Wednesday, October 7, 2020

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம் J K SIVAN  

                               
                   கொஞ்சம் வாசிக்கட்டுமா?                                                   

பழைய  படங்களை பார்க்கும்போது  காந்தி வேகமாக நடப்பார்.  மஹா பெரியவாளும்  காந்திக்கு சளைத்தவர் இல்லை.   நாம்   எப்படி ''நடக்க ''  வேண்டும்   என்று நமக்கு  தானே  ''நடந்தும்''    ''அறிவுரை''  வழங்கியும்   அருளியவர்.    மஹா பெரியவா தேசமெங்கும் நிறைய  வேகமாகவே    நடந்தவர். 
ராமானுஜர் சங்கரர்  மத்வர், சைதன்யர்  வள்ளலார், விவேகானந்தர்   ஆகியோரும் இப்படித்தானே  இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகாலங்களுக்கு முன்பு நடந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் தெருக்களும்  விளக்குகளும்  கிடையாது. எங்குமே காடு, இருட்டு. இருட்டில்  இருந்து  நமக்கு ஒளியும் வழியும் காட்டி மீட்டவர்கள். 

மகா பெரியவா என்றாலே ஏதாவது ஒரு அதிசயம்  நமக்காக  காத்திருக்கும் அல்லவா?  யாரோ உண்மையான
 பக்தர்கள் வாழ்க்கையில்  எங்கோ  ஏதாவதோ  நிகழ்ந்து கொண்டே இருக்கும். இன்றும் நடந்து வருவதாக எத்தனையோ பேர்கள் சொல்கிறார்களே. 

ஒரு நண்பரிடம் இருந்து எனக்கு ஒரு பார்சல் வந்தது.   அவருக்கு  பிறந்த நாளாம் . என்னை நேரில் பார்த்து  ஆசிபெற  வழியில்லாமல்  வீட்டில் இருந்த பழைய  கால கிருஷ்ணன் படம் ஒன்றை  பரிசாக எனக்கு  கொடுத்து வணங்கி ஆசி பெற விருப்பம்  என  ஒரு சின்ன கடுதாசு உள்ளே இருந்தது.    ஜாக்கிரதையாக நிறைய  காகிதங்கள் சுற்றப்பட்டிருந்ததை பிரித்தேன்.   பிரேம்  FRAME   போட்ட   ஒரு  அழகிய ரவிவர்மா வரைந்த  கிருஷ்ணன் படம்.    சிரித்த கிருஷ்ணனை சுற்றியிருந்த பேப்பர்களில் ஒன்று  வழவழ  வென்று கனமான  காலண்டர் காகிதம். அதில் அழகாக கண்ணைப்பறித்த படி கருப்பு வெளுப்பில்,  மஹா பெரியவா  ஆசி அளித்தார்.     படத்தின் அடியில் கட்டம் கட்டி  சிறிய எழுத்தில் ஒரு சேதி:

'ஆஹா,  கிருஷ்ணா,   நீ  பலே ஆள்,  மாயாவி என்று அறிவேன். உன் மூலம் எனக்கு இன்று நான் என்ன எழுதவேண்டும் என்று  நீயே  தீர்மானித்துவிட்டாயா?  இல்லையென்றால் இன்று நீ அருமையான ராஜா ரவி வர்மா படமாக வருவானேன், அதோடு பெரியவா பற்றிய ஒரு அற்புத செய்தியும்  உன்னோடு  போனஸாக  BONUS ஆக +
வருவானேன்? 

மனம் சந்தோஷத்தால் நிரம்பியது. அந்த  பேப்பரில் இருந்த விஷயத்தை தான் இன்று வழக்கம்போல சுருக்கி  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மகாபெரியவா  மகாராஷ்டிராவில் உள்ள  சதாராவில் தங்கி இருந்த சமயம்.  ஒரு அரசமரத்தின் கீழ் இளைப்பாறிய அவர், மரத்தின் வேரில் தலையை வைத்துப் படுத்துக் கொள்வார். முன்னால் திரை போட்டிருக்கும்.   பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் சமயத்தில் மட்டும், திரையை விலக்குவார்கள்.

சென்னையில் இருந்து வீணை வித்வான் ஒருவர் பெரியவரைத் தரிசிக்க நண்பருடன் சதாரா  சென்று  பெரியவா  தரிசனம் செய்து  அவர் அனுமதியோடு  தனது  வீணையை எடுத்து வாசித்தார்.  அங்கிருந்த  பக்தர்கள்  எல்லோரும்   இசை மழையில் நனைந்து மகிழ்ந்தார்கள். வாசித்து முடித்ததும், வீணையை உறையில் இட தயாரானார் வித்வான்.


''அந்த வீணையை எங்கிட்ட கொடு. நான் அதை வாசிக்கலாம் இல்லையா?'' என  கேட்டார் பெரியவா. 
''அட,  பெரியவா வீணை வாசிக்கப் போகிறாரா'' என்று எல்லாருக்கும் திகைப்பு. வித்வான் உட்பட..! ஆனால், எதற்காக வாசிக்கப் போகிறார் என்பது மட்டும் யாருக்கும் புரியவில்லை.

