர்கள். மனித நேயமின்றி  அவர்கள் கொன்ற  மா வீரர்கள் எத்தனையோ பேர்.  கைப்பற்றிய ஊர்களின் சிற்றரசர்கள்  கப்பம் கட்டவேண்டும், வரி கட்டவேண்டும் என்று வசூலித்தது,  கட்டமறுத்தவரை கொன்று அழித்து  நாட்டை அபகரித்தவர்கள்.

1798ல்  கட்டபொம்மா எங்கே நீ கட்டவேண்டிய வரி ?என்று கலெக்டர் ஜாக்சன் கடிதாசு அனுப்பி னான்.  ''வா என்னிடம் வந்து தைரியம் இருந்தால் கேள்''  என்று பதில் அனுப்பினான்  கட்ட பொம்மன். ஜாக்சன் வரவில்லை.  மூன்று மாதங்க ளுக்கு பிறகு  ராமநாதபுரம் அரண்மனை ராமலிங்கவிலாசத்தில் கட்டபொம்மன் ஜாக்சனை சந்தித்தான்.  அடிதடி, கோபம் தான் விளைந்தது.   ஜாக்சனின் தளபதி கிளார்க்  என்பவன்  கட்டபொம்மனை தாக்க  முயற்சித்து தலையை இழந்தான். 

கட்டபொம்மன் ஜாக்சன் அட்டகாசத்தை பற்றி சென்னை கோட்டையில் தலைவனான  ராபர்ட் கிளைவுக்கு  எழுதினான்.  இதை அப்படியே விட்டு விட  கட்டளையிட்டான்  கிளைவ்.  திருநெல்வேலி க்கு புது கலெக்டர் பானர்மேன்  நியமிக்கப் பட்டான். 
1799ல்  என்னை வந்து பார் என்று பானர்மேன்  உத்தரவிட்டான்.  கடிதத்தை தூர எறிந்தான் கட்டபொம்மன் பானர்மன்  தனது  சக்தியை காட்ட படை அனுப்பினான்.  பாஞ்சாலங்குறித்து கோட்டை நாலு பக்கமும் படை சூழ்ந்து கொண்டது.  யுத்தத்தை எதிர்பார்க்காத  கட்டபொம்மன் படை தயாராக வில்லை.  எப்படியோ கோட்டையிலிருந்து தப்பி விட்டான்.  புதுக்கோட்டை அருகே காட்டில் மறைந்தி ருந்தான்.  பானர்மேன் ஆட்கள் நாலாபக்கமும் செய்தி அனுப்பி  ஆளனுப்பி தேடினார்கள். புதுக்கோட்டை ராஜ  விஜய ரகுநாத தொண்டை மான் புதுக்கோட்டை காட்டில்  கட்டபொம்மன் பரிவாரம் மறைந்து இருக்கும் விஷயம் அனுப்பினான். பிடிபட்ட  கட்டபொம்மனை 16.10.1799 அன்று  காலை  கயத்தாற்றில்  புளியமரத்தில் கட்டபொம்மனை தூக்கிலிட்ட  போது  அவன் வயது 40.

எப்படியோ  வெள்ளைக்காரனிடமிருந்து விடுபட்டோம், கொள்ளைக்காரர்களிடமிருந்து எப்படி தப்புவது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...