பேசும் தெய்வம் J K SIVAN
ஆசார்யாளும் அரியக்குடியும். 1
மஹா பெரியவா ஆத்ம ஞானி மட்டுமா? சாஸ்த்ர சம்பிரதாய, சரித்திர ஞானி மட்டுமா? இல்லவே இல்லை, இதோடு கூட சிறந்த சங்கீத ஞானியும் கூட. சாதாரணமாக கற்றுக்கொள்ள ஏழு வருஷம் ஆகும் . வீணை வாசிப்பது கஷ்டம். மஹா பெரியவா அதில் சுலபமாக கீதங்கள் வாசித்தவர்.
தேவகோட்டையில் பிரபல சங்கீத வித்துவான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் மஹா பெரியவாளை தரிசித்த போது ஒரு அற்புத சம்பவம் நடந்ததே. சிலர் ஏற்கனவே இதை அறிந்திருக்கலாம். மீண்டும் நான் ஒருமுறை சொல்வதில் என்ன தப்பு? தெரியாதவர்களுக்கு இதை அடையச்செய்வதும் எனக்கு புண்யம் தானே!
ஜூன் 1961. பெரியவா தேவகோட்டையில் சில வாரங்கள் முகாம் போட்டிருந்தார். நகரத்தார்கள் பக்தி மிகுதவர்கள், சிறந்த தர்மிஷ்டர்கள், தான தர்மத்தில் முதல் ஸ்தானம் வகிப்பவர்கள். அந்த நேரம் மஹா பெரியவா மௌன விரதத்தில் இருந்தார்.
ஒரு நாள் காலை அருகே இருந்த ஊரான அரியக்குடியிலிருந்து சில நகரத்தார் பக்தர்கள் வந்தார்கள். அவர்கள் ஊர்க்காரரான அரியக்குடி என்று அழைக்கப்பட்ட ராமாநுஜய்யங்கார் பற்றி பெருமையாக அறிமுகம் செயது கொண்டார் கள். அவர் அப்போது அங்கே தான் அருகே காரைக்குடியில் இருப்பதாக சொன்னார்கள்.
இதைக்கேட்ட பெரியவாளுக்கு முகம் மலர்ந்தது.
''அரியக்குடியை அழைத்து வாருங்கள்''என்று ஜாடையில் சொன்னார் பெரியவா. விஷயமறிந்த அன்று மாலை மூன்று மணிக்கே அரியக்குடி ராமாநுஜய்யங்கார் தேவகோட்டைக்கு வந்து
விட்டார்.
பாகவதருக்கு ஆச்சர்யம். பெரியவா ''காஷ்ட மௌனத்தில் '' strict silence , விரதத்தில் இருக்கும்
போது, அழைத்திருக்கிறாரே!.
ஒரு சிறு வீட்டின் பின்புறம் கொல்லைப்பக்கம் கிணற்றருகே ஒரு சிறிய அறையில் இருந்தார் பெரியவா. அதன் சிறிய ஜன்னல் வழியாக தான் பக்தர்களுக்கு தரிசனம். குப்பை, சகதி, புதர்கள் மண்டிய இடம்.
''பெரியவா, அரியக்குடி ஐயங்கார் பாகவதர் வந்திருக்கார்'' என்று தொண்டர் ஒருவர் சொன்னார்
''ஜன்னல் கிட்டே அழைச்சுண்டு வா''.
ஜாடையில் உத்தரவு. ஜன்னலில் பார்த்து வணங்
கி வெளியே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் ஐயங்கார் . திடீரென்று பெரியவா காஷ்ட மௌனத்தை கலைத்து பேசத் துவங்கினார். அருகே இருந்த அனைவருக்கும் ஆச்சர்யம்.
"உனக்கு ராஷ்ட்ரபதி அவார்டு கொடுத்திருக் காளாமே. பேஷ் பேஷ். ராஜ் பவன் லே சிவப்பு கம்பளத்தில் நடந்தவன் நீ. பெரிய பெரிய ப்ரமுகாள், மனுஷாள், எல்லோரும் குவிந்து கைதட்டல் நடுவே கம்பீரமாக போனவன். உன்னை இந்த காட்டிலும் மேட்டிலும் குப்பையில், கல்லும் மண்ணும் புதரும் சூழ்ந்த இடத்தில் இந்த இருண்ட தொத்தல் அறைக்கு வெளியே நடக்க வைச்சுட்டேனே'' னு நினைச்ச மனசு கஷ்டமா இருக்கு. '.
''அதெல்லாம் ஒண்ணுமில்லே, எனது பாக்கியம் இங்கே உங்களை தரிசிச்சது''
''இங்கேதான் பக்கத்திலே காரைக்குடியிலே நீ இருக்கேன்னு சொன்னா. உடனே எனக்கு முத்து ஸ்வாமி தீக்ஷிதர் க்ரிதி '' ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே'' கேக்கணும்னு ஆசை வந்தது. எனக்கு அந்த காம்போதி ராக கீர்த்தனை ரொம்ப பிடிக்கும். இப்போ நீ இங்கே இருக்கும்போது நீ பாடி கேக்கணும் னு தோணித்து. சங்கீதம் சாஹித்யம் ரெண்டுமே அசாத்தியம் அந்த தீக்ஷிதர் க்ரிதியிலே. அக்ஷர சுத்தமா அதை லயிச்சு ராக தாள பாவத்தோடு (bhavaa ) பாடினா சுப்ரமணியன் எதிரே நிப்பான். நிறைய வித்வான்கள் சமஸ்க்ரித தெலுங்கு கீர்த்த னைகளை பாடறேன்னு சொல்லி சிதைச்சுடறா. அவா பாடாம இருந்திருக்க கூடாதான்னு எனக்குத் தோணும். சாஹித்ய சந்தஸ் அத்தியாவசியம். (தமிழில் சந்தம் என்போம்) .