வீணையைக் கையில் வாங்கிய பெரியவா சுருதி கூட்டி, வித்வானிடம் காட்டினார். "நான் சுருதி கூட்டியி ருப்பது சரியா இருக்கான்னு பாரு,'' என்றார்.

''சரியா இருக்கு பெரியவா''.    பெரியவா   வீணை வாசிக்க ஆரம்பித்து விட்டார்.  சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும்! வித்வான் பெரியவரின் பாதங்களில் விழுந்தார். கன்னத்தில் போட்டுக் கொண்டு, "

"பெரியவா! என்னை மன்னிக்கணும்! என்னை மன்னிக்கணும்! தப்பு பண்ணிட்டேன்! தப்பு பண்ணிட்டேன்,'' என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே கதறி அழ ஆரம்பித்து விட்டார்.

பெரியவர் வாசித்து முடித்தார்.  வீணையை அவரிடம் திருப்பிக்கொடுத்து, ""வித்யா கர்வம் ஒருவனுக்கு கூடாது. கவனமாக இரு'' என்று சொல்லி ஆசிர்வாதமும் செய்தார். வித்வானுடன் வந்த நண்பருக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

அப்புறம்  நண்பர் வித்வானிடம்," இங்கே என்ன நடந்தது? நீ எதற்கு ஏதோ  தப்பு பண்ணிட்டதா கதறி அழுதே! பெரியவர் வித்யாகர்வம் கூடாது என்றாரே, அப்படி என்ன தவறு நடந்தது?'' என்றார்.

வித்வான் திகைப்பு கலையாமல் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

"கைலாய மலையைத் தூக்க முயன்ற ராவணனின் கைகள் மலையின் அடியில் சிக்கிக் கொண்டன. அப்போது, அவன் சாமகானம் இசைத்து சிவனை மகிழ்வித்து விடுதலை பெற்றான் இல்லையா! அதுபோல, நானும் இங்கே சாமகானம் வாசிக்க துவங்கினேன். ஆனால், திடீரென எப்படி வாசிப்பது என்று மறந்து போய்விட்டது. இது யாருக்கு தெரியப்போகிறது என, ஏதோ ஒன்றை வாசித்து நிறைவு செய்து விட்டேன். பெரியவர் இதைக் கண்டுபிடித்து விட்டார். என்னிடம் வீணையை வாங்கி, அந்தப் பகுதியை சரியாக வாசித்து நிறைவு செய்து விட்டார். பெரியவர் ஸர்வக்ஞர் (எல்லாம் அறிந்தவர்). அவருக்கு எல்லாம் தெரியும் என்பது எனக்கு தெரியாமல் போச்சே! அபச்சாரம் பண்ணிட்டேனே! அதனால் தான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்,'' என்றார்.''

''நீ என்னடா வாசிக்கிறே தப்பு தகராறுமாக  என்று என்னிடம்  ஒன்றுமே  சொல்லவில்லை.   நீ வாசிக்கிறது  சரியில்லே தப்பு  என்று   எல்லோர் எதிரிலும்   குறுக்கிட வில்லை.  நான் கொஞ்சம் வாசித்து பார்க்கட்டுமா என்று எவ்வளவு பதவிசாக சொல்லி அற்புதமாக அந்த சாமகான ஸ்வரப்ரஸ்தாரம் செயது காட்டினார்'' என்று விம்மிக்கொண்டே  வித்துவான்  பதிலளித்தார்.  

அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ அய்யங்காருடன் ஸ்ரீ சுப்ரமண்யாய என்கிற  காம்போதி க்ரித்தியை    மஹா பெரியவா  அலசியதை அப்புறம் சொல்கிறேன்.

மகா பெரியவா  சாதாரண ஞானி அல்ல, சங்கீத ஞானி .  அவருக்கு  வீணை வாசிக்க தெரியும் என்பது நிறைய பேருக்கு தெரியாதே.  எண்ணற்ற  பிரபல சங்கீத வித்துவான்கள் அவருக்கு எதிரே அமர்ந்து பய பக்தியோடு பாடி இருக்கிறார்கள். வாத்தியங்கள் வாசித்திருக்கிறார்கள் . இது பற்றியும் சொல்ல உத்தேசம். 

பெரியவாளின் முன்னோர்களில் ஒருவர் வேங்கட மஹி -- 72 மேள கர்த்தா அமைப்பை நிறுவியவ சங்கீத வித்வான். ராகங்கள் தாளங்கள் பாவங்கள் பற்றி நிறைய பெரியவா பேசியிருக்கிறார். உதாரணமாக ஒரு தடவை செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் பெரியவா தரிசனத்தின் போது  முத்துஸ்வாமி தீக்ஷிதரின்
 ''மஹாலக்ஷ்மி'' என்கிற மாதவ மனோகரி ராக க்ரிதியை  பாடினார்.  ரசித்துக்கொண்டிருந்த பெரியவா அந்த பாட்டை  ''இன்னொரு தடவை பாடு '' என்று  பாடச் சொன்னார்.  அந்த க்ரிதி முடிகிற சமயம் தானும் அவரோடு அந்த க்ரிதியை சேர்ந்து  பாடினார். அப்புறம்  அந்த க்ரிதியின் அர்த்தத்தை அழகாக எடுத்துச் சொன்னார். அருகே இருந்து இதை   கேட்டவர்கள் பாக்கியசாலிகள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...