''சில கீர்த்தனைகளை ராக தாளத்திற்காக பதம் பிரிச்சு பாடறது உண்டு. ஆனா அர்த்தம் அநர்த்த மாகி விடக்கூடாது.
''இந்த பாட்டையே எடுத்துக்கோயேன். அதுலே ''குருகுஹாயஞ்ஞான த்வாந்த ஸவித்ரே'' ன்னு வரும். இதை பிரிச்சுப் பாடும்போது '' குரு குஹாய அஞ்ஞான த்வாந்த ஸவித்ரே '' அப்படின்னா, ''அஞ்ஞானம் எனும் இருட்டுக்கு சூரியனாக இருப்பவன்'' ன்னு அர்த்தம். அதை பாடும்போது சிலர் ''குருகுஹாயா ஞான த்வாந்த ஸவித்ரே '' ன்னு அதாவது ' ஞானத்தை இருட்டடிக்கும் சூரியனே என்கிறமாதிரி அர்த்தம் தரும்படியாக பாடிடுவா.
''உனக்கு சுப்ப ராம சாஸ்திரி தெரியுமோ? அவருடைய சங்கராபரண ராக க்ரிதி ''சங்கராச்சார்யம்'' பழக்கமுண்டோ? இதை வீணை தனம்மா வகையறா, செம்மங்குடி சீனு, MS எல்லோரும் பாடுவா. அதுல ஒரு வரி வரும் '' பரமாத்வைத ஸ்தாபன லீலம் '' என்று. என்ன அர்த்தம்னா '' விளையாட்டு மாதிரி சுலபமா, ஹிந்து சனாதன தர்மத்தில் அத்வைத ஸித்தாந் தந்தை நிறுவிய பரமாத்மா ஆதிசங்கரர் ''. இதைப் ''பாடும்போது அத்வைதம் என்கிற வார்த்தையில் ''அ'' என்கிற இடத்திலே அழுத்தம் கொடுத்து பாடணும்... (பெரியவா தானே பாடிக் காட்டினார். அப்போதெல்லாம் அவர் குரல் கணீரென்று இருக்கும்) அப்போது தான் அதன் அர்த்தம் சப்தத்தில் த்வனிக்கும். எதிர்பார்த்த அர்த்தம் புரியும். ஜாக்கிரதையாக இது மாதிரி பாடினா, சங்கீதம் முறையா கத்துக்கலேன்னா கூட சரியான அர்த்தத்தை விளக்கி பாட முடியும். நான் சொன்னேனே அந்த வித்வான் களெல்லாம் அர்த்தம் புரிஞ்சுண்டு பாடறவா.''
அது இல்லாம அஜாக்கிரதையா பரமாஆஆ ... த்வைத ஸ்தாபன லீலம் '' னு பாடினா அத்வைதம் காணாம போயிடும். ஆதி சங்கரர் த்வைதம் ஸ்தாபனம் பண்ணார்னு காட்டும். பெரியவா தானே இந்த இடத்திலே சிரித்தார். மற்றவர்களும் இதை கேட்டு சிரித்தனர்.
''ஆனா ஒரு சந்தோஷம் இதிலே என்னன்னா, சங்கீதத்தில் அத்வைதம், த்வைதம் வித்யாசம் இல்லே ,அங்கே மக்கள் ரசிக்கிறது சங்கீதத்தின் இனிமையை . சங்கீதம் என்கிறது பாடற வித்வான் மனசை, அவன் பாடற சங்கீதத்துடன் இணைக்கணும். ரெண்டும் ஒன்றிப்போகணும். அதிலே சைவம் வைஷ்ணவம் த்வைதம் அத்வைதம் எல்லாம் கலக்காது. இல்லேனா நீ ஒரு வைஷ்ணவன், ''ஸ்ரீ சுப்ர மண்யாய நமஸ்தே'' அவ்வளவு நன்னா பாடுவியா? நான் தான் கேட்பேனா? நான் நீ பாடி கேட்டிருக்கேன். லயிச்சதுண்டு. உன் குரல் வளம் கேட்க வேண்டாம். உன் சாஹித்ய திறமை அதோடு கலந்து பரிமளிக்கிறது. பிசிறு இல்லை. சரியா இருக்கு. அதனாலே தான் நீ இங்கே தான் பக்கத்திலே காரைக்குடியில் இருக்கேன்னு கேள்விப் பட்டதும் அழைச்சுண்டு வரச் சொன் னேன்.''
அதிக நீளமாக பதிவிட்டால் படிப்பவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால் அரியக்குடியை அடுத்த பதிவில் மகா பெரியவா எதிரே '' ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே'' பாட விடுகிறேன்....
No comments:
Post a Comment